பாடல் எண் :3783

பாண னார்பத் திரனாரும் பைம்பொன் மௌலிச் சேரலனார்
காணக் கொடுத்த நிதியெல்லாங் கண்டு மகிழ்வுற் றதிசயித்துப்
“பேண வெனக்கு வேண்டுவன வடியேன் கொள்ளப், பிஞ்ஞகனார்
ஆணை யரசு மரசுறுப்புங் கைக்கொண் டருளுÓ மெனவிறைஞ்ச,
36
(இ-ள்) பாணனார்...அதிசயித்து - பாணபத்திரனாரும் பசியபொன் மகுடம் சூடிய சேரர் பெருமான் முன் கூறியபடி தாம் காணக் காட்டிக் கொடுத்த நிதிகள் எல்லாவற்றையும் கண்டு மகிழ்ந்து அதிசயப்பட்டு; பேண...கொள்ள - எனக்குப் பேணுதற்கு வேண்டுவனவற்றை அடியேன் பெற்றுக்கொள்ள; அரசும்..கைக்கொண்டருளும் - அரசாட்சியும் அதற்குரிய அங்கங்களும் நீரே கைக்கொண்டருளுங்கள்; பிஞ்ஞகனார் ஆணை - இஃது இறைவரது ஆணை; என இறைஞ்ச - என்று சொல்லி வணங்க. (வி-ரை) மௌலி - மகுடம் - முடி - கிரீடம். இது மோலி எனவும் வரும்.
காணக்கொடுத்த நிதி எல்லாம் கண்டு - “காட்டி எனÓ முன்பாட்டிற் கூறியபடி காணக் கொடுத்த என்க.
கண்டு - சிறப்புக் காட்சி; அதிசயித்து - “அதிசயம் கண்டாமேÓ (திருவா).
எனக்குப் பேண வேண்டுவன என்க. பேணுதல் - ஈண்டு விரும்பிக் கொள்ளுதல் என்ற பொருளில் வந்தது.
கைக்கொண்டருளும் - (இது) பிஞ்ஞகனாரது ஆணை என்க - “குறைவின்றித்தரÓ (3774); “நிதி கொடுக்கÓ (3775) என்ற அளவே இறைவர் ஆணையிட்டருளியிமையினாலும், அரசு பெறுதல் தமக்குத் தகாமையினாலும், “மாண் பொருள் கொடுத்து வரவிடுப்பதுவேÓ என்ற திருமுகப் பாசுரத்தினை உட்கொண்டு “பிஞ்ஞகனார் ஆணைÓ என்றார். ஆணைப்படி வந்த அரசு என்றுரைத்தலுமாம்.
அரசும் அரசு உறுப்பும் - அரசு - அரசாட்சியும் அரசராந் தன்மையும்; உறுப்பு - அதற்குரிய படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்னும் அரச அங்கங்கள் ஆறு.
கைக் கொண்டருளும் - புரந்த அரசும் கொள்ளும் (3782) என்று நினைந்து கூறிக் கொடுத்துவிட்டாராதலின் அவ்வாறு கொடுத்ததனை மீளவும் கைக்கொள்ளும் என்றார். கொடுத்த பொருளை மீண்டும் கைக்கொள்ளுதல் அறநூல்விதியிற் கூடாதென்று மறுக்கவும் கூடுமாதலின் அவ்வாறு மறாத வண்ணம் பிஞ்ஞகனார் ஆணை என்றார்; ஆணை எல்லாவற்றுக்கும் மேலாய் நிற்பதாம் என்பது குறிப்பு.