985.



"புன்மைச்செயல் வல்லமண் குண்டரிற் போது
                             போக்கும்
வன்மைக்கொடும் பாதகன் மாய்ந்திட, வாய்மை வேத
நன்மைத்திரு நீற்றுயர் நன்னெறி தாங்கு மேன்மைத்
தன்மைப்புவி மன்னரைச் சார்வதென்?" றென்று
                                 சார்வார். 18

     985. (இ-ள்.) வெளிப்படை. "புன்மைச் செயலில்வல்ல அமண்
குண்டர்களுடனே போது போக்குகின்ற கொடியபாதகன் இறந்துபட,
உண்மை வேதங்களிற் கூறப்பட்ட நன்மைதருகின்ற திருநீற்றின்
உயர்ந்த சைவ நன்னெறியைத் தாங்கும் மேன்மைத் தன்மையுடைய
மன்னரை இப்புவி சார்வது எந்நாட்கூடுவதோ?" என்று மனத்துட்
கொண்டவராகி, 18

     985. (வி-ரை.) புன்மை செயல் வல் அமண் குண்டர் -
புன்மைச் செயல்
- இழி செயல்கள். கெட்ட செய்கைகள். வல்
அமண் என்றது புன் செய்கை செய்வதில் அமணர் வல்லவர்கள்
என்றபடி. குண்டர்- கீழ்மக்கள். திருநாவுக்கரசு சுவாமிகள்பால்
சமணர்கள் செய்த தீயமிறைகளும், (அவை - அரசனிடத்து
வஞ்சனை தெரிந்து சித்திரித்துச் சொல்லியதும், அரசுகளை, அரசன்
ஆணையின் உதவிகொண்டு, கொடுவரச் செய்து நீற்றறையில்
இடுவித்தும், விடங்கலந்த பாற்சோறு நுகர்வித்தும், யானையினால்
இடரச்செய்வித்தும், கல்லினோடு பூட்டிக் கடலில் இடுவித்தும்
செய்ததும் முதலியவை) ஆளுடைய பிள்ளையாரும் சிவன்
அடியார்களும் மதுரையிற் புக்கது கண்டு பொறார்களாய் அவர்கள்
உறைந்த திருமடத்தில் இரவில் தீ மூட்டியதும், தண்டியடிகளை
இழித்துரைத்து வலிமை செய்து சிந்தை நோவச் செய்ததும், நமிநந்தி
நாயனார்பால் இழிசொற் பேசி அவர் மனம் நோவச் செய்ததும்
முதலாகிய புன்மைச் செயல்களை இங்கு நினைவு கூர்க.
எவ்வுயிர்க்கும் எவ்விதத்தும் நோதல்செய்யாத கருணையாளராகிய
அப்பர் சுவாமிகளும் தமது தூய அருட்சிந்தையும் நொந்து,
அதுபற்றியே இவர்களைத் தமது திருவாக்கினால் "அமண் குண்டர்"
"குண்டாக்கர்" என்று கூறுதலும் காண்க. போது போக்கும் -
நன்னெறியிற் செலுத்தித் தானும் உய்ந்து, தன் கீழ்ப்பட்ட
நாட்டையும் உய்யச் செய்வதிற் கழிக்கவேண்டிய தனதுகாலத்தை
வீணே கழித்துப் போக்கினான் என்பது. போக்குதல் -
வீணாக்குதல், மாய்த்தல் என்றலுமாம். "பொய்ம்மையே பெருக்கிப்
பொழுதினைச் சுருக்கம்", "கண்ணைத் துயின்றவமே
காலத்தைப்
போக்காதே" என்ற திருவாசகங்கள் காண்க. இக்கொடியவன்
தனது கொடுஞ்செயலினால் தன் நாளை அன்றைக்கு
முடித்துக்கொண்டான் என்பது பின்னர்க் காணப்படும். 991 பார்க்க.

     வன்மைக் கொடும் பாதகன் - தனது சமயமாறுபாடு ஒன்றே
பற்றிச் சிவாபராதமாகிய பெரும்பாதகத்தைக் கொடுமையாக வலிந்து
செய்தவன்.

     மாய்ந்திட - இறந்துபட. "மாய்ந்திட - தன்மை மன்னரைச்
சார்வது என்று? " எனக்கூட்டுக.

     வாய்மை வேதம் - ‘சத்தியமே உறுதியாவது' என்று
அறையும் வேதம் - வாய்மையே பேசும் மறை என்றலுமாம்.

     வேத நன்மைத் திரு நீறு - வேதங்களில் விதந்து
பேசப்படுவதும் நன்மையே தருவதுமாகிய திருநீறு. திருநீற்றுப்பதிகம்
பார்க்க.

     திருநீற்று உயர் நன்னெறி - திருநீற்றினை
உறுதிப்பொருளாய்க் கொண்டு உயர்வு தரும் நன்னெறி - சைவ
நெறி. "நீற்றின் சார்பு" (980), "மன்னிய சைவ வாய்மை வைதிக
வழக்கமாகும், நன்னெறி" (திருஞான - புரா - 600) "தேனவில்
கொன்றையார்தந் திருநெறி" (மேற்படி 859), என்பவை காண்க.
உயர் - உயர்த்தும். பிறவினைப் பொருளில் வந்தது. உயர்வாகிய
என்றலுமாம்.

     நெறிதாங்கும் தன்மை - நெறியினை மேற்கொண்டு
செலுத்தும் தன்மையுடைய.

     தன்மை மன்னரைப் புவி சார்வது என்க. புவி சார்வது -
உலகம் அரசரது சார்பிலே நிற்கக்கடவது என்ப. "மன்ன னெவ்வழி
மன்னுயி ரவ்வழி" என்பது பழமொழி. சார்வார் - மனத்தினுட்
கொள்வாராகி. முற்றெச்சம். சார்வார் - வந்தனர் என
வரும்பாட்டுடன் கூட்டி முடிக்க. 18