965.
|
வளத்தி
னீடும் பதியதன் கண்வரி
யுளர்த்து மைம்பா லுடையோர் முகத்தினுங்,
களத்தின் மீதுங், கயல்பாய் வயலயற்
குளத்து, நீளுங் குழையுடை நீலங்கள் 3 |
(இ-ள்.)
வளத்தில்...முகத்தினும் - வளத்தால் நீடும் அந்தப்
பதியில் வண்டுகள் குடைகின்ற கூந்தலினையுடைய பெண்களின்
முகத்திலும்; குழை உடை நீலங்கள் நீளும் -
குழையை
எட்டுகின்ற நீல மலர் போன்ற கண்கள் நீள்வன; களத்தின் மீதும் -
(அவர்களுடைய) கழுத்தின் மேலும்; குழை உடை நீலங்கள்
நீளும் - குழைவாகச் செய்யப்பட்ட நீலமணிகளையுடைய அணிகள்
விளங்குவன; கயல் பாய்....குளத்தும் - கயல் மீன்கள்
பாய்வதற்கிடமாகிய வயல்களின் பக்கத்துள்ள குளத்திலும்;
குழை
உடை நீலங்கள் நீளும் - குழைகளை உடைய நீலோற் பலங்கள்
நீண்டு படர்ந்து பூக்கும்.
(வி-ரை.)
முகத்தினும், களத்தின் மீதும், குளத்தும், குழை
உடை நீலங்கள் நீளும் என்று தனித்தனி கூட்டி முடித்துக்கொள்க.
வரி
உளர்த்தும்....முகத்தும்...நீளும் - வரி - வண்டுகள்.
உளர்த்துதல் - ஊதிக்குடைதல். ஐம்பால்
- முடி (உச்சியின்
முடித்தல்), குழல் (சுருட்டி முடித்தல்), தொங்கல் (முடிந்து தொங்க
விடுதல்), பளிச்சை (பின்னி விடுதல்), சுருள் (பின் சொருகுதலும் பல
வகையாகச் சுருட்டி முடிதலும்) என்ற ஐந்துவகையாகப் புனையப்
படுதலின் கூந்தலினை ஐம்பால் என வழங்குதல்
மரபு.1
முகத்தினும்
- முகத்தினும், குறித்த ஏனையிடங்களினும் என
உம்மை எண்ணும்மை. முகத்தில் குழை உடை நீலங்கள்
நீளுதலாவது முகத்தில் உள்ள கண்கள் காதளவு நீண்டிருத்தல்.
இங்குக் குழை - காதணியையும்,
நீலம் - நீலமலர போன்ற
கண்களையும் உணர்த்தின. காதளவும் நீண்டிருத்தலால் காதில்
அணிந்த குழையைக் கண்கள் எட்டுகின்றன. அதனால்
காதுகளேயன்றிக் கண்களும் குழையுடையன என்று
சொல்லத்தக்கனவாய் நீண்டன என்ற குறிப்புமாம். குழை உடை -
குழைகளை உடைக்கின்ற என்றுரைப்பாரு முண்டு.
களத்தின்
மீதும் - குழையுடைய நீலங்கள் நீளும் -
குழைவையுடைய வேலைப்பாடமைந்த நீல மணிகள் பொருந்திய
நீண்ட அணிகள் (அப்பெண்களின்) கழுத்தில் விளங்கின. இங்குக்
குழை - குழைவாகிய வடிவையும், நீலம்
- நீல மணிகளையும்,
களம் - கழுத்தையும் உணர்த்தி நின்றன. நீல மணிகளை
அழுத்திக்குழைந்து நீண்டு தொங்கும் சங்கிலிபோன்ற அணிகள்
கழுத்திலணியப் படுவது அந்நாளின் வழக்குப் போலும். களம்
-
நெற்களம் என்று கொண்டு நெற்களத்திலும் நீலங்கள் (கொடிகள்)
நீண்டு படரும் என்பர் இராமநாதச் செட்டியார்.
கயல்....குளத்தும்
குழை உடை நீலங்கள் நீளும் -
வயல்களினயலிற் குளங்கள் உள்ளன. அவ்வயல்களின் அயலிலுள்ள
குளங்களினுள் நீண்டு படர்ந்து நீலம் மலர்களைப் பூத்தன.
வயல்களினும் அயலிற் குளத்தினும் என்றுரைப்பினு மமையும்.
இங்குக் குழை - கொடியின் இலைகளையும், மலரின்
இதழ்களையும்;
நீலங்கள் - நீல மலர்களையும் அக்கொடிகளையும் உணர்த்தின.
நீளும் - படர்ந்து வளர்ந்து செழிக்கும்.
மேற் பாட்டிற்
பங்கயமாநிதியுடையோர் போன்று
தோன்றும் மள்ளர்கள் என்றது, வயல்கள் எல்லாம்செந்
நெல்லேயாகி விளையக்கண்டு, தாம் உணவின்றி வருந்தியும்,
இஃதடியேன் செய்த புண்ணியம் என்று மகிழ்ந்து, நெல்லறுத்துப்
பெறும் செந்நெற் கூலியெல்லாம் இறைவனை ஊட்டிய குறையா
நிதிபோன்ற வள்ளல் தாயனாரையும், இப்பாட்டில், முகத்தினும்
குழையுடை நீலங்கள் நீளும் என்றது, தாயனாரது அன்பின்
செயல்களையும், அவர் கொண்டுசென்ற பொருள்கள் கமரில்
வீழ்ந்ததனையும், அவர் தமது ஊட்டியை யரிந்ததனையும்,
இறைவனது திருக்கை அவர் கையைப் பிடிக்க ஊறு நீங்கியதனையும்
தம் கண்களாற் கண்ட மனைவியாரையும் குறிப்பாலுணர்த்துவது
சிந்திக்க.
நீடும்
குழை யடை - என்பதும் பாடம். 3
1இந்நாளில்
இது மாறி மற்றும் பல்வேறு வகைகளாகப்
புனையப்படுதலும், ஒரு வகையாலும் புனையப்படாமல் தூங்கவிடப்
படுதலும், குறுகத் தறித்துப் பரப்ப விடுதலும் ஆகிய வழக்குகள்
புகுந்து விட்டமையின் ஐம்பால் என்பது இடு குறியளவாய் ஒழிந்து
நின்றது.
|