987.



நட்டம்புரி வாரணி நற்றிரு மெய்ப்பூச் சின்று
முட்டும்பரி சாயினுந் தேய்க்குங்கை முட்டா தென்று
வட்டந்திகழ் பாறையின் வைத்து முழங்கை
                                தேய்த்தார்
கட்டும்புறந் தோனரம் பென்பு கரைந்து தேய.   
 20

     (இ-ள்.) வெளிப்படை. "அருட் கூத்தப் பெருமானார்
அணியும் நல்ல திரு மெய்ப்பூச்சுத் திருப்பணிக்கு இன்று முட்டுவந்து
நேரும் தன்மை உண்டாயினும், அந்தச் சந்தனத்தைத் தேய்க்கும்
எனது கையினுக்கு முட்டு நேராது" என்று துணிந்து, வட்டமாய்
விளங்கிய சந்தனக்கற்பாறையில் தமது முழங்கையை வைத்து
அதனைக் கட்டிப் போர்த்த புறந்தோலும் நரம்பும் எலும்பும்
கரைந்து தேயும்படி தேய்த்தனர்.

     (வி-ரை.) நட்டம் புரிவார் - அருட்டிருக் கூத்தினை
ஆடுகின்ற சிவபெருமான்.

     நல் திரு மெய்ப்பூச்சு - "ஏய்வுற்ற நற்சந்தனம்" என
முன்பாட்டினும், "எந்தைக்கு அணி சந்தனக்காப்பு" என்று 977-லும்
உரைத்தவை காண்க. சந்தனக்கட்டை கிடைக்காத காரணத்தால்
இறைவனது திருமெய்ப்பூச்சு முட்டுப்பட்டதென்று கவன்றனர்.

     முட்டும் பரிசு - தவிர்தலுறும் நிலை.

     தேய்க்கும் கை - சந்தனக் கட்டையைப் பாறையில்
வைத்துச் சந்தனம் இழைக்க வுதவும் கையினில் முழங்கை முற்பட
உதவுவதனால் முழங்கை தேய்ந்தார்.

     கை முட்டாது - கையினுக்கு முட்டுப்பாடு இல்லை என்றபடி.
என்று - என்று துணிந்து.

     வட்டம் திகழ்பாறை - சந்தனம் அரைத்தற்கிடமாகிய கல்.

     கட்டும் ...... தேய . கட்டும் - உள்ளே நின்ற எலும்பு,
நரம்பு, தசை, இரத்தம் முதலியவற்றை ஒன்றாகப் பொதிந்து மேலே
மூடிக்கட்டிய முழங்கையினைப் பாறையில் தேய்க்க முதலில்
கரைந்து தேய்வது புறந்தோல். அதனை அடுத்து நரம்பும், அதன்
பின் எலும்பும் என்றிவ்வாறு முறையிற் றேயும் உடற்கூற்றுக்களாகிய
தோல் முதலிய தாதுக்களை வெளியிலிருந்து உட்செல்லும்
அவ்வரிசையில் வைத்தோதினார். திருநா - புரா - 357 - 360
பாட்டுக்கள் பார்க்க.

     கரைந்து தேய - முதலில் கரைந்து, அதன் மேலும் தேய்க்க,
அவை தேய்வடைய. தேய்த்தசெயல் முன்னர் நிகழ்ந்தது. அதன்
காரணமாகக் கரைந்து பின் தேய்ந்தன என்பார் தேய்த்தார் -
தேய
என்ற முறையில் கூறி வினைமுடிபு கொள்ளவைத்த நயம்
காண்க. 20