986.



காய்வுற்றசெற் றங்கொடு கண்டகன் காப்ப வுஞ்சென்
றாய்வுற்றகொட் பிற்பக லெல்லை யடங்க நாடி
யேய்வுற்றநற் சந்தன மெங்கும் பெறாது சிந்தை
சாய்வுற்றிட வந்தனர் தம்பிரான் கோயி றன்னில். 19

     986. (இ-ள்.) வெளிப்படை. காய்தற்றன்மை பொருந்திய
கோபத்தையுடைய கொடிய கண்டகனாகிய அவ்வடுகக்கருநாட
மன்னவன், சந்தனம் பெறும் வழி கிடைக்கப்பெறாமல் அடைக்கவும்,
போய், ஆராயும் கொட்பில் அந்நாளிற் பகல் கழியுமளவும் எங்கும்
தேடியும், திருவாலவாயில் எந்தைபெருமானுக்கு அணியத்தகுந்த
நல்ல சந்தனம் எங்கும் கிடைக்கப்பெறாது மனம் சோர்வுற்று
வருந்தத், தம் பெருமானாரது திருக்கோயிலில் வந்தணைந்தனர். 19

     986. (வி-ரை.) காய்வுற்ற செற்றம் - ஒரு பொருளை
நடுநிலையில் வைத்துக் காணமுடியாது காய்தலையுடைய சினம்.
செற்றம் - கோபம் - பகைமை. "காய்தலுவத்த லகற்றி
யொருபொருட்கண், ஆய்த லறிவுடையார் கண்ணதே -
காய்வதன்கண், உற்ற குணந்தோன்றா தாகும்" என்பது நீதியுரை.

     கண்டகன் - கொடியவன். கண்டகம் - கொடுமை.
கண்டகம்
-
முள் என்று கொண்டு முள்ளினைப்போன்ற
துன்பஞ்செய்பவன் என்றுரைப்பாருமுண்டு.

     செற்றங்கொடு காக்கவும் - மேலெழுந்த செற்றத்தினால்
சந்தனங் கொள்ளுந் துறையை அடைத்து, அது கிடையாமற்
காவல்செய்து. உம்மை இழிவு சிறப்பு. காக்க என்றது வாராமல்
காவல்புரிய என்ற பொருளில் வந்தது.

     ஆய்வுற்ற கொட்பு - பல வழியாலும் ஆராய்ந்து திரியும்
மனச்சுழற்சி. கொட்பு - கருத்து என்றலுமாம்.

     ஏய்வுற்ற நல் சந்தனம் - ஆலவாய்ப் பரமனாருக்குச்
சாத்தத்தகுந்த நல்ல மணமும் குணமும் உடையதாய் முற்றிய
உயர்ந்த சந்தனக்கட்டை.

     சிந்தை சாய்வுற்றிட - மனம் ஏக்கம் பொருந்த. "அன்பரும்
சிந்தை நொந்து" (984) என்றவிடத் துரைத்தவை பார்க்க. சிந்தை -
தமக்கு அந்தம் இலவாம் மிறை செய்யவும் அவ்விடுக்கண்
ஒன்றினுக்கும் அஞ்சாது உறைப்புடன் பணிசெய்து வந்த திண்ணிய
மனம். திருப்பணிக்குரிய சந்தனம் பெறாமையால் திண்மை சாய்ந்தது
என்க. 19