981.
|
தாழுஞ்சமண்
கையர்த வத்தைமெய் யென்று சார்ந்து
வீழுங்கொடி யோனது வன்றியும் வெய்ய முன்னைச்
சூழும்வினை யாலர வஞ்சுடர்த் திங்க ளோடும்
வாழுஞ்சடை யானடி யாரையும் வன்மை
செய்வான், 14 |
981.
(இ-ள்.) வெளிப்படை. தாழும் சமணர்களாகிய வஞ்சகர்
களுடைய பொய்த் தவங்களை மெய்யென்று கொண்டு அந்நெறியிற்
சார்ந்து வீழும் கொடியவனாகிய அம்மன்னவன் தான்
வீழ்ந்ததுவேயுமல்லாமல், அரவம் சந்திரனோடும் வாழ்தற்கிடமாகிய
சடையினையுடைய சிவபெருமானது அடியார்களையும், கொடிதாகிய
முன்னைச் சூழ்வினைப் பயத்தினாலே, வலிமை செய்வானாகி, 14
981. (வி-ரை.)
தாழும் சமண்கையர் - தாழும் -
தாழப்பட்ட. மேற்சொல்லியபடி மன்னவனால் விரும்பப்பட்ட.
தாழும் - தாழ்ந்த சமண் என்று சமணரது தன்மை குறித்ததாக
உரைத்தலுமாம்.
தவத்தை
மெய் என்று தவம்- தவம் என்ற பெயராற்
சொல்லப்பட்ட நெறி. மெய் என்று - மெய்யல்லாததை மெய் என்று.
சமணர் தவமாவன - சுடுபாறையிற்கிடத்தல், கொல்லாமை மேற்
கொள்ளுதல், உடையின்றிச் சரித்தல், தலையின் மயிர் பறித்தல்,
பேச்சின்றி நின்றுண்ணுதல், இரவினில் உணவு கொள்ளாதிருத்தல்
முதலாயின.
வீழும்
கொடியோன் - வீழ்தல் - விரும்புதல் - குழியில்
விழுதல் என்ற இரு பொருளும்பட நின்றது. "தாம் வீழ்வார்" என்ற
குறளில் வீழ்தல் விருப்பம் என்ற பொருளில் வந்தது காண்க.
அது
அன்றியும் - வன்மை செய்வான் - "கனியிருக்கக்
காய்கவர்ந்த கள்வனேனே" (1), "அறமிருக்க மறம்விலைக்குக்
கொண்ட வாறே" (3) "தவமிருக்க அவஞ்செய்து தருக்கி னேனே" (9)
(திருவாரூர் - காந்தாரம் - பழமொழி) என்று பலவகையானும்
அப்பர் சுவாமிகள் தேற்றியருளியது காண்க. அது அன்றியும் -
அக்கொடியோன் ஆலவாய்ப் பெருமானது திருநீற்றுச்சார்பிருக்க
அதிற் செல்லாது அருகந்தர் திறத்திற் றாழ்ந்ததுவேயுமன்றி; அதுவே
பெருந்தவறு, அதன் மேலும் வேறுமோர் பெரும்பாதகத்துக்
குள்ளாயினான் என்பது.
வெய்ய
முன்னைச் சூழும் வினையால் - கொடியதாயும்,
முன் செய்ததாயும், அதனால் இப்போது வந்துபற்றுவதாயும் உள்ள
வினைவலி. ஒரு பெருந்தவறுக்கு மேலும் சென்று, சிவனடியாரையும்
அலைக்கும் பெரும் பாதகத்துக் குள்ளாகியதற்குக் காரணங்கூறியபடி.
"தீவினையா ரஞ்சார் விழுமியா ரஞ்சுவர், தீவினையென்னுஞ்
செருக்கு" (குறள்).
அரவம்......சடையான்
அடியாரையும் - "பாம்போடு திங்கள்
பகைதீர்த் தாண்டாய்" (திருத்தாண்டகம்) என்றபடி அரவமும்
திங்களும் ஒன்றோடொன்று பகையுடையனவாயினும் அவற்றை
ஒன்றுசேர இருந்து வாழும்படி இடஞ்செய்து வைத்த
சடையினையுடைய சிவபெருமான் என்பது. அரவம்
- பாம்பு.
பாம்பின் இனமான - விடத்தின் தன்மையுடைய - இராகு
கேதுக்களால் மறைக்கப் படுதலின் திங்களுக்குப் பாம்பு பகை
என்று உபசரித்துக் கூறுதல் மரபு. "இந்துவிற் பானுவினில்
இராகுவைக் கண்டாங்கு" (9 - 3 - உதா) என்ற சிவஞான
போதத்தினுள்ளும் இச்செய்தி உதகரிக்கப்படுதல் காண்க.
