975.



அப்பொற்பதி வாழ்வணி கர்குலத் தான்ற தொன்மைச்
செப்பத்தகு சீர்க்குடி செய்தவஞ் செய்ய வந்தார்
எப்பற்றினை யும்மறுத் தேறுகைத் தேறு வார்தாள்
மெய்ப்பற்றெனப் பற்றி விடாத விருப்பின் மிக்கார்,
 8

     975. (இ-ள்.) வெளிப்படை. அந்த அழகிய நகரத்தில்
வாழ்கின்ற வணிகர் குலத்தில் மிக்க நிறைவுபட்ட பழமையாகிய
யாவராலும் உயர்வாக எடுத்துச் சொல்லத்தக்க சிறப்புடைய
குடியுள்ளார் செய்ததவத்தின் பயனாக அவதரித்தார்; (அவர்
யாரென்னில்) எல்லாப்பற்றுக்களையும் முற்றும் அறுத்து,
விடையினை

     975. (வி-ரை.) அப்பொற்பதி - அ - முன்னர் "மும்மைப்
புவனங்களின் மிக்கது" (974) என்றும், "பங்கய மாகவத் தோட்டின்
மேலாள் தாழ்வின்றி யென்றும் தனி வாழ்வது" (971) என்றும்
உரைக்கப்பட்ட அந்த என்க. அகரம் முன்னறிசுட்டு பொற்பதி -
பொன்
- அழகு குறித்தது. திருமகள் வாழும் நகரம் என்றலுமாம்
பொன் வேய்ந்த சிகரங்களையுடைய என்றலுமொன்று.

     வணிகர் குலம் - சீர்க்குடி - குலம் பெரும்பிரிவும், குடி
அதனுட்சிறு பிரிவும் குறித்தன. இங்குச் சீர்க்குடி என்பது வணிகர்
மூவகையுட் பெருங்குடி குறித்தது போலும். ஆன்ற தொன்மை
என்றதற்கு வேதம் முதலிய அறநூல்களுள்ளே தொன்று தொட்டு
நாற்குலம் என்று வழங்கும் பழமையுடைய என்பர்.

     செய்தவம் செய்ய வந்தார் - சீர்க்குடியானது தான்
செய்யத்தக்க தவத்தினைச் செய்ததனாலே - செய்த காரணத்தினாலே
- அதனில் வந்தவதரித்தார். குடி - குடியில் முந்தையோர்.
ஆகுபெயர். "அளவில் செய் தவத்தினாலே" (662) என்றதும்,
அவ்வாறு கூறும் பிறவும் காண்க. செய்ய - செய்வதன்பொருட்டு
என்று கொண்டு, செய்யத்தக்க தவமாகிய சைவ தவத்தினைச்
செய்வதற்காக வந்தார் என்றுரைத்தலுமாம். "தவஞ்செய்த, நற்சார்பில்
வந்துதித்து" (சிவஞானம் - 8 - 1) என்றதற்கு மீளத் தவஞ்
செய்தற்குரிய உயர்ந்தகுலத்தின்கண் வந்துதோன்றி என்று எமது
மாதவச் சிவஞானயோகிகள் உரைத்ததனை ஈண்டுச் சிந்திக்க.
எப்பற்றினையும் - யான் - எனது என்னும் அகப்பற்று
புறப்பற்றுக்களுள் அடங்கிய எல்லாவகைப் பற்றுக்களையும். உம்மை
முற்றும்மை. மண் - பெண் - பொன் என்ற மூவகைப் பற்றுக்களும்
அவைபோன்ற உலகப்பற்றுக்கள் யாவும் இவற்றுள் அடங்கும். மண்,
பொன் ஆகிய பற்றுக்களை அறுத்ததனை 1008 - 1013
பாட்டுக்களிலும், பெண் ஆகிய பற்று அறுத்ததனை 1014-லும்
கூறியது காண்க. அறுத்து - தம்மைப் பற்றாதபடி நீக்கி. இவை
உயிரோடு பற்றிக்கட்டுவன ஆதலின் அந்தக் கட்டினை அறுத்து
என்றார். உருவகம். வலிமை பற்றிப் பெண்ணை வேறு பிரித்துக்
கூறினார்.

