மன்ற லந்தரு மிடைந்தபூங் கயிலையில் மலைவல்லி யுடன்கூட வென்றி வெள்விடைப் பாகர்தாம் வீற்றிருந் தருளிய பொழுதின்கண் “ஒன்று சிந்தைநம் மூரனை யும்பர்வெள் ளானையி னுடனேற்றிச் சென்று கொண்டிங்கு வாருÓ மென் றயன்முற் றேவர்கட் கருள் செய்தான். | 31 | (இ-ள்) மன்றல்.....பொழுதின் கண் - மணமுடைய அழகிய மரங்கள் நெருங்கிய பூங்கயிலாயத்தில் மலைவல்லியாருடனே கூட வெற்றி பொருந்திய வெள்ளிய இடபத்தின் பாகர் எழுந்தருளியிருந்த பொழுது; ஒன்று.....அருள்செய்தார் - நம்முடன் ஒன்றித்த சிந்தையினை யுடைய நமது நம்பியாரூரனைத் தேவருடைய வெள்ளானையுடன் சென்று அதன் மீது ஏற்றிக் கொண்டு இங்கு வாருங்கள் என்று பிரமன் முதலாகிய தேவர்களுக்குக் கட்டளை யிட்டருளிச் செய்தார். (வி-ரை) பொழுதின் கண் - விடையின்மீது மலைவல்லியுடன் கூட இருந்து அருள் செய்தார். இஃது அடியார்களுக் கருளும் நிலை. ஒன்று சிந்தை - சிவராச யோகத்தால் இரண்டற்றுத் தம்மையே மனத்துட் கொண்ட நிலை “ஒன்றியிருந்து நினைமின்கள்Ó (தேவா); “காதலாற் பெருகன்பு புரியு முள்ளத்தார்Ó (4259). உம்பர் வெள்ளானை - தேவருலகத்துள்ள வெள்ளையானை; இந்திரனது ஐராவதம் என்பது. அதுவன்று, கயிலையிலுள்ள ஐராவணம் என்பாருமுண்டு. ஊரன் - நம்பியாரூரன். உம்பர் - உவ்விடத்துள்ள என்றலுமாம். உடன் ஏற்றிக்கொண்டு - உடன் சென்று அதன் மிசை ஏற்றிக்கொண்டு; சென்று அதன் மிசை என்பது இசை எச்சம். கொண்டுவாரும் - அழைத்துக்கொண்டு வாருங்கள். அருள் செய்தல் - கட்டளை யிடுதல். |
|
|