996. "பன்முறை யுயிர்க ளெல்லாம் பாலித்து ஞாலங்
                                காப்பான்
றன்னெடுங் குடைக்கீழ்த் தத்த நெறிகளிற் சரித்து
                                  வாழும்
மன்னரை யின்றி வைகும் மண்ணுல கெண்ணுங்
                                 காலை
யின்னுயி ரின்றி வாழும் யாக்கையை யொக்கு"
                              மென்பார்,
29

     996. (இ-ள்.) வெளிப்படை. "பலமுறையாலும் எல்லா
வுயிர்களையும் காத்து உலகத்தைக் காப்பதற்காகத், தனது
பெருங்குடையின் கீழே உயிர்கள் தங்கள் தங்களுக்குரிய நெறிகளில்
ஒழுகி வாழச்செய்யும் மன்னரையில்லாமல் இருக்கும் மண்ணுலகத்தை
யெண்ணும்போது, அது, இனிய உயிர் இல்லாமல் வாழும் உடம்பை
ஒக்கும்" என்பாராகி, 29

     996. (வி-ரை.) பன்முறை பாலித்து - என்று கூட்டுக.
முறை
- முறைகளாலும். கருவிப்பொருளில் வந்த மூன்றனுருபும்
முற்றும்மையும் தொக்கன. பல முறையாவன உலகங்காவலுக்கு
அறநூல்களான் விதிக்கப்பட்ட வழிகள். "அறனிழுக்கா தல்லவை
நீக்கி" என்றதிருக்குறளும் அதன்கீழ்ப் பரிமேலழகருரைத்தவையும்
பார்க்க. பாலித்தல் - காத்தல்.

     காப்பான் - காக்கும் பொருட்டு. காப்பான் - வாழும்
என்று கூட்டுக. ஞாலம் - உலகம். இங்கு ஞாலத்துள்ள உயிர்களைக்
குறித்தது.

     நெடுங் குடை - பெருங்குடை. நெடுமை - பரப்புக்குறித்தது.
குடை - அரசாணையின் அடையாளம். ஆணையைக் குடையாக
உபசரித்துக் கூறுவது மரபு. "சிலைக்கீழ்" (695) என்ற
விடத்துரைத்தவை பார்க்க.

     தத்தம் நெறிகளிற் சரித்து - தங்கள் தங்கள்
நிலைகளுக்குரிய வழிகளில் அமைந்து அறத்தின் வழி வாழ்க்கை
செலுத்தி ஒழுகி.

     வாழும் - வாழச்செய்யும். வாழ்விக்கும். பிறவினை
தன்வினையாக வந்தது. வாழ்விக்கும் - மன்னரை என்க.
பெயரெச்சம் ஏதுப்பொருள் கொண்டதென்றலுமாம்.

     மன்னர் குடிகளுக்குச் செய்யவேண்டிய முறையினைக்கூறினார்.
புவிகாக்கும் பொருட்டு அரசர் செய்யத்தக்க முதற்காரியம் இதுவே
என்றதாம். இவ்விதிகள் திருக்குறள் முதலிய நீதி நூல்களாலும்
திருமந்திரமும் முதலிய அருள்வாக்குக்களாலும் அறியப்படுவன.

     பலவாகிய முறைகளையுடைய உயிர்களெல்லாம், ஞாலம்
பாலித்துக் காப்பான்றன் குடைக்கீழ்ச் சரித்து வாழும்; (ஆதலினால்)
மன்னரையின்றி வைகும் மண்ணுக்கு ... உயிரின்றி வாழும்
யாக்கையை ஒக்கும் என்று வாழும் என்பதை வினைமுற்றாகக்
கொண்டு, முடித்துரைத்துக் கொள்வதுமொன்று.

     மன்னரை இன்றி - அரசனது காவலில்லாது; அரசனில்லாது.
மண் உலகு ஒக்கும் என்க. அரசனில்லா நாடு உயிரில்லாத
உடம்புபோலும் என்றபடி. அஃதாவது தற்காப்பு நியமமின்றிப்,
பிறர்கொண்டு வைத்தபடி அமையத்தக்க ஒரு பண்டமாகும் என்பது.
அரசனே உலகுக்கு உயிராவன் என்பது முந்தையோர் கண்ட முறை.
"முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட், கிறையென்று வைக்கப்
படும்" என்ற திருக்குறளின் கருத்தும், "தனிமுடிகவித் தாளும்
அரசினும்" என்ற திருக்குறுந்தொகையின் கருத்தும், "நெல்லு முயிரன்றே நீரு முயிரன்றே, மன்ன னுயிர்த்தே மலர்தலை யுலகம்"
என்ற புறநானூறும் ஈண்டுச் சிந்திக்க.

     இன் உயிர் இன்றி வாழும் யாக்கை - உயிரில்லாது உடல்
வாழாது; அதுபோல மன்னனின்றி மண்ணுலகு வாழாது. தலைதடுமாறி
ஒழியும் என்பதாம். வினைபற்றி வந்த அபூதவுவமை.

     என்பார் - என்று கூறுவாராகி. என்பார் (996) எண்ணி -
என்று (997) ‘ஏந்துக' என்று - கைம்மாவைக் கண்கட்டிவிட்டார்
(998) என இம்மூன்று பாட்டுக்களையும் தொடர்ந்து முடித்துக்
கொள்க.


     1. குறிப்பு - இப்பாட்டும் மேல் வரும் பாட்டும்
ஐயப்பாடுள்ளன.

      ஐஞ்சீர்க் கலிநிலைத்துறையாகிய ஒரேவகைச்
சந்தயாப்பினாலியன்ற இப்புராணத்தினிடையே, இப்பாட்டும்
மேல்வரும் பாட்டும் அறுசீர்க்கழி நெடில் விருத்தமாகிய
வேறுயாப்பிற் றனிமையாய் உட்புக்கன போலக் காணப்படுவன.
இப்பாட்டின் பொருள் முன் 995லும், மேல் வரும்பாட்டின் பொருள்
998லும் கூறப்பட்டனவேயாம். இவற்றில் ஆசிரியரது பொருட்சிறப்பும்
சொற்சிறப்பும் காணப்படவில்லை. இப்பாட்டுக்களின்றியே சரிதம்
தொடர்ந்து செல்கின்றதும் காணலாம். இவை இடைச் செருகல்களாக
இருத்தல் கூடுமோ? என்பது அச்சத்தோடு எழுகின்ற ஐயப்பாடு.
இதுபற்றி எனது சேக்கிழார் 220 பக்கம் பார்க்க.