பக்கம் எண் :

திருவாலவாயான படலம்1



               திருவிளையாடற் புராணம்
                 மூலமும் - உரையும்

       3. திருவாலவாய்க் காண்டம்

நாற்பத் தொன்பதாவது
திருவாலவாயான படலம்
[அறுசீரடியாசிரிய விருத்தம்]

பாயுடையார் விடுத்தபழி யழல்வழுதி யுடல்குளிப்பப் பதிக
                                        மோதும்
சேயுடையா ரணந்திளைக்குஞ் செவியுடையா ரளவிறந்த
                                 திசைக ளெட்டுந்
தோயுடையார் பொன்னிதழித் தொடையுடையார் விடவரவஞ்
                                     சுற்று மால
வாயுடையார் புகழ்பாடப் பெறுவேமேல் வேண்டுவதிம் மனித
                                       யாக்கை.

     (இதன் பொருள்.) பாய் உடையார் விடுத்த பழி அழல் - பாயை
ஆடை யாகவுடைய அமணர் (தமது திருமடத்தின்கண்) வைத்த பழிக்கு
ஏதுவாகிய நெருப்பு, வழுதி உடல்குளிப்ப - பாண்டியனுடலிற் சென்று
பற்றுமாறு, பதிகம் ஓதும் - திருப்பதிகம் பாடியருளும், சேய் உடை ஆரணம்
திளைக்கும் செவியுடையார் - ஆளுடைய பிள்ளையாரின் தமிழ் மறையை
இடையறாது நுகருஞ் செவியினை யுடையாரும், அளவு இறந்த திசைகள்
எட்டும் தோய் உடையார் - எல்லையின்றிப் பரந்த எட்டுத் திக்குகளையும்
பொருந்திய ஆடையாகவுடையாரும், பொன் இதழித் தொடை உடையார் -
பொன்போன்ற கொன்றைமாலையை யுடையாரும், விட அரவம் சுற்றும்
ஆலவாய் உடையார் - நஞ்சினை யுடைய பாம்பினாற் கோலி
வரையறுக்கப்பட்ட திருவாலவாயினை யுடையாருமாகிய சோமசுந்தரக்
கடவுளின், புகழ் பாடப் பெறுவேமேல் - புகழைப்பாடும் பேறு
பெறுவேமானால், இம்மனித யாக்கை வேண்டுவது - இந்த மனித்த வுடம்பு
வேண்டுவதே யாகும்.