999. கண்கட்டிவி டுங்களி யானையக் காவன் மூதூர் மண்
கொட்புற வீதி மருங்கு திரிந்து போகித்
திண்பொற்றட மாமதில் சூழ்திரு வால வாயின்
விண்பிற்பட வோங்கிய கோபுர முன்பு மேவி,
  32

     999. (இ-ள்.) வெளிப்படை. கண்கட்டி விடப்பட்ட
களிப்புடைய அவ்வியானை, அந்தக் காவலுடைய மூதூரின் தலம்
எங்கும் மண் சூழ, வீதிகளின் பக்கம் திரிந்துபோய்த், திண்ணிய
அழகிய பெரிய கபாலி மதில்சூழ்ந்த திருவால வாயிலில், ஆகாயமும்
தாழவோங்கி உயர்ந்த கோபுரத்தின் முன்வந்து, 32

     999. (வி-ரை.) விடும் - விடப்பட்ட. படு விகுதி தொக்கு
நின்றது.

     களியானை - மதம்பொருந்திய யானை. முன் பாட்டில்
"பெய்ம்மாமுகில் போல் மதம்பாய்" என்ற கருத்துமிது.

     அக்காவல் மூதூர் - மதுராபுரி (979). அகரம் முன்னறிசுட்டு.
காவல் - அரண்களையுடைய என்க. "கண்ணுதலான் றன்னுடைய
காப்புக்களே" என்ற காப்புத் திருத்தாண்டகத்தினுள் அப்பர்
சுவாமிகள் அருளியபடி, இறைவன் காக்கின்ற ஊர் என்றலுமாம்.
திருவிளையாடற் புராணம் பார்க்க. "மோடிபுறங்காக்குமூர்"
(பிரமபுரம் - காந்தாரம் - சக்கரமாற்று 8) என்றது ஆளுடைய
பிள்ளையார்தேவாரம். "அஞ்சு வான்கரத் தாறிழி மதத்தோ ரானை
நிற்கவும்" (திருக்குறிப்பு - புரா - 81) என்றதும் காண்க.

     மண்கொட்புற வீதி மருங்கு - யானை பல வீதிப்பக்கங்களிற்
சுற்றி வந்தமையின் தலத்தின் மண் கிளம்பிச் சுழன்றதென்க.

     திண்பொன் தடமாமதில் சூழ் திரு ஆலவாய் - திண்மை
- வலிமை, பொன்மை - அழகு. பொன் பூசிய சிகரங்களையுடைமை
குறித்ததென்றலுமாம். தட - என்றதனாற் பெருமையும், மா -
என்றதனால் உயரமும் குறிக்கப்பட்டன. திரு ஆலவாய் கோயிலின்
பெயர். "கபாலிநீள் கடிம்மதிற் கூடி லால வாயிலாய்" (கௌசிகம் -
திருவாலவாய் - 1) என்று ஆளுடைய பிள்ளையார் தேவாரத்திற்
போற்றப்பட்ட
கபாலி மதிலின் பெருமைகருதி இவ்வாறு
சிறப்பித்தார்.மதில் - கபாலி மதில். தட மா - ஒருபொருட்
பன்மொழியென்றலுமாம்.

     விண்பிற்பட ஓங்கிய - மிக்க உயர்ச்சி குறித்தது.
தேவேந்திரன் முதலிய விண்ணுலகத்தவர்களும் வந்து இதன்
அடியிற்றாழும் பெருமையும் குறிப்பாலுணர்த்தினார்.

     மேவ - என்பதும் பாடம். 32