பாடல் எண் :3862

“காளையார் தமைக்கண்டு தொழப்பெறுவ தென்Óறென்று
தாளைநா ளும்பரவத் தருவார்பாற் சார்கின்றார்
ஆளைநீ ளிடைக்காண வஞ்சியநீர் நாயயலே
வாளைபாய் நுழைப்பழன முனைப்பாடி வளநாடர்,
115
(இ-ள்) காளையார்...என்று - காளையாராகிய இறைவரைக் கண்டு தொழப் பெறுவதென்று கொலோ? என்று பாடி; ஆளை...வளநாடர் - மனிதரைத்தூரத்தே காண அஞ்சிய நீர்நாயின் பக்கத்திலே வாளைமீன்கள் பாயும் நுழை சேற்றினையுடைய வயல் சூழ்ந்த திருமுனைப்பாடி வளநாட்டின் தலைவராகிய நம்பிகள்; தாளை...சார்கின்றார் - திருவடிகளை நாளும் - பரவும்படி தரும் பரமரிடத்துச் சார்கின்றாராகி,
(வி-ரை) காளையார்...என்று - இது பதிகக் கருத்து. காளையார் - கானப்பேர் இறைவர் பெயர்; கனவிற்கண்ட காளை வடிவம் பற்றிக் “காளையார்Ó என்றார்; “காளையையேÓ என்பது பதிகமகுடம்.
தாளை நாளும் பரவத்தருவார் - தமது திருவடியைத் தினமும் துதிக்கும் பேறும் அவரே தந்து அருளினாலன்றி வாய்க்காது என்பது; “அவனரு ளாலே அவன்றாள் வணங்கிÓ (திருவா); “தன்னை நினையத் தருகின்றான்Ó (11ம்-திருமுறை நம்பிவிநாயகர் - இரட் - மாலை.1); நாளும் பரவத்தாள் தருவார் - என்று கூட்டி அதற்குத் தக உரைத்தலுமாம்; நாளும்பரவ - நாடோறும் சிவாகமவிதிப்படி சிவபூசை செய்து போற்ற என்ற குறிப்பு தந்தது; திருத்துறையூரில் நம்பிகள் தவநெறி வேண்டிப் பெற்றுப் பூசித்தமை (226) முன் உரைக்கப்பட்டது; பரவுதல் - பாடுதல்; “அருச்சனை பாட்டேயாகும்; ஆதலால் மண்மே னம்மைச், சொற்றமிழ் பாடுகÓ (216) என்று ஆணையிட்டுப் பாடும் பரிசு தருவார் என்க.
வளநாடர் - சார்கின்றார் - என்று கூட்டுக. சார்கின்றார் - சார்கின்றாராகி - முற்றெச்சம்; சார்க்கின்றார் - எய்தி என்று மேல்வரும் பாட்டுடன் தொடர்ந்து கொள்க.
ஆள் - மனிதர்; ஆள்வரவினை; நீளிடை - தூரத்தே.
காண அஞ்சிய நீர்நாய் - கண்டு பயந்த நீர்நாயின்; நீர்நாய் - நீரில் வாழும் சிறிய விலங்குவகை; “நீர்நாய் வாளை நாளிரை பெறூஉம்Ó (குறுந் - 364); இது மக்கள்வரவினைத் தூரத்தே காணவும் அஞ்சி ஒளிக்கும் இயல்புடையது. பாய் நுழைப்பழனம் - பாய்தற்கிடமாக இளகிய சேற்றினையுடைய வயல். நுழை - நுழையும் தன்மையுடைய இளகிய சேறு என்ற பொருளில் வந்தது.