966.



விண்ணவர்கண் மலர்மாரி மிடைந்துலக
                            மிசைவிளங்க,
எண்ணிலரு முனிவர்குழா மிருக்குமொழி
                            யெடுத்தேத்த,
அண்ணலார் குழற்கருவி யருகிசைத்தங்
                            குடன்செல்லப்,
புண்ணியனா ரெழுந்தருளிப் பொற்பொதுவி
                          னிடைப்புக்கார்.
  41

     (இ-ள்.) வெளிப்படை. தேவர்கள் பொழியும் கற்பகப் பூமழை
நெருங்கி உலகின்மேல் விளங்கவும், அளவில்லாத அருமுனிவர்
கூட்டங்கள் மறைமொழிகளாலே எடுத்துத் துதிக்கவும்,
பெருமையுடைய ஆனாயர் குழலிசையை வாசித்துப் பக்கத்தில்
உடன்செல்லவும், புண்ணியப் பொருளாயுள்ள சிவபெருமான்
அங்குநின்றும் எழுந்தருளிப் பொன்னம் பலத்தினிடைப்
புகுந்தருளினர்.

     (வி-ரை.) விண்ணவர்கண் மலர்மாரி - தேவர்கள்
பொழியும் பூமழை. மலர் - கற்பகமலர். இவ்வுலகில் தெய்வ
அற்புதங்கள் நிகழும்போது தேவர்கள் பூமழை பொழிவர். 398
முதலியவற்றுள் முன்னுரைத்தவை பார்க்க. தேவருலகத்தில்
இவ்வகைத் திருவருள் வெளிப்பாடான நிகழ்ச்சிகள்
நிகழ்தற்கிடமில்லையாதலின், அவர்கள் பூவுலகின் இவை நிகழக்
கண்டபோது இவ்வாறு பாராட்டிப் பூமழை பொழிவர்.

     இருக்குமொழி - வேதமந்திரங்கள். இருக்கு - இங்கு வேதப்
பொதுமை குறித்தது. இறைவன் றிருவாக்கில் இருக்கும்மொழி
என்பதும், என்றும்இருக்கும் நித்தியமாயின மொழி என்பதும்
குறிப்பு. மொழிகளால் ஏத்த என்க.

     அண்ணலார் - பெருமையுடையவர். உலகில் அவரது
பெருமை விளங்கிய இடமாதலின் இப்பெயராற் கூறினார்.

     குழற்கருவி இசைத்து அங்கு உடன்செல்ல - குழல்வாசனை
கேட்க, "நம்பால் அணைவாய்" என்று அருள்செய்யப்
பெற்றாராதலின், அவ் வாணையின்படியே அருகு குழல் இசைத்துச்
சென்றார். அன்றுபோலவே இன்றும் என்றும் குழல் வாசித்து ஐயரின்
அருகு ஆனாயர் எழுந்தருளி யிருக்கின்றார் என்க.

     "நான் மகிழ்ந்து பாடி அறவாநீ ஆடும் போதுன் னடியின்கீ
ழிருக்க" வேண்டும் என்று அம்மையார் தாம் வேண்டிக்கொண்டபடி
ஐயரது "எடுத்தருளும் சேவடிக்கீழ் என்றுமிருக் கின்றார்" என்ற
சரிதம் இங்கு நினைவு கூர்தற்பாலது. "இடையறாமற் கும்பிடும்
கொள்கை யீந்தார்" (489), "தம்முன் றொழுதிருக்கும் அழிவில்
வான்பதங் கொடுத்து" (548), "கணத்தின் முன்னாங்கோமுதற்
றலைமை பெற்றார்" (605), "என்வலத்தில் மாறிலாய் நிற்க" (829),
துணையடிகள் தொழுதிருக்க" (திருநாளை - 36), "நம் மன்னுலகு
பிரியாது வைகுவாய்" (திருக்குறிப்பு - 127), "அரனார் மகனா
ராயினார்" (சண் - புரா - 59) "சிவலோகத்திற் பழவடிமைப்
பாங்கருளி" (சாக் - புரா - 17), "என்றும் பிரியா
தேயிறைஞ்சியிருக்க" (சிறுத் - புரா - 87), "வன்றொண்ட ராலால
சுந்தர ராகித்தாம் வழுவாத, முன்னை நல்வினைத் தொழிற்றலை
நின்றனர்; முதற்சேரர் பெருமானு நன்மை சேர்கண நாதரா
யவர்செயு நயப்புறு தொழில்பூண்டார்" (வெள் - சருக் - 49),
"கமலினி யாருட னனிந்திதை யாராகி, மலைத் தனிப்பெரு மான்மகள்
கோயிலிற் றந்தொழில் வழிநின்றார்" (மேற்படி 50) முதலியவையும்
காண்க.

     புண்ணியனார் - புண்ணியங்களுக்கெல்லாம் பொருளாயும்,
பிறப்பிடமாயும், இருப்பிடமாயும், சேர்விடமாயும் உள்ளவர்.
சிவபெருமான். 40