எத்திசையுந் தொழுதேத்த "மத்த யானை" யெடுத் "தெதிர்கொள் பாடியினை யடைவோ" மென்னுஞ் சித்தநிலைத் திருப்பதிகம் பாடி வந்து செல்வமிகு செழுங்கோயி லிறைஞ்சி நண்ணி அத்தர்தமை யடிவணங்கி யங்கு வைகி யருள்பெற்றுத் திருவேள்விக் குடியி லெய்தி முத்திதரும் பெருமானைத் "துருத்தி கூட" "மூப்பதிலை" யெனும்பதிக மொழிந்து வாழ்ந்தார். | 121 | (வி-ரை.) மத்தயானை - பதிகத் தொடக்கமாகிய முதற்குறிப்பு. "எதிர்கொள்பாடியினை அடைவோம்" என்னும் இது பதிகக் கருத்தாகிய மகுடம்; "எதிர்கொள்படி யென்ப தடைவோமே" (பதிகம்-2); இது வரும் வழியிற் பாடி அருளியது; திருமுன்பு பாடிய பதிகம் கிடைத்திலது! திருவேள்விக்குடி - துருத்தி (கூட) இவ்விரண்டும் எதிரெதிராய்க் காவிரியின் இருகரையிலும் உள்ளன. இரண்டும் சேர்ந்து ஒரு தலமாகக் கருதப்படும். "திருத்துருத்தியும் வேள்விக்குடியும்" என்ற பிள்ளையார் பதிகமும், ஆண்டுரைத்தவையும் பார்க்க. கூட - சேர்த்து - "வேள்விக்குடி தண்டுருத்தி எங்கோன்" என்பது பதிகம். "பகலிடம் புகலிடம்...துருத்தியார்;...இரவிடத் துறைவர் வேள்விக்குடியே" (பிள். தேவா). முப்பதிலை f- பதிக முதற் குறிப்பும் தொடக்கமுமாம். வாழ்ந்தார் - வாழ்வு பெற்றார்; சிவபூசையும் வழிபாடுமே உயிர்களுக்கு நல்வாழ்வாவது என்பது குறிப்பு. சித்தநிலைத் திருப்பதிகம் - உலக நிலையாமையை வற்புறுத்தி மனங் கொண்டு நிறுத்தும் திருப்பதிகம். பதிகக் குறிப்புப் பார்க்க. பாடிநைந்து - என்பதும், செல்வமலி - என்பதும் பாடங்கள். |
|
|