979.
|
வந்துற்றபெ
ரும்படை மண்புதை யப்ப ரப்பிச்,
சந்தப்பொதி யிற்றமிழ் நாடுடை மன்னன் வீரஞ்
சிந்தச்செரு வென்று, தன் னாணை செலுத்து மாற்றாற்
கந்தப்பொழில் சூழ்மது ராபுரி காவல்
கொண்டான்.
12 |
(இ-ள்.)
வெளிப்படை. வந்து சேர்ந்த பெரும்படையினைத்
தரை தெரியக்கூடாதபடி எங்கும் பரவச் செய்து சந்தனச்சோலைகள்
சூழ்ந்த பொதியமலையினையுடைய தமிழ்நாட்டை ஆளும் பாண்டிய
மன்னனது வீரம் சிந்தும்படி போரில் வெற்றிகொண்டு தனது
ஆணையைச் செலுத்துகின்ற வழியாலே மணம்பொருந்திய
சோலைகள் சூழ்ந்த மதுரைமாநகரத்தைத் தனது
தலைநகராகக்
கொண்டு காவல் செய்வானாயினான்.
(வி-ரை.)
மண்புதையப் பரப்பி போர்க்களம் முழுதும்
நெருங்க அணிவகுத்து. மண்புதைய - சேனைப்பரப்பின் கீழே
மண்ணின் இடைவெளி தெரியாது மறைய. மண் இவன் காவலின்கீழ்
விளக்கமில்லாது மறைய எனவும், மண்ணிற் புதைய எனவும் பிறிது
பொருள்களும்பட நிற்பது காண்க. இவ்வாறு பரப்பி வென்றதன்பின்
இவனது காவலில், இவன் கருநாடன் ஆதலின்,
இச்செம்மை
நாட்டுக்குரிய சைவச்சிறப்பும், தெய்வச்சிறப்பும் இவன் வடுக
மன்னனாதலின், செம்மொழியாகிய தமிழ்ச்சிறப்பும் மறைந்து நின்றன
எனப் பின்சரிதக் குறிப்புமாம். இனி, இவன் விரைவில் இறந்து
மண்ணா யொழிதலும், இவன் படை மறைந்தொழிதலும் சரிதத்துட்
காண்க.
பரப்பி - வீரம்
சிந்தச் - செருவென்று - காவல் கொண்டான்
என்று முடிக்க.
சந்தப்பொதியில்
தமிழ்நாடு - சந்தம் - சந்தனம். பொதிய
மலைக்குச் சந்தனம் உரியது. பொதியில் -
பொதிகை. பாண்டிய
நாட்டுக்குரிய மலை. "கும்பமுனிபயிலும் தென்பொதிய மலைகாண்
மற்றெங்கள்மலை " என்ற மீனாட்சியம்மை குறமும், பிறவும் காண்க.
சந்தனமும் பொதிகையும் தமிழும் இணைபிரியாது சொல்லப்
பெறுவன. "தமிழ் மாருதம்", "சந்தனப் பொதியிற் செந்தமிழ்
முனிவன்" முதலியவை காண்க.
தமிழ்
நாடுடை மன்னன் - பாண்டியன். தமிழ் நாடு
-
பாண்டியநாடு. வடுகக் கருநாடர் காவன் மன்னன் (978),
தமிழ்நாடுடை மன்னன் என்றன மொழி வழங்கும் வகையால் நாடு
பிரிவுபடுவதும் ஆளப்படுவதும் உரியதாம் என்ற குறிப்புப்போலும்.
வீரம்
சிந்த - வீரம் சிந்திப்போகும்படி. இறந்து
பட்டொழியாமல் அப்போதைக்கு மட்டும் வலிமை குறைந்த
வனாயினன் என்றபடியாம். பின் சில நாளில் கருநாடன் ஒழிந்துபடத்
தமிழ் மன்னனே வருவானாவன் என்ற குறிப்பும் காண்க.
தோல்வியுற்றான் என்பதனை மங்கலவழக்காற் கூறியபடியுமாம்.
