978.



கானக்கடி சூழ்வடு கக்கரு நாடர் காவன்
மானப்படை மன்னன் வலிந்து நிலங்கொள் வானாய்
யானைக்குதி ரைக்கரு விப்படை வீரர் திண்டேர்
சேனைக்கட லுங்கொடு தென்றிசை நோக்கி
                                 வந்தான். 11

     978. (இ-ள்.) வெளிப்படை. காடாகிய அரணையுடைய
வடுகக் கருநாடர்களின் காவல் பொருந்திய பெரிய சேனையுடைய
அரசன், சேனைப்பலத்தினால் வலிமை செய்து நிலத்தைக்
கைப்பற்றுவானாகி, யானைகளும் குதிரைகளும் வீரர்களும்
திண்ணிய தேர்களும் கொண்ட கடல்போன்ற சேனையைச்
செலுத்திக் கொண்டு தென்றிசை நோக்கி வந்தான் 11

     978. (வி-ரை.) கானக்கடிசூழ்வடுகக்கருநாடர் - கானக்கடி -
காடாகிய அரண். அரணாவன - "மணிநீரு மண்ணு மலையு
மணிநிழற், காடு முடைய தரண்" என்ற திருக்குறளாலறிக. கடி -
காவல். இது உயர்வு, அகலம், திண்மை, அருமை என்ற
அரணிலக்கணம் நான்கினையும் குறித்தது. வடுகு - ஒருமொழி.
மொழியின் பெயர் அம்மொழி வழங்கும் நாட்டுக்குப் பெயராய்
வந்தது. ஆகுபெயர். இந்நாடு செந்தமிழ் நாட்டுக்கு
வடக்கெல்லையாயுள்ள தொருநாடு. வடுகு என்ற பெயர் அதில்
வாழும் மக்களுக்கும் வரும். "வடதிசை மருங்கின் வடுகு வரம்பாக"
(பொ - 250) என்ற தொல்காப்பிய உரைகாண்க. நன்னூல் விருத்தி
- (பொது - 20) "வல்லொற்று வரினே யிடத்தொகை யாகும்"
என்றதற்கு "வடுகக்கண்ணன்" என்று தாரணங்காட்டி, வடுகநாட்டிற்
பிறந்த கண்ணன் என விவரித்துரைத்தமை காண்க.

     கருநாடர் - கன்னடநாட்டினர். "கொடுங்கருநாடரும்"
(சிலப் - 25 -156) முதலியவை காண்க. இதுவும் ஒருமொழியின்
பெயராய் வழங்கப்படும். கருநடம் என்பது மருவிக் கன்னடம் என
வழங்குவதாமென்பர். கருநிறங்கொண்ட களிமண் பரப்புடைய
நிலத்தன்மைபற்றி இந்நாட்டுக்குக் கருநாடு எனப் பெயர்
வந்ததென்பது மொழியாராய்ச்சியாளர் கூற்று. இதனால் அந்நாடு
தமிழ் வழங்கிய நாடாயிருந்ததென்றும், அம்மொழியும் தமிழினின்றும்
போந்ததென்றும் கருத இடமுண்டு. கன்னாடு என்பது
பரதகண்டத்தின் 56 தேயங்களுள் ஒன்றாக வைத்தெண்ணப்படுவதும்
காண்க. வடுகக் கருநாடர் - வடுகர் குடியேறி நிறைந்த கன்னட
நாட்டின் பகுதியைக் குறித்தது போலும்.

     கானக் கடிசூழ் - இயல்பாகிய செறிந்தகாடே அரணாக
(காவலாக) அமைந்து சூழ்ந்த. பகைவர்கள் தனது நாட்டினுட்
புகாதபடி அரண்களின் காவல்பெற்ற காதலின் இந்நாட்டு மன்னவன்
தன்னாடுவிட்டுத் தென்னாடுநோக்கிப் படைகொடு வந்தான் என்பது
குறிக்க இத்தன்மையாற் கூறினார்.