     தாள் மெய்ப்பற்று எனப்பற்றி - என்றதனால் முன்
சொல்லிய ஏனை எப்பற்றும் பொய்ப்பற்றாமென்பது. அவற்றை
அறுத்ததற்கும் இதனைப் பற்றுதற்கும் காரணம் கூறியவாறு.
"பொன்னு மெய்ப் பொருளும்" என்ற குறிப்புப்போலக் காண்க.
"பொன்னும் மெய்ப்பொருளும்" = செல்வமும் கல்வியும்;
"போகமுந்திருவும்" = புத்தியும் முத்தியும்; முன்னைய இரண்டும்
சாதனங்கள்; பின்னையசாத்தியங்கள். "கேடில் விழுச்செல்வங்
கல்வி" "மெய்ப்பொருள் கல்வி" என்பன காண்க. திரு - "மோட்ச
சாம்ராஜ்ய லக்ஷ்மி" என்பர் வடநூலார். "பேய்த்தேர் நீரென்று
வரும் பேதைக்கு மற்றணைந்த, பேய்த்தே ரசத்தாகும்
பெற்றிமையின்" (7 - 2) என்றும் "பன்னிறத்துப், பொய்ப்புலனை
வேறுணர்ந்து பொய் பொய்யா மெய்கண்டான், மெய்ப்பொருட்குத்
தைவமாம் வேறு" (8 - 3) என்றும் வரும் சிவஞானபோத உதாரண
வெண்பாக்களா லுணர்த்தப்படும் உண்மைகளை இங்கு வைத்துக்
காண்க. இவ்வாறுணர்ந்து பற்றியதனாலே பதங்கள் எல்லாம்.
பெருமா னடித்தாமரையல்லதில்லாது அன்பு மூளப்பெற்றார் என
மேல்வரும் பாட்டில் இக்கருத்தைத் தொடர்ந்து கூறியதும் காண்க.
"பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப், "பற்றுக பற்று விடற்கு"
என்ற திருக்குறளும், "மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப் பாத
மேமனம் பாவித்தேன்" (நம்பிகள் - தேவாரம்) "பற்றை யெறியும்
பற்றுவரச் சார்பா யுள்ள" (சண்டீசர் - புரா - 11) "பற்றையறுப்பதோர்
பற்றினைப் பற்றிலப, பற்றை யறுப்பரென் றுந்தீபற" (உந்தி - 25),
"பற்றினுட் பற்றைத் துடைப்பதொரு பற்றறிந்து, பற்றிப் பரிந்திருந்து
பார்க்கின்ற - பற்றதனைப், பற்றுவிடி லந்நிலையே தானே பரமாகும்"
(களிற்றுப்படி - 30) என்ற கருத்துக்களும் சிந்திக்கத்தக்கன.
அறுபான்மும்மை உண்மை நாயன்மார்களுள் துறவுநிலைபூண்டு
சிவனையடைந்த இருவரில் மூர்த்தியார் ஒருவராதலின் அவரது
துறவுக்குக் காரணமாகிய உள்ள நிலையை இவ்வாறு முதலிற்
கூறினார்.

     விடாத விருப்பின் மிக்கார் - விடாத - எஞ்ஞான்றும்
பிறழாத. விருப்பின் மீகுதல் - ஆசை மேன் மேல் அதிகரித்தல்.
இவ்வியல்புகளே இச்சரித விளைவுக்குக் காரணமாயின என்பதனை
983 - 987 பாட்டுக்களிற் கண்டு கொள்க. "விடாத அன்புடனென்றும்
விருப்பால்" (அதிபத்தர் - புரா. 11) என்ற கருத்தும் காண்க.