பாடல் எண் :3932

வென்றி வினையின் மீக்கூர வேந்தர் முனைகள் பலமுருக்கிச்
சென்று தும்பைத் துறைமுடித்துஞ் செருவில் வாகைத்திறங்கெழுமி
மன்றன் மாலை மிலைந்தவர்தம் வளநா டெல்லாங் கவர்ந்து, முடி
ஒன்று மொழிய வரசர்திரு வெல்லா முடைய ராயினார்.
3
(இ-ள்) வென்றி....முறுக்கிச் சென்று - வெற்றிபெறும் செயலில் மேன்மேலும் பெருகும்படி வேந்தர்களுடன் பொருகின்ற போர்கள் பலவற்றிலும் முடுகி மேற்சென்று; தும்பை...மிலைந்து - (புறப்பொரு ளிலக்கணத்துப் பெறப்படும்) தும்பைப் பூச்சூடும் துறையின் போர்த்தொழில்களை முடித்தும், அப்போர்களில் வெற்றிபெற்றபின் வாகைமாலையின் வகையில் எழுகின்ற மணமுடைய மாலை சூடியும்; அவர்தம்...கவர்ந்து - அவ்வேந்தர்களது வளநாடுகளை யெல்லாம் கைக்கொண்டும்; முடி.....ஆயினார் - அரசர்க்குரிய முடி ஒன்று நீங்கலாக ஏனைய அரசர்க்குரிய செல்வங்கள் எல்லாவற்றையும் உடையவராயினார்.
(வி-ரை) மீக்கூர - முருக்கி - என்க. மீக்கூர்தல் - மேன்மேற் பெருகுதல்; முருக்குதல் - வலிமையால் அழித்தல்.
வேந்தர் முனைகள் பல முருக்கி - வேந்தர்களைப் பல போர்களிலும் அழித்து. வேந்தர்களின் பகைப்புலங்கள் பலவற்றையும் (முனை - பகைப்புலம்) அழித்து என்றும், போர்புரியும் பகையரசர் பலரையும் (முனை - போர் - பகை) வென்று என்றும் உரைத்தலுமாம்.
தும்பைத் துறை - வாகைத் திறம் - புறப்பொருளில் வெட்சி முதல் தும்பையீறாகப் புறத்திணைகள் ஏழாக வகுக்கப்படும்; அவற்றுள் தும்பை - வாகை என்ற இரண்டும் இறுதியில் உள்ள திணைகள்; தும்பை - போரினையும், வாகை போரில் வெற்றியையும் குறிக்கும். போர் செய்வோரும் அதனுள் வெற்றி பெற்றோரும் சூடும் அவ்வக் குறியீடாகிய மலர்களால் அவ்வப்பெயர் பெற்றன.
தும்பைத்துறை - வாகைத்திறம் - “அதிரப்பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர் செருவென்றது வாகையாம்Ó என்பதனால் இவற்றினதியலை அறிக; துறை - திறம் என்பன அவ்விருதிணைக் கண்ணும் உட்பிரிவாய் வரும் பல வகைக் கூறுபாடுகளைக் குறித்தன (திறம் - வகை).
தும்பைத் துறைமுடித்தும் - தும்பைத்துறை என்பது போரினை உணர்த்தி நின்றது. இது நெய்தற்றிணையின் புறன் என்பர். “மைந்து பொருளாக வந்த வேந்தனைச், சென்று தலையழிக்குஞ் சிறப்பிற் றென்கÓ (தொல் - பொ - புற - 15) என்பது இதன் பொதுவிலக்கணம். வேந்தனை என்றும், சென்று என்றும், “மைந்து பொருளாகÓ என்றும் வரும் தொல்காப்பியச் சொற்பொருள்களை ஆண்டு, ஆசிரியர், இதன் தன்மை போதரக் கூறிய தமிழ்நயம் காண்க. இத்துறைகள் தும்பையரவ முதலாக தானைமறம், யானை மறம், குதிரைமறம், தேர்மறம் உள்ளிட்ட இருபத்து நான்காம்; இவையெல்லாம் குறிக்க “இகல் சிறக்க.....கருவி நான்குநிறை வீரச் செருக்கின் மேலானார்Ó (3931) என ஆசிரியர் முன்னர்க் கூறிய கவித்திறம் காண்க.
தும்பைத் துறை முடித்தும் - வாகைத்திறம் கமழும் மாலை மிலைந்தும் - துறை - வெற்றிக்கு வழியாகிய நிலை - திறம் - வெற்றி நிலை - என்ற குறிப்புக்கள் படவும் நின்றன. முடித்தும் - மிலைந்தும் என்ற சொற்களின் ஆற்றலும் இக்கருத்துடையன.
வாகைத்திறம் கமழும் மன்றன்மாலை மிலைந்து - வாகை பகைவரை வெல்லுதலைக் குறிக்கும் புறத்திணை; இதற்கு வாகைமாலை சூடுதல் மரபு. இது வாகையரவ முதலிய முப்பத்து மூன்று துறைகளையுடையது; “தாவில் கொள்கைத் தத்தங் கூற்றைப், பாகுபட மிகுதிப் படுத்த லென்பÓ (தொல். பொ. புற - 19) என்பது இதன் பொதுவிலக்கணம், கெழுமி என்பது தம் கூறுபாடுகளை மிகுதிப்படுத்தி என்ற குறிப்புப்பட நின்றது.
இப்பாகுபாடுகளை யெல்லாம் தொல்காப்பியம் (பொருள் - புறத்திணையியல்), பன்னிருபடலம், புறப்பொருள் வெண்பாமாலை முதலிய இலக்கண நூல்களுட் கண்டுகொள்க.
வளநாடு - வளங்களையுடைய சிறந்த நாடுகள்; “ நாடென்ப நாடா வளத்தனÓ (குறள்) என்றபடி ஈண்டு வளம் என்பது தேடிக் கண்டுகொள்ள வேண்டாது நாடு தானே இயல்பிற்றரும் வளங்களைக் குறித்தது. வளநாடு என்பது முன்னாளில் பழந்தமிழ் மன்னர்கள் தத்தம் நாட்டின் பெரும் பகுதிகளுக்கு மரபுப் பெயராய்ப் பல திறப்பட இட்டு வழங்கியமை சரிதங்காட்டும் கல்வெட்டுக்களாலறியப்படும்.
கவர்ந்து - ஆறிலொன்று கோடல், சுங்கம் முதலாகிய நீதிமுறையானன்றிப் படை வலிமையாற் கைக்கொண்டு என்பது குறிப்பு.
முடி ஒன்றும் ஒழிய - அரசர்க்குரியனவாய்க் கூறும் பத்துச் சிறப்பு அடையாளங்களுள் (தசாங்கம்) நவமணி முடியாகிய ஒன்று மட்டும் நீங்கலாக.
அரசர் திரு எல்லாம் - அரச அடையாளங்களே யன்றி அரச செல்வங்களும் அங்கங்களும் முதலிய எல்லாமும். எல்லாமும் - முற்றும்மை தொக்கது.
ஒன்றும் - என்றதில் உம்மை விரித்தது அஃது இச்சரித விளைவுக் காதாரமாதல் பற்றி.
திறம் கமழும் - என்பதும் பாடம்.