பக்கம் எண் :

கடவுள் வாழ்த்து1



        சிறப்புப்பாயிரம்

   [அறுசீரடியாசிரிய விருத்தம்]

அறுகாற்பீ டத்துயர்மா லாழிகடைந்
     தமுதையரங் கேற்று மாபோல்
அறுகாற்பே டிசைபாடுங் கூடன்மான்
     மியத்தையருந் தமிழாற் பாடி
அறுகாற்பீ டுயர்முடியார் சொக்கேசர்
     சந்நிதியி லமரர் சூழும்*
அறுகாற்பீ டத்திருந்து பரஞ்சோதி
     முனிவனரங் கேற்றி னானே.

     (இதன் பொருள்.) அறுகால் பீடத்து உயர்மால் - காலிலி யாகிய
அனந்தன் என்னம் படுக்கையில் அறிதுயில் கொள்ளும் திருமால்,
ஆழிகடைந்து அமுதை அரங்கேற்றுமாபோல் - பாற்கடலைக் கடைந்து
அதிலுண்டாகிய அமிழ்தத்தைத் தேவர் கூட்டத்திற்கு அளித்தாற்போல,
பரஞ்சோதி முனிவன் - பரஞ்சோதி முனிவன் என்னும் பெயருடைய
பெரியோன், அறுகால் பேடு இசைபாடும் கூடல் மான்மியத்தை -
ஆறுகாலையுடைய பெண் வண்டுகள் இசை பாடி - அருமை வாய்ந்த தமிழ்
மொழியாற் பாடி, அறுகால்பீடு உயர் முடியார் சொக்கேசர் சந்நிதியில் -
அடியார்களருச்சிக்கும் அறுகம்புல்லுடன் பெருமைமிக்கு விளங்கும்
திருமுடியை உடைய ராகிய சொக்கநாதர் சந்நிதியில், அமரர் குழும்
அறுகால் பீடத்து இருந்து அரங்கேற்றினான் - தேவகணங்கள் சூழ்ந்திருக்கும்
ஆறு கால் மண்டபத்திலிருந்து அரங்கேற்றினான் என்றவாறு.

     அறுகால் - பாம்பு : வினைத்தொகை நிலைகளத்துப் பிறந்த அன்
மொழித்தொகைக் காரணப்பெயர்; அற்ற காலையுடையதென விரியும்;
காலில்லாததென்பது கருத்து. பீடம் - ஈண்டுப் பள்ளி; ஆதனம் எனினும்
ஆம்; என்னை?

"சென்றாற் குடையா மிருந்தாற்சிங் காதனமாம்
நின்றான் மரவடியா நீள்கழலுள் - என்றும்
புணையா மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாந் திருமாற் கரவு"

     (பாடபேதம்) * அமரர் சூழ.