[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1267

திருக்கச்சிநெறிக் காரைக்காடு
திருச்சிற்றம்பலம்

பண் - பஞ்சமம் - 3-ம் திருமுறை

வாரணவு முலைமங்கை பங்கினரா யங்கையினிற்
போரணவு மழுவொன்றங் கேந்திவெண் பொடியணிவர்
காரணவு மணிமாடங் கடைநவின்ற கலிக்கச்சி
நீரணவு மலர்ப்பொய்கை நெறிக்காரைக் காட்டாரே.

(1)

கண்ணாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டுறையும்
பெண்ணாருந் திருமேனிப் பெருமான தடிவாழ்த்தித்
தண்ணாரும் பொழிற்காழித் தமிழ்ஞான சம்பந்தன்
பண்ணாருந் தமிழ்வல்லார் பரலோகத் திருப்பாரே.

(11)

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- வெண்பொடி யணிவர், மானினுரியதளர் என்றின்ன பல தன்மைகளா லறிந்து போற்றப்படுபவர் கச்சி நெறிக்காரைக்காட்டாராகிய இறைவர்.
பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) அணவு - பொருந்தும்; சொற்பொருட் பின்வருநிலை. கடை நவின்ற - சிறந்து விளங்கும்; நவிலுதல் - எடுத்துக்காட்டுதல் என்ற பொருளில் வந்தது: பொய்கை - இத்தலத்துச் சிறப்பாய் விளங்கும் இந்திர தீர்த்தம்; 2-ம் பாட்டுப் பார்க்க;- (2) அதள் - தோல்; அதளர் - தோலுடையர் ;- (3) கொடியிடை - கொடி போன்ற இடையினை உடைய உமையம்மையார்; கொடியதன்மேல் ஏறு அணிந்தார் - இடபக் கொடி ஏற்றார்;- (4) பிறைநவின்ற - பிறை விளங்கிய; மறை நவின்ற - மறைகளைச் சொல்லிய; சிறை - சிறகு; நிறை நவின்ற - நிறைந்த;- (5) குன்றாத - வளையாத; ஒன்றாதார் - பகைவர்; நின்றார் - போர் செய்யாது நின்றவாறே யிருந்தவர்;- (6) மலை வில்லின் என்க ;- (7) எற்று - மோதுதல்; தொழிற்பெயர் ;- (8) ஆழ்கிடங்கும்...நீண்மறுகு - இக்கருத்தை ஆசிரியர் விரித்துரைத்தல் காண்க (1163); - (9) ஊண்...கொள்வர் - நஞ்சு ஊணாயினும், பலி கொள்வர் என்றது பலி ஏற்பது உணவுப் பொருட்டன்று என்றதாம்; - (10) வரை ஆகம் - மலைபோன்ற திருவுடம்பு; - (11) கண் ஆரும் - அழகிய.
தலவிசேடம் :- திருக்கச்சிநெறிக்காரைக்காடு - தொண்டை நாட்டில் 5-வது பதி; இது கச்சிமாநகரத்தின் கீழ்க்கோடியிலிருப்பதால் கச்சி என்றதனுடன் சேர்த்துச் சொல்லப்படும். காரைமரம் அடர்ந்த காட்டிலிருப்பதாலும் அங்குச் சேர்ந்தவர்க்குச் சித்தி தருதலாலும் இப்பெயர் பெற்றது. இதற்குச் சத்தியவிரதத் தானம் என்றும் பெயருண்டு. "சத்திய விரதங் காரைத் தருவனஞ் செறித லாலே, சித்திசேர்ந்தவர்க்கு நல்குந் திருநெறிக் காரைக் காடென், றித்திருப் பெயரி னோங்கு மென்பர்" என்பது காஞ்சிப் புராணம். ஏனை வரலாறுகளைத் திருநெறிக்காரை - படலத்துட் பார்க்க. பிரம கற்பத்தில் ஆறாவது மன்வந்தரத்தில் சிவி என்ற இந்திரன் வாழ்க்கையில் வெறுப்புற்று இருவினையொப்பு வாய்ந்ததனால் தன் குருவாகிய வியாழனுடைய உபதேசப்படி இங்கு வந்து வழிபட்டு வீடுபேறு பெற்றனன். அதனால் இஃது இந்திரபுரமென்றும், தீர்த்தம் இந்திர தீர்த்தம் என்றும் பெயர் பெற்றன. மதிக்கும் தாரைக்கும் பிறந்த புதன் இங்கு வழிபட்டுக் கிரகநிலை பெற்றனன். இங்குத் தன்வார நாளில் முழுகி வழிபாட்டோர்க்கு வீடுபேறும் வேண்டும் வரங்களும் தரும்படி இறைவரை வேண்டி அவ்வாறே வரமும் பெற்றனன். இத்தீர்த்தத்தில் புதன்கிழமையில் நீர்மூழ்கி