992. |
இவ்வாறுல
கத்தி னிறப்ப வுயர்ந்த நல்லோர்
மெய்வாழுல கத்து விரைந்தணை வார்க ளேபோல்,
அவ்வாறர னாரடி யாரை யலைத்த தீயோன்
வெவ்வாய்நிர யத்திடை வீழ விரைந்து வீந்தான். 25
|
(இ-ள்.)
இவ்வாறு ... அணைவார்களே - இப்படி உலகத்தில்
(அடியார்க்குத் தொண்டுசெய்து) மிகுந்த உயர்வுடைய நல்லோர்கள்
சிவனது உலகத்தில் விரைந்து சேர்குவரே; போல - அதுபோல;
அரனார் அடியாரை அவ்வாறு அலைத்த தீயோன் -
சிவபெருமானாரது அடியவர்களை மேற்சொல்லியபடி அலைவு
செய்த தீயவன்; வெவ்வாய் ... வீழ்ந்தான் - கொடிய நரகத்தினிடை
விரைந்து வீழும் பொருட்டு இறந்துபட்டான்.
(வி-ரை.)
ஆயுளின் எல்லையாகிய நாள் முடிந்தபின்,
உயிர்செல்லும் கதியினை எதிர்நிலை உவமை முகத்தால் அறிவிப்பது
இத்திருப்பாட்டு. இவ்வுடல்
விட்டுப்பிரிந்த பின்னை, ஆன்மாக்கள்,
தாந்தாம் செய்த நல்வினை தீ வினைகளுக்கு ஏற்றவாறு பிறவியிற்
செல்வன. முன்செய்வினைகள் மிகுதிப்படுமாயின் அவ்வாறு உடனே
பிறவியிற் றத்தம் வினைகளுக்கு ஏற்ற புண்ணிய பாவவுலகங்களிற்
செலுத்தப்பட்டு உரிய இன்பத் துன்பங்களை அனுபவித்து மீண்டும்
உயிர்கள் பிறவியில் வருவனவாம். நல்வினை எனப்படு
வனவற்றுக்குள் மேலாகிய சிவபுண்ணிய மிகுதியைப் பெற்ற
நல்லோர் மேற்கூறிய இரண்டு வகையுமன்றிப் மீளப்பிறவியில்
வாராத சிவனுலகத்தில் உடனே அணைகுவர். தீவினையின் மிக்க
தீமையாகிய சிவாபராதம் செய்தோர் உடன்பிறவியில் வாராமல்
நெடுங்காலம் கொடுமா நரகங்களில் அழுந்துமாறு செலுத்தப்படுவர்.
இவை உண்மை நூற்றுணிபுகளாம். இவையுணர்ந்து உலகமுய்யுமாறு
உவமை முகத்தால் ஆசிரியர் வற்புறுத்தி உணர்த்திய திறம் காண்க.
இவ்வாறு
- அடியாரை யலைத்தோர் மிகவும்
இழிவடைந்ததுபோல அடியார்க்குத் தொண்டுசெய்து மிகவும்
உயர்ந்த நல்லோர் எனக் கொள்க. இகரச் சுட்டுப் பின்னுள்ள
அவ்வாறரனடியாரை அலைத்த தீயோன் என்பதைச் சுட்டுகின்றது.
தீயோன் இவ்வாறு வீந்தான் என்று முடிப்பாருமுண்டு.
இறப்ப
உயர்ந்த - மிக்க உயர்ச்சிபெற்ற. இறப்ப
என்பது
தனக்கு மேற்பட்ட எல்லையின்மை குறிக்கும் வழக்கு. "இறப்பப்
புகழ்ந்தன்று" (பு. வெ - 11 - ஆண் 7 கொளு).
மெய்
வாழ் உலகம் - சிவலோகம். மெய்
-
சத்தாயுள்ளபொருள். சத்து வாழ்கின்ற உலகம். பொய்வாழ்வில்லாது
உண்மைவாழ்வுடைய உலகம் என்றலுமாம். ஏனைப் பிரமனுலகு -
தேவருலகு முதலியவற்றின் வாழ்வுகள்யாவும் ஒரு காலத்து
அழியக்கூடிய பொய் வாழ்வுகளாம் என்பது.
விரைந்தணைவார்களே
போல் - இவ்வுலகில் அளந்த
வாழ்நாள் எல்லையளவும், அது சிவ தருமத்தால் நீளும் அளவும்,
வாழ்ந்தபின், அதன்முடிவில், வேறு உலகங்களின் அனுபவம்
ஒன்றுமின்றி, விரைவாகச் சிவனுலகத்தில்
அணைவார்களேபோல
என்க. சிவன்பணி செய்வாரது ஆயுள் நீடிக்குமென மேற்பாட்டில்
எதிர்நிலை முகத்தால் உய்த்துணர வைத்ததனோடு இது முரணாமை
அறிக.
நல்லோர் மெய்வாழுலகத்து
விரைந்து அணைவார் போல
அத்தீயோன் நிரயத்துவீழ விரைந்து வீந்தான் என வினையின்
விரைவுபற்றி வந்த முரணுவமையணி. அவ்வாறு -
மேற்சொல்லியவாறு. 981 - 984 பார்க்க. "சரமாறே விரைகின்றேன்"
- (திருவாசகம்).
அரனாரடியாரை
... வீந்தான் - நிரயத்திடை வீழ்வதற்குக்
காரணங் கூறியவாறு. அடியாரை அலைத்தல் காரணமென்பார்
உடம்பொடு புணர்த்தியோதினார். விரைந்து என்றதன்
காரணம்
மேற்பாட்டில முடிந்தது என்றவிடத் துரைக்கப்பட்டது.
நிரயம்
- எரிவாய் நரகம். சிவனடியாரை அலைப்போர்
அலகைகளாய் எரிவாய் நரகிடை வெகுகாலம் நின்று அலைவர்
என்பது நூற்றுணிபு. "நாணரகத்து நிற்கும், அலகா வுறுவீர் அரனடி
யாரை அலைமின்களே" (பொன் - அந் - 14) என்ற கழறிற்றறிவார்
நாயனார் திருவாக்கும் காண்க. "ஒருமைச் செயலாற்றும் பேதை
யெழுமையுந், தான்புக் கழுந்தும் அளறு" என்ற திருக்குறளும்,
அதற்கு "முடிவில் காலமெல்லாம் தான் நிரயத்து உழத்தற்
கேதுவாங் கொடுவினைகளையே யறிந்து செய்து கோடல்
பிறர்க்கரிதாகலின் ஆற்றும் என்றார்" என்ற பரிமேலழகர்
உரையும்காண்க. இக்கருத்தேபற்றி முன்னர் "வன்புன்கண்
விளைத்தவன்" (989) என்றதும், மேல்வரும்பாட்டில் "முழுதும்
பழுதேபுரி மூர்க்கன்" என்பதும் காண்க. 25
|