989. (இ-ள்.)
வெளிப்படை. "ஐயனே! அன்பின் துணிவினால்
இக்காரியம் செய்யற்க. உன்பால் வலியக் கொடுமை விளைத்தவன்
வலிந்துகொண்ட நாடு முழுமையும் நீ கொண்டு, முன்பு புகுந்த
துன்பங்கள் முழுமையும் போக்கிக் காத்துப், பின்பு உனது
நியதியாகிய திருப்பணி செய்து, முடிவில் நமது பேருலகத்திற்
சேர்வாயாக!" என்று சொல்ல, 22
989. (வி-ரை.)
ஐய! - ஐயனே! அன்பின் செயலுக்கு மகிழ்ந்து
இறைவர் மூர்த்தியாரை அருமைப்பட விளித்தது. ஐயன் -
பெருமையிற் சிறந்தோன். முனிவன் என்றலுமாம்.
அன்பின்
துணிவால் இது செய்திடல் - அன்பின்துணிவு
- இன்று மெய்ப்பூச்சு முட்டும் பரிசாயினும் தேய்க்கும் கைக்கு
முட்டின்று என்ற துணிவு (987). பகை, கவலை, பிணக்கு
முதலியனவாய் உலகநிலை பற்றிய பலகாரணங்களால் கை
குறைத்தல் முதலாகிய பல வலிந்த செயல்களையும் தாமே
செய்துகொள்வாருமுளர். அதுவன்றித், "தம்மைத் தாமே சாலவு
மொறுப்பர்" (திருவிடை - மும் - கோ - 19) என்று பட்டினத்தடிகள்
அருளியபடி நிலையாகிய வீட்டின்பம் பெறுவதற்கும் பலர் தம்
உடலுக்குத் தாமே பற்பல ஊறுகளை விளைத்துக்கொள்வாருமுண்டு.
"இக்காயங் கீறுகின்றிலை" "பாதநன் "மலர்பிரிந் திருந்துநான்
முட்டிலேன் றலைகீறேன்" (37), "தலைவனை நனிகாணேன்
தீயில்வீழ்கிலேன் திண்வரையுருள்கிலேன், செழுங்கடல் புகுவேனே"
(39), "ஊனி லாவியை ஓம்புதற் பொருட்டினு முண்டுடுத்
திருந்தேனே" (40) திருச்சதகம் - என்று பிரிவாற்றாமையின்
செயல்களாய்த் திருவாசகத்துக் கூறப்படும் கருத்துக்களையும் இங்கு
வைத்துக் காண்க. ‘நீ அத்தகையதொரு காரணமுமின்றி எம்மிடத்து
வைத்த அன்பின் காரணமாகவே, எமக்குச் சந்தனமெய்ப்பூச்சு
முட்டிய தென்றதற்காக இது செய்தனை' என்பது.
செய்திடல்
- அல்லீற்று எதிர்மறை வியங்கோள். செய்யற்க -
செய்தல் வேண்டா. "மகனெனல் மக்கட் பதடி யெனல்" (குறள்)
என்புழிப்போல.
வன்புன்கண்
- வலிந்த இழிந்த இடுக்கண்கள். "அந்தம்
இலவாம் மிறை" (983) "எள்ளுஞ் செயல் வன்மைகள்",
"கொடுங்கோன்மை" (984) என்ற அவை.
புன்கண்
விளைத்தவள் கொண்டமண் - மண்கைக்
கொண்டது, மேல் 979ல் உரைக்கப்பட்டது. மண்
- நாடு -
கொண்ட என்றதனால் நீதிமுறையாலன்றி வலிந்து நிலங்கொள்ளும்
பேராசையால் கைக்கொண்டு என்றது குறிப்பு.
கொண்டமண்
- கொண்டு - கொண்ட என்று இறந்த
காலத்தாற் கூறிய குறிப்பினால் அவனுடைய ஆயுள் முடிந்து அவன்
இறந்து படுவான் என்பதும், கொண்டு என்றதனால்
அதுகாலை
அரசனின்றிக் கிடக்கும் நாட்டினுக்கு அவர் அரசராவார் என்பதும்
தெரிவிக்கப்பட்டன. கொடியோன் இறப்பதும் நல்லரசன் வருவதுமே
திருவுள்ளத்துக்கொண்டு சார்ந்தாராதலின் (985), "வேண்டுவார்
வேண்டியதே யீவான்" ஆகிய ஆலவாய்ப் பரமனார், அவர் தாம்
வேண்டுமதனையே அருள் செய்தாராகி, இவ்வாறு பின் விளைவு
கூறியருளினர் என்க.
முன்பு
இன்னல் புகுந்தன - அரசன் சமணர்திறத்திற்
றாழ்ந்ததும், அமணர் மொய்த்துக் கலாம் விளைத்ததும்,
சிவனடியாரையும் வன்மை செய்ததும் முதலாயின. 980 - 984
பாட்டுக்களிற் கூறிய அவை.
காத்து
- தீமை சாராமலும் நன்னெறியிற் பிறழாமலும்
உலகத்தைக் காத்தும், முதற்சைவமோங்கும்படி பாதுகாவல் புரிந்தும்.
பின்பு
உன் பணி செய்து - திருப்பணி செய்தற்கும்
அரசனதுகாவல் வேண்டப் படுதலின் முதலில்
மண்கொண்டு,
இன்னல் நீக்கிப். பின்பு பணி செய்து என்றார்.
"மாதவர் நோன்பும்
மடவார் கற்புங் காவலன் காவலன்றித் தங்கா " என்ற உண்மை
தோற்றக் கூறிய ஆசிரியரது அமைச்சுத்திரம் காண்க. பணிசெய்து
நம் பேருலகெய்துக என்று கூட்டியுரைத்தலுமாம்.
உன்பணி
- நீ நியதியாகச் செய்துவந்த சந்தனப்பணிவிடை.
பேருலகு
- நித்தியமாகிய நம்முலகு. வீட்டுலகம் - சிவபுரி.
ஏனைய உலகுகள் எல்லாம் அழியும் தன்மையுடைய சிற்றுலகுகள்
என்க.
எய்துக
என்ன என்பது எய்துகென்ன என வந்தது. 22