பாடல் எண் :4134

நலம்பெருகுஞ் சோணாட்டு நாட்டியத்தான் குடிவேளாண்
குலம்பெருக வந்துதித்தார் கோட்புலியா ரெனும்பெயரார்
தலம்பெருகும் புகழ்வளவர் தந்திரியா ராய்வேற்றுப்
புலம்பெருகத் துயர்விளைப்பப் போர்விளைத்துப் புகழ்விளைப்பார்,
1
(இ-ள்) நலம் பெருகும்.....பெயரார் - நன்மை பெருகுகின்ற சோழநாட்டில் திருநாட்டியத்தான் குடியில் வேளாளர் குலம் புகழால் மிகப் பெருகும் படி வந்து அக்குலத்தில் அவதரித்தவர் கோட்புலியார் என்னும் பெயரினை யுடையவர்; தலம்பெருகும்...விளைப்பார் - உலகில் பெரு ஆட்சி நிகழ்கி்ன்ற புகழினையுடைய சோழமன்னரது சேனாபதியாராகிப் பகையரசரது நாட்டவர்க்கு மிக்க துன்பம் விளையும்படி போர் செய்து புகழ் விளைப்பாராய்,
(வி-ரை) குலம் பெருகுதல் - குலம்புகழாற் பெருக நிகழ்தல்; உயர்வடைதல்; தந்திரியார் - சேனாபதியார்; தந்திரம் - சேனை; வேற்றுப்புலம் - பகைவரது நாடு; புலம் - இடம்; இடவாகு பெயராய் மக்களைக் குறித்தது; வேறு - பண்பாகு பெயராய்ப் பகைவேந்தரைக் குறித்தது.
வேற்றுப்புலம்........போர் விளைப்பார் - இவர் போர் முனையிற் சென்று போர்புரிந்தாற் பகைவரது நாடுகளில் பெருகிய துன்பம் வருவதன்றி வேறில்லை; இவரது வெற்றியினால், என்பது, நலம் பெருகும் - நன்மைமிக்க; துயர்பெருக விணைப்ப என்க.
புகழ்விளைப்பார் - வெற்றியினால் தமது அரசருக்கும் தமக்கும் புகழ் பெருகச் செய்வார். தலம் பெருகும் - உலகிற்சிறந்த;
சோணாட்டு - சோழநாட்டிலே. சோழன்நாடு - சோணாடு என வந்தது - மருஉ மொழி.
துயர்விளைய - என்பதும் பாடம்.