பாடல் எண் :3632

"எத்தன்மைய ராயினு மீசனுக் கன்பர் என்றால்
அத்தன்மைய ராநமை யாள்பவ" ரென்று கொள்வார்
"சித்தந்தெளி யச்சிவ னஞ்செழுத் தோதும் வாய்மை
நிந்தத் நியம"மெனப்போற்று நெறியி னின்றார்.
3
(இ-ள்) எத்தன்மையராயினும்....என்றால் - குலம், முதலியவற்றால் என்ன தன்மையுடையோர்களே யானாலும் சிவபெருமானுக்கு அன்பர்கள் என்னப்பட்டார்களானால்; அத்தன்மையராம்...கொள்வார் - அவரே நம்மையாளாகவுடையவர்கள் என்ற துணிபும் கொள்வாராய்; சித்தம்....நின்றார் - சித்தம் தெளிவு பெறும் பொருட்டுச் சிவனது திருவைந் தெழுத்தினையும் விதிப்படி ஓதுகின்ற வாய்மையினையே நித்தமும் தமது நியமமெனக் கொண்டு போற்றுகின்ற ஒழுக்கத்தின் நின்றார்.(வி-ரை) எத்தன்மையராயினும் - குலம் - நலம் - பண்பு முதலியவற்றால் கீழோராயினும் என்பது குறிப்பு. உம்மை இழிவு சிறப்பு; "நலமில ராக நலம துண்டாக நாடவர் நாடறி கின்ற, குலமில ராகக் குலமதுண்டாக" (தேவா);
என்றால் - என்று சொல்லப்பட நின்றாராயின்; காணப்பட்டாராயின்.
அத்தன்மையர் - ஈசனன்பர் என்ற அத்தன்மையுடையோர்; அகரம் முன்னறி சுட்டு.
ஆள்பவர் - தலைவர்; நாளயானர் என்ற கருத்து.
கொள்வார் - துணிவு கொள்வாராகி.
நித்தம்......நியமம் எனப் போற்றும் நெறி - "அஞ்செழுத்தும் விளம்பியல்லான் மொழியான் - நித்த நியமன்" என்ற வகைநூலின் கருத்தை விரித்தவாறு. திருவைந்தெழுத்தை ஓதும் நித்த நியமமானது சித்தந் தெளிவிக்கும் சிறந்த சாதனமா மென்பது" விதி யெண்ணு மஞ்செழுத்தே" என்ற ஞானசாத்திரத்தானு முணர்க. அஃதாமாறு அனுபவமுடைய தேசிகர்வாய்க் கேட்டுணர்க. சிவன் அஞ்செழுத்தினால் இறைவர் சித்தந் தெளிவிக்கு நிலைபற்றி "வைத்த நிதி பெண்டீர் மக்கள் குலங் கல்வியென்னும், பித்த வுலகிற் பிறப்போ டிறப்பென்னும், சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த, வித்தகத் தேவர்" (திருவா - கோத் - 6) என்பது முதலிய திருவாக்குக்கள் காண்க. தெளிதலாவது காமாதி குற்றங்களினீங்கிச்,சிவனே பொருளென்ற துணிவு பெறுதல்.
சிவன் அஞ்செழுத்து - "அஞ்செழுத்தி னாமத்தான்", "திருநாம மஞ்செழுத்து" என்றபடி சிவன் திருநாமமாவது.
நித்த நியமம் - நாடோறும் வழுவாது செய்யும் கடமை.
போற்றுதல் - காத்தல்; துதித்தல் என்றலுமாம்.
அத்தன்மையர்தாம் - தெளியத் திருவஞ்செழுத்தும் - என்பனவும் பாடங்கள்.