991.
|
அந்நாளிர
வின்க ணமண்புகல் சார்ந்து வாழும்
மன்னாகிய போர்வடு கக்கரு நாடர் மன்னன்
தன்னாளு முடிந்தது, சங்கரன் சார்பி லோர்க்கு
மின்னாமென நீடிய மெய்ந்நிலை யாமை வெல்ல.
24 |
(இ-ள்.)
மின் ஆம் என நீடியமெய் - மின்னல்
காணப்படும் சிறுகால அளவே நீண்டிருப்பதாகிய யாக்கை;
சங்கரன்சார்வு இலோர்க்கு - சிவபெருமானது சார்வு
பெறாதவர்களுக்கு; நிலையாமை - அந்த அளவுதானும்
நிலைக்காதாகும் என்ற உண்மையினையும்; வெல்ல - மேற்பட்டு
விளங்க; அமண்புகல் ... நாளும் - சமணர்களது புகலில் சார்ந்து
வாழும் அரசனாகிய வடுகக் கருநாடர் மன்னனுடைய வாழ்நாளும்;
அந்நாள் இரவின்கண் - அந்த நாளில் அவ்விரவே; முடிந்தது -
இறுதியுற்றது.
(வி-ரை.)
மின்னாமென நீடிய மெய் - மெய் என்ற
யாக்கையின் கால அளவு மின்னல்போன்ற கால அளவே
நீடிப்பதாம். உலகின் மக்களின் உடம்பு தங்கும் காலம் மிகச்
சுருங்கியதென்பது எல்லார்க்கும் ஒப்பமுடிந்த உண்மை. மெய்
உள்ளதுபோலக் காட்டிப் பொய்யாய் மறையும் உடலை
மெய்
என்பது உபசார வழக்கு என்பர் அறிவோர். இது குறிக்க இங்கு
மெய் என்றார். மின்னாம் என நீடிய -
சிறிதும் நீடித்து நில்லாத
இயல்பை நீடிய என்றது வினைபற்றி வந்த நிந்தையுவம அணி.
சங்கரன்
சார்விலோர்க்கு நிலையாமை - யாக்கை
நிலையாமை பற்றி மேற்கூறிய பொதுவிதியும் கடக்கப்பட்டு, மேலும்
நிலையாமையைப் பெறும் என்பர். "அத்தமும் ஆவியும்
ஆண்டொன்றி்ன் மாய்ந்திடும்" (திருமந்திரம்) என்பது முதலிய
திருவாக்குக்களால் அறியப்படுகின்றபடி அவரவர்க் களந்த வாழ்நாள்
தானும் சிவச்சார்பில்லாதார்க்குக் குறையும் என்பது சிறப்புவிதி.
மக்கள் வாழ்வு விரைவின் முடிவதா மெனின் சிவாச்சார்பில்லாதார்
வாழ்வு அதனினும் விரைய முடியும் என்பதாம். இதனால் சிவனடிச்
சார்புபெற்றாரது ஆயுள் நீளும் என்பதும் உய்த்துணரவைத்தார்.
மாந்தாதா சரிதமும், மார்க்கண்டேயர் வரலாறும். "கொதியுறு கால
னங்கி நமனோடு தூதர் கொடுநோய்க ளான பலவும், அதிகுண நல்ல
நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே"
(பியந்தைக்காந்தாரம் - பொது - 4), "பாரிதன் மேல் நீடி வாழ்வர்
தன்மையினா லவரே" (பழந்தக்க - சிவபுரம் - 11) என்ற ஆளுடைய
பிள்ளையார் திருவாக்குக்கள் முதலியனவும், "வாழ்நாளு
நனிபெறுவர்" முதலிய புராண வாக்குக்களும் காண்க.
வெல்ல
- இங்கு அச்சிறப்பு விதியினையும் கடந்து
வெல்லும்படியாக. வெல்ல - முடிந்தது என்று
கூட்டுக. அதற்குக்
காரணம் சிவனடிச்சார்பில்லாமையுடன் சிவனடியாரை வன்மைசெய்து
திருப்பணிமுட்டச்செய்த சிவாபராதமும் கூடியதனால் என்க. தக்கன்
வரலாற்றினை இங்கு நினைவுகூர்க.
மிக்கதாகிய
விரைவு குறிக்க அந்நாள் இரவின்கண் எனச்
சுட்டினார். இறைவர் மூர்த்தியாருக்கு அருள் செய்த அந்த என
முன்னறிசுட்டு.
போர்வடுகக்
கருநாடர் மன்னன் என்ற அதனால் 978 -
979-ல் கூறிய சரிதப் பகுதியும், "அமண்புகல் சார்ந்து வாழும்"
எனவும், "சங்கரன் சார்பிலோர்க்கு" எனவும் கூறியவாற்றால் 980-ல்
கூறிய பொருளும், வெல்ல என்றதனால் 981
முதல் 984 வரை
கூறிய பகுதியும் குறிக்கப்பட்டன. வெல்ல
- அந்நாள் அவ்விரவே.
நாளும் முடிந்ததற்குக் காரணங் காட்டியவாறாம்.
மிள்னாமென
நீடிய தன்மை இவ்வுலகிற்
பிறந்தாரெல்லாருக்கும் ஒப்பமுடிந்தது போல இம்மன்னனுக்கு
மாகியது; சங்கரன் சார்வில்லோர்க்கு அதனினும் மிக்க நிலையாமை
வருதலின் அக் கொடியோனுக்கு நாள்முடிந்தமை அவன்
நீற்றின்
சார்பு செல்லாது அருகந்தர் திறத்திற் றாழ்ந்தமையாலாகியது; அந்த
மிக்க நிலையாமையும் வென்று அந்நாள் அவ்விரவே முடிந்த
தன்மை அவன் அடியாரையும் வன்மைசெய்து சிவத்திருப்பணி
முட்டச் செய்ததனாலாகியது என்றிவ்வாறு கண்டுகொள்க.
இதற்கு இவ்வாறன்றி
நீடியமெய் சங்கரன் சார்பிலோர்க்கு
மின்னாம் என நிலையாமை வெல்ல என்றுகூட்டி, நீடித்த நிறை
ஆயுள் பெற்றிருக்கும் மெய்யும் சிவபெருமானது திருவருட்
சார்பில்லாதாருக்குப் பாவ மிகுதியாலே குறைந்து மின்னைப் போல
அற்பாயுளை அடையும் என்பதை யாவருக்கும் அறிவிக்கும்
காரணமாய் என்றுரைப்பாரு முண்டு. இப்பொருளில் வெல்ல
-
அறிவிக்க - புலப்படுத்த என்று பொருள்கொள்வர். 24
|