அரவம்
- கரிய விடத்தினை அடக்கியது. கரும்பாம்பு
என்றும் கூறுவர். கருமை ஒளிக்குப் பகை என்பது குறிக்கச் சுடர்த்
திங்கள் என்றார். ஓடும் வாழும் - ஓடும்
என்ற மூன்றனுருபு
உடனிகழ்ச்சிப்பொருள் தருதலால் இரண்டும் ஒற்றுமையுணர்ச்சியுடன்
தத்தமக்குரிய இடத்தினில் வாழ்தல்குறித்தது. மூன்றனுருபைத்
திங்களுடன் புணர்த்தியோதியது சிறப்புப் பற்றி.
பாம்பும் மதியும்
உடன் வாழவைத்த இவ்வியல்புபற்றிக்
கூறியது அத்தகைய சிவபெருமானது அடியார்களும்
அத்தன்மையினராவர் என்று காட்டுதற்காம். "இது வாகு மதுவல்ல
தெனும்பிணக்க தின்றி, நீதியினா லிவையெல்லா மோரிடத்தே
காண நிற்ப"தாகிய சைவ சமயத்தைச் சார்ந்த அடியார்
எதனிடத்தும் பகை கொள்ளார்; எவற்றையும் அவ்வவற்றுக் கேற்ற
இடத்தில் வைத்துக் கொண்டு அமைகுவர்; ஆதலின்
அத்தகையாராகிய அடியார்களை வன்மை செய்தல்
பகைவராயினார்க்கும் தகாது என்பது குறிக்க வாழும் சடையான்
என்றும், அடியாரையும் என்றும் கூறினார்.
மேலும் அடியார்களிடத்து
அபசாரப்படுதல் சிவாபராதத்தினும்
பெரிய பாதகமாய்ப் பற்றியலைக்குமென்பதறியாது அவர்களையும்
என்ற குறிப்பும் காண்க. அன்றியும், அடியாரிதயம் கலங்கச்
செய்தால் அதனைச் செய்தோர் விரைவில் நாசமுறுவர் என்பதும்,
அப்பர் சுவாமிகள் காலபாராயணத் திருக்குறுந்தொகையுள்
இயமன்றூதரை நோக்கி ‘அடியார்களின் பக்கத்திலும் செல்லாதீர்கள்'
என்று ஆணை தந்ததும் குறித்து அத்தன்மையினராகிய
அடியாரையும் என்றார். உண்மை உயர்வு சிறப்பு.
ஆனால் வாதம்
செய்து சமணர்புத்தர்களை நமது
பரமாசாரியர் களாகிய ஆளுடைய பிள்ளையாரும்
திருவாதவூரடிகளும் போக்கியருளினர்களன்றோ? அப்பர்
சுவாமிகளும் ஆளுடைய நம்பிகளும் சமணபுத்தர்களை இழித்துக்
கூறியருளினார்களே? இச்சரிதத்திலும் சமண்பாதகன் மாய்ந்திடவும்
சமண்போகவும் உள்ள நாள் என்று வரும் என மூர்த்தியார்
எண்ணினாரன்றோ? எனின், அவை உண்மையே. புறப்புறச்
சமயிகளாகிய இவர்கள் தமது சைவ நாட்டினுட் புகுந்தோர் தத்தம்
அளவில் நின்றமைந்துபடாமல் சைவ நாட்டைக்கவர்ந்து கொண்டு
முதற் சைவத்துக்கு இடையூறு விளைத்தனர். அதன் பின்னே
அவ்விடையூறுகளை நீக்கித் தற்காத்துக்கொள்ளவும், உண்மைநிலை
நாட்டவும், இறைவனது நியமமாகிய திருவருள்பெற்று
இச்செயல்களைச் செய்தனரே யன்றிப், பகைமைபூண்ட
இகலினாலன்றென்பது உண்மை. "இகலில ரெனினும்" (திருஞான -
புரா - 854) என்பதும், அப்புராணம் - 736 - 741 - ல் கூறியனவும்
காண்க.
வன்மை
செய்வான் - தத்தம் நிலையில் நிற்கவொட்டாது
பலவாற்றாலும் வலிந்த செய்கைகளைச் செய்வானாகி. செய்வான்
-
முற்றெச்சம். செய்வான் - எண்ணி (982), மிறை செய்யவும் என்று
முடித்துக்கொள்க. இக்கொடியோன் எண்ணிய அளவில்
நின்றுபட்டனவேயன்றி அத்தீவினைகள் முற்றுப்பெறாதொழிதலின்,
அது குறிக்கச் செய்வான் - எண்ணி - என்ற
வினையெச்சங்கள்
செய்யவும் என்ற குறிப்பு வினையெச்சத்துடன் முடியவைத்தார். 14
|