     கருநாடர் மன்னன் வலிந்து நிலம் கொள்வானாய் -
வடநாட்டினின்றும் இவ்வடுகர் பற்பல காலங்களில் தென்றிசை
போந்து தமிழ்நாட்டினுக்குள்ளே படையெடுத்துவந்து பல
இடங்களையும் வலிமை செய்து கைப்பற்றினர் என்பது தேச
சரித்திரங்களாலறியப்படும். அங்ஙனம் வந்த கருநாடர் மன்னன்
அறத்தின் வழியே போர் செய்யாது, வெறும் மண்ணாசையாலே
தூண்டப்பட்டு நீதியற்ற போர்செய்து, வழப்பறிசெய்யும் கள்வர்போல
நிலத்தை வலியப்பற்றினான் என்பது குறிப்பு. இவ்வடுகர் தாம்
வலிமை செய்து நிலங்கவர்ந்ததுபோலவே சில நாளில்
இவர்களுடைய அரசும் வீழ்ந்தது. வீழ்ந்தபின்னரும் இவர்கள் தமது
நாடு செல்லாது தமிழ்நாட்டிற் பல பக்கங்களிலும் சிதறுண்டு பரவிப்
போந்திருந்தனர். சிலர் சீவனவழியின்றி யலைந்தும் அலைத்தும்
போந்தனர். மற்றும் சிலர் வேறு வகைகளில் இந்நாட்டுக்
குடிமக்களுட் கலந்து நிலம் பகிர்ந்துகொண்டு இந்நாட்டு மக்கள்
போல் ஊன்றி வாழலாயினர். கருமண் ணிலப்பரப்பு தமது கருநாடு
போல்வ தாகையால் இத்தென்னாட்டிலும் கருநிறமுடைய களிமண்
கண்ட இடங்களில் எங்கும் இவர்களும் தங்கி வாழ்ந்தனர். ஆதலின்
களிமண் உள்ள இடந்தோறும் இவர் வழிவந்தோரை நமது நாட்டில்
எங்கும் காணலாம் என்பது தேச சரித்திரத்தால் அறியப்படும்.
"கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர் விரவலாமை சொல்லித், திடுகு
மொட்டெனக் குத்திக் கூறைகொண் டாறலைக்குமிடம்" (முருகன்
பூண்டி - பழம்பஞ் -1) என்ற ஆளுடைய நம்பிகள் தேவாரத்தாலும்
இந்நாட்டுச் சரித்திரம் ஒருவாறு புலப்படுகின்றது. திருமுருகன்
பூண்டிப் பிரதேசத்தில் கருநாடும் வடுகரின் வாழ்தலும் காணத்
தக்கன. வலிந்து நிலம் கொள்ளும் ஆசையே இந்நாளினும்
உலகமுழுமையும் அலைக்கும் பெரும்போர்கள் நாகரிக மிகுந்தோர்
என்று தம்மைத்தாம் புகழ்ந்துகொள்ளும் மேனாட்டாரிடை
நடைபெறுதற்குக் காரணமாயிருப்பதும் இங்குக் கருதுக. இதுபற்றியே,
"ஆசைக்கொ ரளவில்லை யகிலமெல் லாங்கட்டி யாளினுங்
கடன்மீதிலே யாணை செல வேநினைவர்" என்றனர் தாயுமானார்.

     கருவிப்படை - கத்தி, வில், வேல், வாள் முதலியனவாக
அந்நாளிற் பயின்ற படைக்கலங்கள். வீரர் - இவற்றைத் தரித்துப்
போர்செய்யும் காலாட்படை.

     சேனைக்கடல் - சேனையின் மிகுதியும் பரப்பும் நோக்கிக்
கடல் என்று உருவகம் செய்தார். உவமையை உள்ளீடாகக்
கொண்ட உருவகம்.

     தென்றிசை நோக்கி என்றதனால் வடுகக் கருநாடு
தமிழ்நாட்டுக்கு வடக்கெல்லையாயுள்ளது என்பது குறிக்கப்பட்டது.
தென்திசை - அதில் உள்ள தமிழ்நாடு குறித்தது.

     திரண்ட சேனை - என்பதும் பாடம்.           11