980.



வல்லாண்மையின் வண்டமிழ் நாடு வளம்ப டுத்து
நில்லாநிலை யொன்றிய வின்மையி னீண்ட மேரு
வில்லானடி மைத்திற மேவிய நீற்றின் சார்பு
செல்லாதரு கந்தர் திறத்தினிற் சிந்தை தாழ்ந்தான். 13

     (இ-ள்.) வெளிப்படை. வலிய ஆண்மையினால்,
வன்மையுடைய தமிழ் நாட்டை வளம்படுத்தி நில்லாத நிலைமை
பொருந்திய இல்லாமையாலே, (அம்மன்னவன்), நீண்ட மேருவை
வில்லாகவுடைய சிவபெருமானது அடிமைத்திறம் பொருந்திய
திருநீற்றுச் சார்பில் செல்லாது சமணர்களது திறத்திலே சிந்தை
தாழ்ந்தனன்.

     (வி-ரை.) வல் ஆண்மையின் - படைகொண்டு வலிந்து
நிலங்கொண்டபடியே அந்த வலிய படை ஆண்மையின்
துணையினால். நீதி முறைவழியாலன்றி - குடிகளின் மன
அமைதியின் துணையாலன்றி - என்பது குறிப்பு.

     வண் தமிழ்நாடு வளம்படுத்து - வன்மையுடைய தமிழ்
என்றும், வண்மையுடைய நாடு என்றும் கூட்டியுரைக்க நின்றது.
தமிழின் வண்மையாவது தன்னை வேண்டிப் பயின்றோர்க்குத்
தக்க உண்மைப் பொருளின்பங்களை வேண்டியவாறே வரை
வில்லாது வழங்குதல். நாட்டின் வண்மையாவது நாடாது
வளந்தருதல், "நாடென்ப நாடா வளத்தது" - குறள். வளம்
படுத்தலாவது
நாட்டின் இயற்கை வளங்களைச் செயற்கையாற்
பெருகச் செய்து மேலும் மக்களுக்குப் பயன் தரும்படி செய்தல்.
இவ்வாறு நாடு வளம்படுத்துதல் அரசாங்கக் கடமைகளில் ஒன்று .
அவை காடுவெட்டி நாடுதிருத்துதல், வாய்க்கால் வெட்டிப்
பயிர்பெருக்குதல் முதலாயின. வளம்படுத்தியும் (அந்தப் பயனைத்
தான் பெறமாட்டானாய்த்) தாழ்ந்தான் என்க.

     நில்லாநிலை ஒன்றிய இன்மையின் - இன்மையின் -
இன்மையினாலே, இன்மையின் - செல்லாது - தாழ்ந்தான் எனக்
கூட்டுக. இல்லாமை - வறுமை. இன்மையாவது நிலையாமை
பொருந்திய, ஆயுளின்மை. வாழ்வு பெறும் ஊழ் வலிமையின்மை
என்க. பின்னர் "மின்னாமென நீடிய மெய்ந்நிலையாமை" (991)
என்பது காண்க. முழுதும் நன்மை செய்யும் திருநீற்று நெறியாகிய
நன்னெறியிருக்க முழுதும் தீமை செய்யும் அருகர் நெறியிற் றாழ்தல்,
"குணம்பிறி தாதல் கெடுவது காட்டுங் குறி" என்றபடி போகூழினால்
விளைவதாம் என்பது அறிஞர் கண்ட வுண்மை என்றுகுறிக்க,
ஆயுள் எல்லைகுறுகிய நாள்வறுமையினால் ஆயிற்று என்றார்.
இவ்வுலகத்தும் மேலுலகத்திலும் நீடிய நல்வாழ்வு வாழும்
விதியில்லாமையிற் றாழ்ந்தான் என்க.

     இவ்வாறன்றி, இன்மை என்றதற்கு அறிவின்மை என்று
கொண்டு, நில்லா நிலை ஒன்றிய அறிவு - அஃதாவது அசத்தாகிய
நில்லாப்பொருள் இது, சத்தாகிய நிலைத்த உண்மைப்பொருள் இது
என்று உணரும் அறிவு இல்லாமையினால் சத்தாகிய நீற்று
நெறியைவிட்டுச் சமண் என்ற அசத்து நவை நெறியில் தாழ்ந்தான்
என்றுரைத்தலுமொன்று. இவ்வறிவு பொருள் ஞானம் எனப்படும்.
நித்தியா நித்திய வத்துவிவேகம் என்பர் வடவர். "மெய்ம்மை
யாம்பொருள் விவேகமும் வேறுபாடாய, பொய்ம்மை யாம்பொருள்
விவேகமும் புந்தியுட்டோன்ற" (வாத - உப. பட. 10) என்ற
திருவிளையாடற் புராணமும், "அல்லாத பரசமயத் தலகைத்
தேர்விண் டகல .. நில்லாதநிலை யிதுமற் றென்று மொன்றாய்
நிற்குநிலை யிதுவெனமெய்ந் நெறிதேர்ந்து" (கடவுள் வாழ்த்து -
மெய்கண்டார் துதி) என்ற சேதுபுராணமும் இங்குச்சிந்திக்க.
"சமயங்களானவற்றி னல்லாறு தெரிந்துணர நம்பரரு ளாமையினாற்,
கொல்லாமை மறைந்துறையு மமண்சமயங் குறுகினார்" (திருநா -
புரா - 37) என்ற கருத்தும் காண்க.

