பாடல் எண் :4055

திருக்கிளர்சீர் மாடங்க டிருந்துபெருங் குடிநெருங்கிப்
பெருக்குவட வெள்ளாற்றுத் தென்கரைப்பாற் பிறங்குபொழில்
வருக்கைநெடுஞ் சுளைபொழிதேன் மடுநிறைத்து வயல்விளைக்கும்
இருக்குவே ளூரென்ப திவ்வுலகில் விளங்குபதி.
1
(இ-ள்) திருக்கிளர்....நெருங்கி - செல்வங்கள் மிகும் சிறப்பினையுடைய மாடங்களில் எங்கும் திருத்த முடைய பெருங்குடிகள் நெருங்கி; பெருக்கு....கரைப்பால் - வளம் பெருக்கும் வட வெள்ளாற்றின் தென் கரையில்; பிறங்கு பொழில்....விளைக்கும் - விளக்க முடைய சோலைகளில் உள்ள பலாப்பழங்களின் நீண்ட சுளைகளினின்றும் பொழியப்பட்ட தேன், மடுவினை நிறைத்தலால் வயல்களை விளையச் செய்யும்; இருக்குவேளூர்....பதி - இருக்குவேளூர் என்ற பெயருடையது இவ்வுலகத்தில் விளங்கும் பதியாகும்.
(வி-ரை) பெருங்குடிகள் நெருங்கி - பெருங்குடிகள் நெருங்கி யிருத்தல் நகரச்சிறப்பு; பெருக்கு - வளம் பெருக்கும் நீர்ப்பெருக்கையுடைய.
வடவெள்ளாறு - சேலம், தென் ஆற்காடு் சில்லாக்களுக்கும், தஞ்சைச் சில்லாவுக்கும் இடையில் சோழ நாட்டின் வடக்கெல்லையாய் ஓடிப் பறங்கிப் பேட்டையருகு கடலில் விழும் ஆறு.
தென் வெள்ளாறு வேறு - அது மதுரை சில்லாவுக்கும் தஞ்சாவூர்ச் சில்லா (சோழநாடு) வுக்கும் இடையில் சோழநாட்டின் தெற்கு எல்லையாக ஓடி மீமிசலின் அருகில் கடலில் விழுவது.
வருக்கை நெடுஞ் சுளை - பலாவின் நீண்ட சுளைகள். சிலவகைப் பலாமரங்களின் பழம் நிலத்துக்குள் வேரில் பழுத்து நிலம் வெடித்துத் தேன் மேலே நிலத்தில் ஊறி வரும் இயல்புடையன. இவை வேர்ப்பலா எனப்படும். மடு - நீர் தங்கும் குழி.
இருக்குவேளூர் - இப்போது பேளூர் (Belur) என வழங்குவது. சேலம் விருத்தாசலம் கிளை இருப்புப்பாதையில் ஆற்றூர் நிலையத்தினின்றும் தெற்கில் மட்சாலை வழி நான்கு நாழிகை யளவில் அடையத்தக்கதாய்ப் பச்சை மலையின் வடசாரலில் உள்ளது; கையில் விளக்கேந்தியபடி நாயனாரது பழைய காலத்துத் திருவுருவம் கொடி மரத்தருகில் உள்ளது. நாயனார் வறுமையினால் இங்கு நின்றும் திருத்தில்லை சென்று திருப்புலீச்சரத்தில் பேறு பெற்றனராதலின் அவரது பெருமை இங்குக் கொண்டாடப்பெறாது மறக்கப்பட்டுள்ளது. இப்பதியினுக்குத் தலபுராணம் ஒன்று உண்டு. இப்பதியினருகில் மலைச்சாரலில் கணம்புல் மிகுதியுமுண்டு. இந்நாயனார் இங்கு நின்றும் நீங்குமுன்னும் வறுமை வந்தபோது புல்லரிந்து விற்கும் தொழில் பூண்டிருந்தார் என்பது கருதப்படும். என்பது - எனப்படுவது; விளங்குதல் - பெருமையால் மேம்படுதல்.