982.



செக்கர்ச்சடை யார்விடை யார்திரு வால வாயுள்
முக்கட்பர னார்திருத் தொண்டரை, மூர்த்தி யாரை,
மைக்கற்புரை நெஞ்சுடை வஞ்சகன் வெஞ்ச மண்பேர்
எக்கர்க்குட னாக விகழ்ந்தன செய்ய வெண்ணி,   15

     982. (இ-ள்.) வெளிப்படை. செவ்வானம் போலும்
சடையவரும் விடையவரும், திருவாலவாயினுள் எழுந்தருளிய மூன்று
கண்ணுடைய பரமனாரும் ஆகிய சிவபெருமானது திருத்தொண்டரை,
மூர்த்தியாரை, அந்தக்கரிய கல்போன்ற நெஞ்சுடைய வஞ்சகன்
வெவ்விய சமண் என்ற பேர் கொண்ட ஈனர்களுக்கு
உடன்படுத்துவானாகி, இகழ்ச்சியான காரியங்களைச் செய்ய எண்ணி,
15

     982. (வி-ரை.) செக்கர்ச்சடை - செக்கர் - அந்திச்
செவ்வானம். அது போன்ற சிவந்த ஒளியுடைய சடை. "மாலையின்
றாங்குருவே போலுஞ் சடைக்கற்றை" (அற்பு - அந் - 65) என்றது
அம்மையார் திருவாக்கு.

     விடையார் - அறத்தின் உருவமாகிய விடையினையுடையார்.
தருமமூர்த்தி என்ப.

     திருவாலவாயுள் முக்கட்பரனார்- சிறப்பாகிய
கண்ணுடையார் என்றது. நெருப்பாகிய நெற்றிவிழி. இருள்
போக்குவதும் அஞ்ஞானத்தை எரிப்பதுமாம்.

     இம்மூன்றும், பகைப்பொருள்களை ஒன்றுசேர வாழ வைப்பவர்
என முன்பாட்டிற் கூறிய சிறப்பும், அதுதான் அவ்வவற்றின்
நிலைகளுக்கேற்பத் தருமவழியின் நிறுத்துபவர் என்ற சிறப்பும்,
அந்நிலையிற் பிறழ்ந்தோரைப் போக்கி விளக்கம் செய்வர் என்ற
சிறப்பும் குறித்து நின்றன.

     திருத்தொண்டரை - அத்தன்மைகளையுடைய
தலைவருக்குத் தொண்டராதலின் இவரும் அச்சிறப்புக்களுக்குரியவர்
என்பது. இவரது அன்பின் உறைப்பினாலே கொடியவன்
இறந்துபட்டுச் சமண்போகவும், சைவம் விளங்கவும் கூடிற்று என்பது
இச்சரிதத்தாற் போந்த உண்மை. 985 - 1006 பார்க்க. தொண்டரை
மூர்த்தியாரை
என்றுகூட்டி உரைத்த கருத்துமிது.

     மைக்கல்புரை நெஞ்சு - மை - கருமை. நெஞ்சுக்குக்
கருநிறமுடைமையாவது வஞ்சம் முதலிய தீக்குணமுடைமை. வஞ்சம்
பொறாமை முதலிய தீக்குணங்கள் தாமத குணத்தின்பாற்பட்டவை.
தாமத குணத்தின் நிறம் கறுப்பு என்ப. இத்தொடர்பு குறிக்கவே
வஞ்சகன் என்றார். "மை பொதி விளக்கேயென்ன மனத்தினுட்
கறுப்பு வைத்து" (473) என்றது காண்க. கல் - இங்கு
அன்புக்கிணங்காத கடினத்தன்மை குறித்தது. கற்களில் கருங்கல்
மிகக் கடினமுடைத்தென்பர்.

     வெஞ்சமண் பேர் எக்கர் - எக்கர் - ஈனர். "எக்க
ராமமண் கையர்" என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரங்காண்க.
உடனாக - உடம்படுத்துவிக்க. ஆக்க என்றது ஆக என நின்றது.
சிவன் பணியில் தவிர்த்தலால் சமண்போல ஆக்க என்றதும் குறிப்பு.

     வெஞ்சமண் - வெம்மை - கொடுமை. கொல்லாமை -
அகிம்சை - சீவகாருண்ணியம் என்ற போர்வையினுள் மறைந்து
நின்று கொடிய கொலை - இம்சை - வன்மைகளில் அஞ்சாது
முற்படுகின்றவர்களாதலின் வெஞ்சமண் என்றார்.

     செய்வினை - இகழ்ந்தன அறநூல்களாலும் அறிவோராலும்
இகழப்பட்டவற்றை. செயப்பாட்டுவினையாக வந்த வினை
யாலணையும் பெயர். இரண்டனுருபுதொக்கது. 15