974.



மும்மைப்புவ னங்களின் மிக்கதன் றேயம் மூதூர்
மெய்ம்மைப்பொரு ளாந்தமிழ் நூலின் விளங்கு
                                வாய்மைச்
செம்மைப்பொரு ளுந்தரு வார்திரு வால வாயில்
எம்மைப்பவந் தீர்ப்பவர் சங்க மிருந்த
                             தென்றால்.  7

     (இ-ள்.) அம்மூதூர் - அந்தப் பழய நகரம்; மெய்ம்மை ...
திருவாலவாயில் - உண்மைப் பொருள்கள்கண்ட தமிழ் நூல்களுள்
வாய்மை விளங்கும் செம்மைப் பொருளுந்தருவாராகிய இறைவனார்
எழுந்தருளிய திருவாலவாயில்; எம்மை ... என்றால் - எம்மைப்
பவம்போக்கி உய்யக்கொண்டருளும் அந்த இறைவனார்தாமே
தலைவராகச் சங்கம் வீற்றிருந்தசெய்தி நிகழ்தற்கிடமாயிருந்ததென்று
காண்போமாகில்; மும்மை ... அன்றே - மூன்று உலகங்களிலும்
அது மேலாக விளங்குவதல்லவா?

      (வி-ரை.) மும்மை ... அன்றே - மும்மைப்
புவனங்களாவன - மேல், நடு, கீழ் என்ற மூன்று புவனங்கள்.
சொர்க்க - மத்திய - பாதலம் என்பர். இவற்றுள் மேலே ஏழும்
கீழே ஏழும் ஆகப் பதினான்கு உலகங்கள் உள என்று கூறுவர்.
மிக்கது - மூவுலகங்களினும் மேன்மை பெற்றது. அன்றே -
உடன்பாட்டு உறுதிப் பெருள் குறித்தவினா. சங்கம் இருந்த
தென்றால் மிக்க தன்றே?
என்று கூட்டுக.

     மூதூர் - முதுமை ஊர் - மூதூர் என வந்தது. நாடு,
தொன்மைப் புகழ்பூண்டது
(968) என்றதற் கேற்ப, அதன்
தலைநகரமும் மூதூர் எனப்பட்டது. எல்லார்க்கு முன்னே தோன்றி
முளைத்த முழுமுதற் கடவுள் எழுந்தருளியுள்ள தலமாதலின் அந்தப்
பழமை பற்றியும் மூதூர் என்றார்.

     மெய்ம்மைப் பொருளாம் தமிழ் நூல் - "ஞாலமளந்த
மேன்மைத் தெய்வத் தமிழ்" (970) என்றவிடத் துறைத்தவை பார்க்க.
தமிழ்நூல்கள் மெய்ம்மைப் பொருள் இன்னது - பொய்ம்மைப்
பொருள் இன்னது எனக்காட்டி உலகத்தை நிலைப்படுத்துதலால்
இவ்வாறு கூறினார்.

     தமிழ் நூலில் விளங்கு வாய்மைச் செம்மைப் பொருள் -
அத்தமிழ் நூல்களுள்ளே சிறந்துவிளங்கும், முடிந்த உண்மையாகிய
செம்மைபெறும் பொருளைத் தருவதாய் விளங்குகின்ற பொருணூல்.
மெய்ம்மைப் பொருள்
என்றது பொருள் நிச்சயம் செய்த
நிலையினையும், அதனுள், வாய்மைச் செம்மைப் பொருள்
என்றது அவ்வாறு நிச்சயித்த பொருளை அனுபவ வகையால்
அடையும் யோக (முத்தி) நிலையினையும் குறித்தன.

     செம்மைப் பொருள் - செம்பொருள் என்ப. செம்மை -
முத்தி. "திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
திருநாவுக்கரையன்" (திருத்தொண்டத்தொகை) "செம்மைநல மறியாத
சிதடர்" (திருவாசகம் - அச்சோ - 9) முதலியவை காண்க.
இச்செம்மைப்பொருளின் அனுபவநிலை தமிழ்அகப்பொரு
ணூல்களாலுணர்த்தப்படும். திருக்கோவையாருரைப்பாயிரத்தாலும்
இறையனாரகப் பொருள் உரைப்பாயிரத்தாலும் இஃது இனிது
விளங்கும்.

     மெய்ம்மை.........பொருளுந் தருவார் - திருவாலவாயில்
இறைவர் தமிழ் நூலின் உண்மைத் தன்மையினை விளக்கினார்
என்பது இறையனாரகப் பொருளாலும், திருவிளையாடற் புராணம் -
சங்கத்தார் கலகந்தீர்த்தது முதலிய சரிதங்களாலும் அறியலாம்.
செம்மைப் பொருளும் தருவார்
என்றது அறிவனூற் பொருளும்
உலகியனூற் பொருளும் என்ற இரண்டனுள் பிறர் எவராலும்
உணர்த்துதற்கரிய ஆகமநூல் வழியினுதலிய ஞானயோக
நுண்பொருளாகிய அனுபவநிலை என்னும் முத்திப்பொருளைத்
தருதல். "தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானை"
(திருவம்மானை) என்ற திருவாசகம் காண்க.

