984.




எள்ளுஞ்செயல் வன்மைக ளெல்லையில் லாத
                                 செய்யத்
தள்ளுஞ்செய லில்லவர் சந்தனக் காப்புத் தேடிக்
கொள்ளுந்துறை யும்மடைத் தான், கொடுங்
                       கோன்மை செய்வான்;
தெள்ளும்புனல் வேணியர்க் கன்பருஞ் சிந்தை
                                 நொந்து, 17

     984. (இ-ள்.) வெளிப்படை. இகழப்பட்ட, எல்லையில்லாத
வலிந்த செய்கைகளைச் செய்யவும், தமது திருப்பணியினின்றும்
விலகாத செய்கையுடையவராகிய மூர்த்தியார் சந்தனக் காப்புத்
தேடிப்பெறும் வழியையும் கொடுங்கோன்மை செய்வானாகிய
அக்கொடும்பாதகன் அடைத்துவிட்டான்; தெள்ளும் நீராகிய
கங்கையைத் தரித்த சடையாருடைய அன்பரும் (அதனால்) மனம்
நொந்து, 17

     984. (வி.ரை.) எல்லையில்லாத(னவும்) வன்மைகளும்
ஆகிய எள்ளும் செயல்
- என்க. எள்ளுதல் - நூல்களாலும்
உயர்ந்தோராலும் விலக்கி யிகழப்படுதல். இச்செயல்களாவன "அந்த
மிலவா மிறை" என முன்பாட்டிற்கூறிய அவை.

     தள்ளும் செயல் - தமது திருப்பணிவிடையை விடுதல்.
தள்ளும் செயல் இல்லவர் -
மூர்த்தியார். முட்டலராய்ச் செய்து
வந்தவராதலின், கொடுங்கோலரசனுடைய மிறைகளுக்கு உடைந்து
தம் பணியைத் தள்ளாதவர்.

     சந்தனக்காப்புத் தேடிக்கொள்ளும் துறை - துறை -
சந்தனக்குறடு (கட்டை) பெறும் வழிகள். அவை, விலைக்குப்
பெறுதலும், சோலைகளிற் சந்தன மரங்களை வெட்டி வருதலும்
முதலாயின. காப்பு- இங்கு அரைத்தலாற் காப்பினைப் பெறும்
குறட்டுக்காயிற்று.

.     மெய்ப்பூச்சுக்குரியதாதலின் காப்பு என்றார்.

     துறையும் அடைத்தான் - வழக்கமாய்த் தேடிப்பெறும்
வழிகளில் இவர் பெறாதபடி தடுத்துவிட்டான். விலைக்குக்
கொடுப்போரை வன்மையால் மறித்தும், சோலைகளில் மரம் வெட்டி
எடுக்கக்கூடாமற் செய்தும் வலிந்த செய்கைகளைச் செய்தான்
என்பதாம்.

     கொடுங்கோன்மை செய்வான் - இவ்வாறு செய்தல் அரச
நீதிக்கும் செங்கோன்மைக்கும் அடாத செயல் என்பார்
கொடுங்கோன்மை என்றார், "ஆறு சமயத்தவரவரைத், தேற்றுந்
தகையன" (இன்னம்பர், 7),
"ஆறொன் றியசம யங்களி னவ்வவர்க்
கப்பொருள்கள், வேறொன் றிலதான" (மேற்படி 4) என்ற
திருவிருத்தங்களில் கூறியபடி சிவபெருமான் அவ்வச் சமயத்தார்க்கும்
அங்கங்கு நின்று அவரவர்க்கேற்றபடி அருள்புரிகின்றார். சிவன்
வகுத்த நீதியாகிய செங்கோன்மைவல்ல அரசனும் அவ்வாறே
அவ்வவர் சமயக்கோட்பாட்டில் அவரவர்களை மிகை பகை யின்றி
நிறுத்துவித்தல் அரச நீதியாகும். அதிற்பிறழ்ந்து இவ்வாறு
சமயக்கோட்டம் விளைத்து வலிமை செய்தல் கொடுங்கோன்மை
என்பதாம். இந்நீதியினை உலகம் உணர்ந்து அதன்படி ஒழுகி
உய்யும்பொருட்டு அரச நீதியிற்சிறந்த அமைச்சர் பெருமானாகிய
ஆசிரியர் இவ்வாறு விளக்கிக்காட்டினார்.

     தெள்ளும் புனல் - கங்கை. தன்னுட்படிந்தார்களுடைய
பாவங்களைப்போக்கி ஆணவமாகிய மயக்கத்தைத் தெளிவித்து
நன்மை செய்தலால் தெள்ளும் என்றார்.

     அன்பரும் சிந்தை நொந்து - அன்பரும் - ஒரு
குறைவுமில்லாதவர்களும், வீரமும் பெருமையுமுடையவர்களும்,
அச்சமும் கவலையுமில்லாதவர்களும் ஆகிய திருத்தொண்டர்
கூட்டத்தினுட் சேர்ந்த அன்பனாரும் என்க. உம்மை உயர்வு சிறப்பு.
"அச்சம் மிலர் கேடும்மிலர் பாவம்மில ரடியார், நிச்சம்முறு
நோயும்மிலர்" (நட்டபாடை - திருநின்றியூர் - 2) என்று
ஆளுடையபிள்ளையாரும், "வானந்துளங்கிலென் ... ஒருவனுக்
காட்பட்ட வுத்தமர்க்கே" (தனித்திருவிருத்தம் - 8) என்று
ஆளுடைய அரசுகளும் அருளியவைகாண்க. "வீரம்" (144),
"பெருமை" (6) என்ற விடத்துரைத்தவையும் பார்க்க. எதுவரினும்
சிந்தை நோதல் இல்லாத அன்பரும் நொந்தார் என்றது
இறைவனுக்குத் தாம் செய்த திருப்பணி முட்ட நேர்ந்தது
பற்றியேயன்றிப் பிறிதில்லை என்பது குறிக்க வேணியர்க்
கன்பரும்
என்றார். அன்பராதலின் திருவடியன்பு பற்றி நொந்தார்
என்க. "பேசாத நாளெல்லாம் பிறவா நாளே" என்ற கருத்தும் இது.

     சிந்தை நொந்து - "பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தம் கலங்கிட", "ஈசனடியா ரிதயங் கலங்கிட" என்பனவாதி
திருமந்திரங்களால் அன்பர்களது சிந்தை நோவச்செய்யின் அதனால்
வருங்கேடுகளைத் திருமூலர் ஆணையிட்டு அறிவித்திருத்தல்
காண்க. இங்கு இவ்வாறு நொந்தமையால் வரும் இச்சரிதமேல்
விளைவுகளையும் சிந்திக்க. 17