976


.
நாளும்பெருங் காதன யப்புறும் வேட்கை யாலே
கேளுந்துணை யும்முதற் கேடில் பதங்க ளெல்லாம்
ஆளும்பெரு மானடித் தாமரை யல்ல தில்லார்,
மூளும்பெருகன்பெனு மூர்த்தியார்
                         மூர்த்தி யார்தாம்.  9

     976. (இ-ள்.) வெளிப்படை. நாடோறும் பெரிய காதல்
கூர்ந்து பொருந்த வரும் ஆசைபெருகி வேட்கையாகி
விளைந்ததனாலே சுற்றமும் துணையும் முதலாகிய கெடுதலில்லாத
பதங்கள் எல்லாம் ஆளும் பெருமானாகிய சிவனது திருவடித்
தாமரைகளேயல்லாது வேறில்லாதவர்; மூண்டு பெருகும் அன்பு
என்றதனையே தமது உருவமாகக்கொண்டவர்; அவர்தாம்
மூர்த்தியார்
என்ற பெயர் பூண்டவர்.

     976. (வி-ரை.) பெருங்காதல் நயப்பு உறும் வேட்கை -
விடாத விருப்பின் மிகுதி பெருங்காதலாக உருப்பட்டது; அது
முறுகவே, நயப்பு என்னும் ஆசையாகியது; அது மேலிட
வேட்கையாக விளைந்தது என்க. மனத்துள் அன்பு பெருகிப்
படிப்படியாக வளர்ந்து கூர்தரும் வகையினைக் கூறியபடி. 751
பார்க்க.

     கேளும்......இல்லார் - கேள் - உயிர்ச்சார்பு. துணை -
உயிர்ச்சார்பும் பொருட்சார்பும். கேடில் பதங்கள் -
பதமுத்திப்போகங்கள். ஏனையவற்றை நோக்க இவை காலத்தால்
நீடித்தனவாதலின் கேடில் என்றுபசரித்தார். இப்பொருளைச்
சிங்கமுகாசுரன் எடுத்துச் சூரபதுமனுக்கு இனிது விளக்குகின்ற திறம்
கந்தபுராணத்தினுட் கூறப்பட்டது காண்க. "அழிவில் மெய்வரம்
பெற்றன மென்றனையதற்கு, மொழி தரும்பொருள் கேண்மதி
முச்சகந் தன்னுட், கெழிய மன்னுயிர் போற்சில வைகலிற்கெடாது,
கழிபெ ரும்பக லிருந்திடும் பான்மையேகண்டாய் (சூரனமைச்சியல் -
139). இறைவன் றாளிற் பெறும் அபரமுத்திப் பெரும் போகமொன்றே
என்றும் அழியாததாகும் என்பது உண்மை நூல்களின் துணிபு.
அல்லது இல்லார்
- உறுதிப் பொருள் தர எதிர்மறை முகத்தாற்
கூறினார். 934 முதலியவை பார்க்க. "ஈச னேநீ யல்ல தில்லை யிங்கு
மங்கு மென்பதும்" என்ற திருவாசகம் காண்க. கேளும் துணையும்
என்றவற்றால் ஆன்மாக்கள் இம்மையில் தமக்குப் பற்றுக் கோடாக
எண்ணிக்கொள்வனவும், கேடில் பதங்கள் என்றதனால் மறுமையிற்
பற்றுக் கோடாகக் கொள்வனவும் குறிக்கப்பட்டன. இம்மைத்துணை
முதல் மறுமைப்பயன் வரையுள்ள எல்லாம் என்பது. "நெறியது
வகையு மேலொடு கீழடங்க வெறும்பொயென நினைந்திருக்க"
என்பது சித்தியார். துணை - "துணையென்று நான்றொழப்
பட்டவொண் சுடரை" (கழுமலம் தக்கேசி - 3) என்ற நம்பிகள்
தேவாரங்காண்க.

     ஆளும் பெருமான் - "அம்மையி னுந்துணை யஞ்செ
ழுத்துமே" (காந் - பஞ்ச. பஞ்சாக்கரப் பதிகம் - 6) என்று
ஆளுடையபிள்ளையார் அருளியபடி உயிர்களுக்குப் பந்தமும் வீடும்
தந்து ஆட்கொள்ளும் சிவபெருமான் என்பதாம். "இம்மை வானவர்
செல்வம் விளைத்திடும்; அம்மை யேற்பிற வித்துயிர் நீத்திடும்;
எம்மையாளு மிடைமரு தன்கழல், செம்மை யேதொழு வார்வினை
சிந்துமே" (குறுந் - திருவிடை 4) என்ற அப்பர்சுவாமிகள்
தேவாரமுஞ் சிந்திக்க.

     மூளும் பெருகு அன்பு என்னும் மூர்த்தியார் - அன்பு
மூண்டு பெருகிய அதுவே உருவாகி நின்ற என்பது. மூர்த்தி -
உடல் - திருமேனி (வடிவம் என்பர்). மூர்த்திக்குள் இருந்து அதனை
இயக்குபவர் மூர்த்திமான். ஆசனம் - மூர்த்தி- மூர்த்திமான் என்ற
ஆகம பூசை முறையும் காண்க. மூர்த்தம் என்பதும் இது.
மூர்த்தியார் மூர்த்தியை உடையவர்.

     மூர்த்தியார் தாம் மூர்த்தியார்- என்க. மூர்த்தியார்
பின்வந்தது பெயர். இவ்வாறு அடுக்கி மொழிந்து சிறப்பிப்பது
ஆசிரியரது மரபு - 932 முதலியவை பார்க்க. 9