மங்கலமாம் பூசனைகள் பரவையார் செயமகிழ்ந்து தங்கியினி தமர்கின்றார் தம்பிரான் கோயிலினுட் பொங்குபெருங் காலமெலாம் புக்கிறைஞ்சிப் புறத்தணைந்து நங்கள்பிரா னருள்மறவா நல்விளையாட் டினைநயந்தார். | 125 | (இ-ள்) மங்கலமாம்...அமர்கின்றார் - மங்கலமாகும் மாகேசுவர பூசைகளை யெல்லாம் பரவையார் செய்ய மகிழ்ந்து ஏற்று அங்குத் தங்கி இனிதாக விரும்பி எழுந்தருளி யிருக்கின்றார்களாய் நம்பிகளும் சேரனாரும்; தம்பிரான்...அணைந்து - தமது பெருமானாராகிய புற்றிடங்கொண்ட இறைவரது திருக்கோயிலினுள் சிறப்பு மிகுந்த வழிபாட்டுக்குரிய பூசாகாலங்களிலெல்லாம் புகுந்து வணங்கிப் புறத்துப் போந்து; நங்கள்பிரான்....நயந்தார் - நம்பிரானாரது திருவருளை ஒரு காலமும் மறவாத நிலையில் நல் விளையாட்டுக்களை விரும்பினர். (வி-ரை) மங்கலமாம் பூசனைகள் - இவை மாகேசுவர பூசை நிகழ்ச்சிகளும், திருவமுதூட்டியபின் செய்யும் உபசரிப்புக்களும் ஆம் (3824); “பூசனைகளெல்லாம்Ó (3825); மங்கலமாம் - அடியார்பாற் செய்யும் இவை நித்திய மங்கலமாகிய சிவத்தன்மை யடைதற்கேதுவாவன; ஏனை உலகினர்பாற் செய்வன அவ்வரறன்றி அமங்கலமாகிய சாதல் பிறத்தல்கட் கேதுவாவன என்பது குறிப்பு; ஆம் - ஏது ஆகும். அமர்கின்றார் - அப்பூசனைகளை விரும்பி அங்கு எழுந்தருளியிருப்பவர்களாய். பொங்கு பெருங்கால மெலாம் - வழிபாட்டு நேரங்களிலெல்லாம்; முன் “நெடும் பொழுதெலாம்Ó (3869) என்ற கருத்து. அருள் மறவா நல்விளையாட்டு - இவை மேற்பாட்டிற் கூறப்படும்; இவர்கள் கண்ட இவற்றையும் இவைபோல்வனவற்றையுமே உலகில் ஏனை மக்களும் கண்டொழிகின்றார்கள்; அவை உலக மக்களைப் பாசபந்தப்படுத்திச் செத்துப் பிறக்கச் செய்கின்றன. ஈண்டு இப்பெருமக்களும் இவற்றையே கண்டார்களாயினும் பிரானருள் மறவாத நிலையிற் காண்கின்றார்களாதலின் இவை இவர்களைப் பாசப்படுத்துததில்லை. அருள் மறவாநிலை இவர்களை உய்விப்பனவுமாம். நல்விளையாட்டென்ற அடைமொழிக் குறிப்புமிது; அருள் நினையாத இவ்வகை விளையாட்டுக்களை நீக்கலின் இது பிறிதினியைபு நீக்கிய விசேடணம்; “ஈங்கிவை செய்யா தியாங்க ளெல்லாம்......ஐந்து புலன்களு மார வார்ந்து, மைந்தரு மொக்கலு மகிழ மனமகிழ்ந், திவ்வகை யிருந்தோ மாயினு மவ்வகை, மந்திர வெழுத்தைந்தும் வாயிடை மறவாது, சிந்தை நின்வழிச் செலுத்தலி னந்த, முத்தியு மிழந்தில முதல்வ! வத்திறம், நின்னது பெருமை யன்றோ?Ó (திருவிடை. மும். கோவை - 19) என்ற பட்டினத்தடிகள் திருவாக்கும், “ஏடுதரு மலர்க்குழலார் முலைத்தலைக்கே யிடைக்கே எறிவிழியின் படுகடைக்கே கிடந்துமிறை ஞானங், கூடுமவர் கூடரிய வீடுங் கூடிக் குஞ்சித்த சேவடியுங் கும்பிட்டே யிருப்பர்Ó (சித்தி - 10 - 5) என்ற ஞானநூலும், இன்ன பிறவும், இங்குக் கருதற்பாலன. தமரவர்கள் நல்விளையாட்டினை - என்பதும் பாடம். |
|
|