திருவிரா மேச்சரத்துச் செழும்பவளச் சுடர்க்கொழுந்தை பரிவினாற் றொழுதகன்று, பரமர்பதி பிறபணிந்து பெருவிமா னத்திமையோர் வணங்குபெருந் திருச்சுழியல் மருவினார் வன்றொண்டர் மலைவேந்த ருடன்கூட. | 110 | (இ-ள்) திரு விராமேச்சரத்து...அகன்று - திருவிராமேச்சரத்தில் செழும்பவளம் போன்ற சுடர்க்கொழுந்தாகிய இறைவரைத் தொழுது சென்று; பரமர் பதிபிறபணிந்து - இறைவரது திருப்பதிகள் பிறவற்றையும் பணிந்து போய்; வன்றொண்டர் மலைவேந்தருடன்கூட - வன்றொண்டப் பெருந்தகையார் மலைநாட்டரசராகிய சேரலனாருடனே கூட; பெருவிமானத்து....மருவினார் - பெரிய விமானங்களில் வந்து தேவர்கள் வணங்கும் பெரிய திருச் சுழியலினை வந்து சேர்ந்தார். (வி-ரை) பரமர்பதிபிற- இளையான்குடி - தஞ்சாக்கை - முதலாயின என்பது கருதப்படும்; தஞ்சாக்கை - தேவார வைப்புத்தலங்களுள் ஒன்று. தஞ்சாக்கூர் என வழங்கப்படும். பெருவிமானத்து இமையோர் வணங்கும் - ஆகாய விமானங்களுடன் செல்லும் வானோர் தமது விமானங்களுடன் வந்து வணங்குகின்ற என்க. “விண்ணவர்கள் வியப்பெய்தி விமானத்தோ டும்மிழியும் மிழலை யாமேÓ (பிள் -மேகரா - வீழி - 10). மலைவேந்த ருடன்கூட வன்றொண்டர் மருவினார் - என்க. ஆர்வம் அவருக்கு முன்னே வந்தது என்ற குறிப்புப்பட வினைமுற்றை முன் வைத்தார்; சுழியல் - சுழியலினை. பவளக் கொழுந்து - செம்மைநிறமும் கடலணிமையும் குறித்தது. மலைவேந்தர் - மலை நாட்டரசர் - சேரமான். |
|
|