     இப்பொரு ளிரண்டுமன்றி, வளம்படுத்து என்றதனுடன்
நில்லாநிலை ஒன்றிய இன்மை
என்றதனைக் கூட்டி, வளப்படுத்தி
நிற்காததாகிய வறுமையினால் என்றுரை கொள்வர்
ஆறுமுகத்தம்பிரானார். மேலும், இங்ஙனமன்றி நில்லாநிலை
ஒன்றிய வின்மையின் நீண்ட
என்றதனை மேருவில் என்பதற்கு
விசேடணமாக்கியும், வின்மை - வில் ஆளும் தன்மை - வில்லின்
கலைத்திறம் என்று கொண்டும், நில்லாமையினையும் நிலையுதலையும்
ஒருங்கே செய்யும் ஆற்றலுடைய வில்வித்தைத் தன்மையிற் சிறந்த
என்று கூறநின்றதும் காண்க. இப்பொருளில் வின்மை என்றது
அம்பூட்டி எய்யாமல் வில்தாங்கி நின்றதொரு செயலினாலே
முப்புரங்களுக்கு நிலையாமையாகிய அழிவு நிலையும், அதனுள்
வாழ்ந்த அன்பர்களாகிய மூவர்க்கு அழியும் உலகில்
நில்லாமையாகிய சிவப்பேறு என்னும் ஆக்க நிலையும் ஒருங்கே
விளைத்த ஆற்றல் குறித்தது. இந்த இரு வேறு தன்மையும் ஒருங்கே
பொருந்தியதென்று குறிக்க ஒன்றிய என்றார். நீண்ட - நீளுதல் -
அத்தன்மையிற் சிறத்தல். நீண்ட - பெரிய என்றலுமாம். பின் சரித
விளைவிற் காணும்படி சமணத்துக்கு அழிவும் சைவத்துக்கு
ஆக்கமும் ஒன்றாலே செய்யவல்ல பெருமான் என்பார் நில்லாநிலை
என முரண் அணிபடச் சிறப்பித்தார் என்க. "முந்தைச்செய லாம்
அமண் போய்முதற் சைவ மோங்கில்" (1006) என்ற கருத்தும்
காண்க.

     அடிமைத்திறம் மேவிய நீற்றின் சார்பு - திருநீற்றின்
சார்வு அடிமைத் திறத்துடனே இணைபிரியாது பொருந்தியதாம்
என்க. திருநீறு, சிவனது அடிமைத் திறத்தினுள் உயிர்களைக்
கொண்டு செலுத்தி அதில் நிலைபெறவைக்கும் சாதனமாவதன்றியும்,
அடிமைத்திறத்தை அறிவிக்கும் அடையாளமுமாம். உயிரைப் பற்றிய
பவநோய் தீர்ப்பதற்கும், மேல் நோய்கள் வராமல் காப்பதற்கும்
உரிய மருந்துமாம். திருநீற்றுப் பதிகத்தில் ஆளுடையபிள்ளையார்
அருளியவை காண்க. அது இத் திருவாலவாயானுக்குச் சிறப்பா
யுரிமையுடையதென்பது அத்திருப்பதிகத்தினுள் "ஆலவாயான்
றிருநீறே" என்ற மகுடத்தினாலறியப்படும். முன்செய்த
தீவினைவயத்தாற் சமணச்சார்பினிற் புகுந்த கூன்பாண்டியரைச்
சிவனடிமைத் திறத்தினிற் செலுத்திய ஆளுடையபிள்ளையார்,
திருநீறுகொண்டே தொடங்கி அச்செயல் செய்தருளினர் என்ற
வரலாறும், இச்சரிதத்திலே பின்னர்ச், சமண் போய்ச் சைவ
மோங்குதற் கடையாளமாக மூர்த்தியாரும் திருநீற்றினையே
அபிடேகமாகக் கொண்ட வரலாறும் காண்க. நீற்றினை வெளிப்படக்
காணும் நிலையின்றியும் சிவனடிமைத்திறம் பேணுநிலை உளதாம்
என்பது சாக்கியநாயனார் புராணத்திற் காணப்படுவதனால் நீற்றிற்
செல்லாது என்னாது நீற்றின் சார்வு செல்லாது
என்றார்.

     அருகந்தர் திறம் - அருகர் சமயம். அருகன் - சமணசமயக்
கடவுள். அவனைத் தெய்வமாக் கொள்வோர் அருகந்தர். சிந்தை
தாழ்ந்தான்
- தாழ்தல் - விரும்புதல். நீற்றுச் சார்பினிற் சென்று
வாழாமல் கீழ்நிலைமையில் தாழ்ந்தான் என்றோருண்மைப்
பொருள்படவு நின்றது. வரும்பாட்டில் தாழும் - வீழும் என்பதும்
காண்க. சைவர் என்போரில் நீற்றின் சார்வு செல்லாது தாழ்வோரும்
பலர் காணப்படுவது இக்காலத்துக் கொடுமைகளுள் ஒன்று!

     வளம்படுத்தி - என்பதும் பாடம்.                   13