     பொருளும் தருவார் - பொருளும் - தமிழ் நூல்களைத்
தருதலேயன்றி அவற்றுள் விளங்கும் வாய்மைச் செம்மைப்
பொருளும் என உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை.
சொல்லையும் தருவார், அச்சொல் நுதலிய பொருள்களாகிய
"பொன்னு மெய்ப்பொருளும்" "போகமும் வீடும்" ஆகியவற்றையும்
தருவார் என்பது, "போகா பவர்க்கதம்" என்பது ஆகமம்.
"கொங்குதேர் வாழ்க்கை" என்ற பாடலைப் பாடித் தந்ததுவும் இங்கு
நினைவு கூர்க. இக்கருத்துப் பற்றியே எம்மைப் பவந்தீர்ப்பவர்
என அவர் பொருள் தருதற்குக் காரணங் கூறினார். சங்கம்
என்றதனால் நூல்தருதலும், பவந்தீர்ப்பவர் என்றதனால்
செம்பொருள் தருதலும் கூறியவாறாயிற்று. பவம் பிறவிக்கேதுவாய
பசுத்துவம். "பவமின்றாம்" (சிவஞானபோதம் -12 - 4) என்றது
பார்க்க.

     பவந்தீர்ப்பவர் சங்கம் இருந்தது என்றால் -
சங்கமிருந்தது
-
சங்கத்தில் தலைவராக வீற்றிருந்த இடம்.
பவந்தீர்ப்பவர் எழுவாய். இருந்தது - இருந்தது -
இருத்தற்கிடமாகியது. சங்கமிருத்தல் - ஒரு சொல்.
பவந்தீர்ப்பவருடைய சங்கம் என்று ஆறாம் வேற்றுமைத்
தொகையாகக் கொண்டு அவரது சங்கம் இருந்தது
என்றுரைப்பினுமாம்.

     மெய்ம்மைப் பொருளாம் தமிழ்நூல் - "தெய்வத் தமிழ்"
(970), "சால்பாயமும்மைத் தமிழ்" (972) என்றவை காண்க.
தமிழ்நாட்டெல்லையுள் காணும் நாடுகள் பலவற்றுள்ளும்
பாண்டிநாடொன்றே தமிழ்நாடு எனப்படும். இறைவனாரும், அவர்தம்
திருமகனாரும், அவர்களிடம் தமிழுணர்ந்த அகத்தியரும்
சங்கமிருந்து தமிழ்வளர்த்தனர். அகத்தியர் இன்றும் பொதிகையில்
இருந்து தமிழ் பரப்புகின்றார் என்ப. ஆதலின், சோழநாடும்
காவிரியும் இணைபிரியாமல் எண்ணவருவனபோலப், பாண்டிநாடும்
தமிழும் இணைத்தே எண்ணவருவனவாம். இது பற்றியே ஆசிரியர்
தமிழொடு புணர்த்தியே நாடும் நகரும் சிறப்புக் கூறுவாராயினர்.
முன்னர் 968ல் உரைத்தவையும் பார்க்க. நமது பரம ஆசாரியர்கள்
ஆலவாயிறைவரைத் தமிழ்த்தலைவராகவே கண்டு வணங்கியதனை
ஆசிரியர் கண்டு காட்டியருளினர். இத்தகைய தமிழ்ப்பெருநாட்டினும்
இந்நாளின் தமிழ்வாசனை அருகிவரும் கொடிய காட்சி
வருந்தத்தக்கதாம்.

     செம்மைப் பொருளும் தருவார்என்ற இடத்தில்
தமிழ்நூல்களுள் வாய்மை பெரிதும் காணப்படினும் பிற்காலத்து
நூல்களுள் வாய்மையின் மாறுபட்டவை காணப்படுவன என்றும்,
இங்குப் பொருளும் என்றதனை இறையனார் அகப்பொருள்
குறித்ததெனக் கொள்ளுதல் சரிதத்துணைபெறாத பிற்காலவழக்கு
என்றும், இறையனார் என்பார் அப்பெயர் கொண்டதொரு புலவரே
யென்றும் சிலர் ஆராய்ச்சியுரை காண்பர்.

     தமிழ்நூலுள் வாய்மை விளங்கும் என்றதேயன்றி வேறு
நூல்கள் தமிழில் இல்லை என்று இப்பாட்டிற் கூறப்படவில்லை.
நமது பரம ஆசாரியன்மார்களால் மறுக்கப்பட்ட சமண சாக்கிய
முதலிய புறச் சமய நூல்கள் பலவும் தமிழில் தானே இருந்தன.
"வாயி ருந்தமி ழேபடித் தாளுறா ஆயிரஞ்சமண்" என்றதனால்
வாய்மை தேறாமலும் சிவனுக்கு ஆட்படாமலும் கழிந்த தமிழரும்
உண்டாயிருந்தனரன்றே! இங்கு ஆசிரியர் கருதியது தமிழ்
நூல்களுள் வாய்மை விளங்குவது என்ற மட்டிலே அமைவதாம்.

     தமிழ்நூலின் பொருளும் தருவார் என்றதற்கு
அகப்பொருணூல் தந்ததனை உட்குறித்து வைத்து ஆசிரியர் கூறினர்
என்பது, "திருந்தியநூற் சங்கத்தில் அன்றிருந்து தமிழாராய்ந்
தருளியவங் கணர்கோயில்" (திருநா - புரா- 403), "தலைச்சங்கப்
புலவனார்" (திருஞான - புரா - 667), "நூலின்கட் பொருள்பாடி
நூலறிவார்க் கீந்தானை" (திருஞான - புரா - 883), "திருவால
வாயமர்ந்த செஞ்சுடரைச், செழும் பொருணூல், தருவானை"
(திருநா - புரா - 406) என்றவற்றால் இனிது விளங்கும்.
மேற்கூறியவாற்றால் இறையனார் என்பாரை வெறும் புலவராகவன்றிக்
கடவுளாகவே ஆசிரியர் கருதினர் என்பதும் விளங்கும். ஆசிரியரது
தெய்வத் திருவாக்குக்கு மாறுபட்ட ஆராய்ச்சிகள் உண்மைக்கு
மாறுபட்டவை யாமென்பது அறிவோர் துணிபு. 7