960.



மருவியகால் விசைத்தசையா; மரங்கண்மலர்ச்
                                சினைசலியா;
கருவரைவீ ழருவிகளுங் கான்யாறுங் கலித்தோடா;
பெருமுகிலின் குலங்கள் புடை பெயர்வொழியப்
                               புனல்சோரா;
இருவிசும்பி னிடைமுழங்கா; வெழுகடலு

                           
மிடைதுளும்பா. 35

     (இ-ள்.) வெளிப்படை. பொருந்திய காற்று விசையாக
அசையா; மரங்களின் மலர்பொருந்திய கிளைகள் அசையமாட்டா;
கரியமலையினின்றும் வீழ்கின்ற அருவிகளும் காட்டாறுகளும்
சத்தித்து ஓடமாட்டா; பெரிய முகிற்கூட்டங்கள் புடைபெயர்ச்சியை
ஒழிந்து மழை நீரைப் பெய்யமாட்டா; ஆகாயத்தினிடை முழக்கம்
செய்யமாட்டா; ஏழு கடல்களும் துளும்பமாட்டா.

     (வி-ரை.) மருவிய கால் - கட்புலப் படாமல் பொருந்திய
காற்று. வடக்கினின்றும் வந்து பொருந்திய என்றலுமாம். விசைத்து
அசையா - தமக்கியல்பாயுள்ள இயக்கத்தின் வேகத்தில் அசையா;
அசைதல் இயங்குதல். இது காற்றின் இயல்பு.

     மரங்கள் மலர்ச்சினை சலியா - இது காற்று விசையில்
அசையாத காரணத்தால் வருவது. மரங்களும் இசை வயப்பட்டுச்
சலியாது நின்றன என்றலுமாம். சலித்தல் - அசைதல்.
"சராசரங்களெல்லாம் தங்க" (939), "நிற்பனவும் (சரிப்பனவும்)
இசைமயமாய்" (961) என்றவை காண்க.

     வரைவீழ் அருவிகளும் கான்யாறும் கலித்து ஓடா -
வரையின்வீழ் அருவிகள் மேலிருந்து கீழ்நோக்கி வருதலால் மிக்க
வேகமாக வீழ்வன. "பள்ளந்தா ழுறுபுனலிற் கீழ்மே லாகப் பதைத்து"
என்பது திருவாசகம். மேனின்று கீழ் வீழ்வதனுடன் மலைக் கற்களின்
மோதுண்டு அவற்றினிடுக்குக்களில் வருதலாலும் இவை மிக்க ஓசை
செய்யும். இங்கு இசையின் காரணமாக இவையும் ஓசையின்றி
மெல்லென ஓடின என்பது. கலித்தல் - சத்தித்தல். நீரோட்டங்களும்
ஓசையின் காரணமாகச் சுரந்தோடுதலும் சுரவாமற் றாழ்த்தலும்
செய்வன என்பது இன்றும் காணத்தக்கது. கோயமுத்தூர் சில்லா
வெள்ளிமலைச் சாரலில் நீர் ஊற்றாகியோடும் பல சுனைகளுள்
கைதட்டிச் சுனை
என்பதொன்றுண்டு. இது கை தட்டி விளித்து
ஓசை செய்யின் அப்போது சிறிது அதிகமாக நீர்சுரக்கு
மியல்புடையது.

     முகில்கள் புடைபெயர். வொழிய - இசையின்
றன்மையாலும் முகில்களும் புடைபெயர்ச்சி ஒழிந்து என்க.
புடைபெயர்ச்சி
- ஓரிடத்தினின்றும் பிறிதோரிடம் பெயர்வதும், பல
இடங்களினின்றும் போந்து செறிந்து கூடுதலுமாகிய அசைவுகள்.
"வாயுமிகச் சலித்தெவையும் திரட்டும்" (சிவப்பிரகாசம் - 27)
"வண்கால் பரந்து சலித்துத் திரட்டும்" (உண்மை விளக்கம் - 9)
என்றபடி காற்றுச் சலித்தலினால் மேகங்கள் திரட்டப்படுவன. கால்
விசைத்தசையா என்றதனாலும் முகில்கள் புடைபெயர் வொழிந்தன
என்பதாம்.

     புனல் சோரா - மழைநீர் பெய்தல் இல்லை. சோர்தல் -
வீழ்தல் - பெய்தல்.

     விசும்பினிடை முழங்கா - முகில்கள் தம் சேர்க்கைகூர
உளவாக்கும் இடி முதலிய முழக்கங்களையும் ஆகாயத்திற்
செய்யாவாயின. முகில்கள் புடைபெயர் வொழியவே புனல்
சோர்தலும் அதுகாரணமாக மின்சாரம் கூர்தந்து வானிடை
முழங்குதலும் இலவாயின. இசையின் வசப்பட்ட முகில்களும்
அசைவற்று நின்றன என்பது.

     கடலும் இடைதுளும்பா - காற்று விசைத்தசையாமல்
நின்றதனால் கடலும் இசைவசப்பட்டுத் துளும்பாது அலையின்றி
நின்றது என்பது. 35