1144திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

கொன்றை சேர்சடை யான்கொள்ளம் பூதூர்
நன்று காழியுண் ஞானசம் பந்தன்
   இன்றுசொன் மாலைகொண் டேத்தவல் லார்போய்
என்றும் வானவ ரோடிருப் பாரே.

(11)

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு:- நம்பனை உள்கச் செல்லவுந்துக என்று சிந்தையார் தொழ நம்பனே அருள் நல்குமாறு! என்று திருவருளைப் போற்றியது.
பதிகப் பாட்டுக் குறிப்பு:- (1) கொட்டம் - வாசனைப் பண்டம்; நம்பனே அருள் நல்குமாறு - என்க. நல்குமாறு - நல்கும் வழி இது. ஆறு - ஆற்றின் கண்; செல்ல - ஓடம் செல்ல என்ற குறிப்புமாம்; -(3) விலையிலாட்கொண்ட விகிர்தன் - உயிர்களை அநாதியே ஆளாகக் கொண்டுடைய தலைவன். "தொடர்வுடைய திருவடியைத் தொழுவதற்கு" (கழறி. புரா - 131) என்று இக்குறிப்பினை ஆசிரியர் விளக்குதல் காண்க; நம்பிகளைத் தடுத்தாட்கொண்ட வரலாறும் கருதுக; - (4) கண் மலரும் - கண்போல மலர்தற்கிடமாகிய; -(5) பொன் - பொன்போன்ற பூந்துகளும், இதழ்களும்; -(6) ஓடம் வந்தணையும் - சரித வரலாற்று விண்ணப்பக் குறிப்பு; விண்ணப்பமாகக் கேளாது இயல்பு குறித்த தன்மையணியில் வைத்துக் கூறியநிலை காண்க. "குரும்பை யாண்பனை யீன்குலை ஓத்தூர்" முதலியவை கருதுக. மேற்பாட்டில் "ஆறுவந் தணையும்" என்றதும் இக்குறிப்பு. பதிக முழுதும் பொதுவாகவும் இவை சிறப்பாகவும் சரித வரலாற்றின் அகச்சான்றுகளாதலும் காண்க; - (9) பருவரால் உகளும் - நீர்ப்பெருக்குக் குறித்தது; "நீரகக் கழனி"(10); "கோட்டகக் கழனி"(2) என்பனவுமிக்குறிப்பு.
குறிப்புக்கள் :- (1) இப்பதிகம் திருக்கொள்ளம்பூதூர் இறைவரை ஆற்றின் இடையே உய்த்த தோணியின் இருந்தபடி பாடியருளியது; மேற்பாட்டில் (2798) போற்றி செய்தார் என்றதனாற் கருதப்படும் பதிகம் கிடைத்திலது.
(2) ஈரடி மேல்வைப்பு என்றது பதிக யாப்பமைதி குறித்த பெயர், பதிகம் ஈரடியாலமைந்த தாழிசை விருத்தத்தின் மேல் மகுடவைப்பாக வைத்த "செல்ல வுந்துக....நம்பனே" என்ற இரண்டடிகளை உடையது. இவ்வாறு மேல்வைப்பாக வருவன இங்குப்போல ஒன்றேபட வருவனவும், திருப்பூந்தராய் ஈரடிமேல் வைப்புப் பதிகத்திற்போல வேறுபட வருவனவும் உண்டு. திருவாவடுதுறைப் பதிகக் குறிப்பிற் கூறியவை பார்க்க (2323).
தலவிசேடம் :- திருக்கொள்ளம்பூதூர் - காவிரித் தென்கரையில் பாடல் பெற்ற தலங்களுள் 113-வது பதி; வில்வவனம் என்று கூறுப. திருக்களம்பூர் என்று வழங்குவது; ஆளுடைய பிள்ளையார் ஆற்றின் வெள்ளத்துள் பதிகம் பாடி ஓடம் செலுத்திவந்து வழிபட்ட தலம். வரலாறு புராணத்துள் முன் உரைக்கப்பட்டது. இவ்வரலாறு பதிகத்து 6 - 7 பாட்டுக்களினும் குறிக்கப்பட்டுள்ளது. அழகிய திருப்பணி முற்றிப் பெருஞ் சாந்தியும் அணிமையில் நிகழ்ந்துள்ளது. பிள்ளையார் ஓடம் செலுத்தியது பற்றிய விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பெறுகின்றது. சுவாமி - வில்வ வனநாதர்; அம்மை - சௌந்தர நாயகி; மரம்- வில்வம்; பதிகம் 1.
இது கொரடாச்சேரி நிலையத்தினின்றும் வடக்கில் கற்சாலை வழி 5 1/2 நாழிகையளவில் உள்ள செல்லூரை அடைந்து அங்குநின்றும் மேற்கே 1 நாழிகையளவில் அடையத்தக்கது.