1அடிக்குறிப் பிற்கண்ட சாசனத்தில் அகலநீக்கி என்றிருப்பதும்
கருதுக.
ஆணை
செலுத்தும் ஆற்றால் - நிலங்காவல் பூண்டு அரசு
செலுத்தும் கருத்துக்கொண்டு ஒரு நாட்டின்மேற் படை எடுத்துவரும்
வேற்று நாட்டரசர் வெற்றி கொண்டால் "பகைத்தவர் சின்னமும்
பணிந்தவர் திறையும்" கொண்டு செல்வது பெருவழக்கு. இவன்
அவ்வாறன்றி வலிந்து நிலம் கொள்ளும் ஆசையாற்
போந்தவனாதலின் இங்குத் தங்கி நிலங்காவலைத் தானே
மேற்கொண்டு அரசாளத் தொடங்கினான் என்பது. வீரஞ்சிந்தச்
செருவென்றாயினும் தமிழ்நாட்டைத் தமிழரசனே ஆணை
செலுத்தவைத்துத் தன் வெற்றிக்கடையாளமாகத் திறை கொண்டு
செல்லவேண்டிய வடுகக்கருநாட மன்னன், வலிந்து
நிலங்கொள்வான் - வந்தான் என முன்னர்க் கூறிய கருத்தும்
இது. செலுத்தும் மாற்றால் - என்று கொண்டு
போரின்
நேர்முறைக்கு மாறுபட்ட வழியினால் என்றுரைக்க வைத்த குறிப்பும்
காண்க. "அரசிறைஞ்ச வீற்றிருந்து, கொங்கரொடு குடபுலத்துக்
கோமன்னர் திறை கொணர" (11), "முறைபாயுந் தனித்திகிரி
முறைநில்லா முரணரசர், உறையரண முளவாகிற் றெரிந்துரைப்பீர்"
(14) என்ற புகழ்ச் சோழனார் புராணமும், பிறவும் காண்க. சோழ
அரசர்கள் இமயமலையிற் புலிக் கொடி நாட்டி, வடநாடு வென்று,
கீழ்ப்படுத்திய காலத்தில் அவ்வாறே முறை செய்த முறையும்,
இந்நாள் நமது ஆங்கிலேய அரசர் பற்பல நாட்டுப்
பழமன்னவர்களையும் அங்கங்கும் வைத்தே ஆண்டுவரும் முறையும்
இங்குக் கருதத்தக்கன.
மதுராபுரி
காவல் கொண்டான் - மதுரையைத் தனது
தலைநகராகக் கைக்கொண்டு அரசு வீற்றிருக்கலாயினான்.
12
1வேள்விக்குடிச்
சாசனத்தில் "பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி
யெனும் பாண்டியாதிராசன்பின் .. அளவரிய அதிராசரை அகல
நீக்கி அகலிடத்தைக் களப்ர னெனும் கலியரசன்
கைக்
கொண்டானை யிறக்கியபின், படுகடன் முளைத்த பரிதிபோல்
பாண்டியாதிராசன் விடுகதி ரவிரொளி விலக வீற்றிருந்து ..
கடுங்கோன் என்னும் கதிர்வேற்றென்னன் ..."
என்று காணப்படுவது
கொண்டு பாண்டியாதிராசன் பின்வந்த அதிராசனைக் களப்ரன்
என்னும் கலியரசன் செருவென்று மதுரையைக்கைக்கொண்டான்
என்றும், கடுங்கோன் என்ற பாண்டியன்
மீண்டும் நாடுபிடித்தாண்டனன்
என்றும், களப்ரன்
நீண்டகாலம் ஆட்சி செய்திருக்கவில்லை என்றும், அவனே
இவ்வடுகக் கருநாட மன்னனாயிருக்கலாமென்றும் சில சரித
ஆராய்ச்சியாளர் கருதுகின்றார்கள். இதில் ஐயங்கொள்வாருமுண்டு.
|