கட்டவிழ் கடுக்கை யண்ணல் கண்ணினா லவிந்த காளை
மட்டவிழ் மலரோ னாலு மாயவ னாலுங் காக்கப்
பட்டவ னல்ல னன்னா னுதல்விழிப் படுதீ நம்மைச்
சுட்டபோ துருப்பந் தீர்த்துக் காத்ததிச் சுவண கஞ்சம். |
(இ
- ள்.) கட்டு அவிழ் கடுக்கை அண்ணல் - முறுக்கு அவிழ்ந்த
கொன்றை மலர் மாலையை அணிந்த இறைவனது, கண்ணினால் அவிழ்ந்த
காளை - நுதற் கண்ணினால் நீறாகிய மதவேள், மட்டு அவிழ் மலரோனாலும்
- மணத்தொடு மலர்ந்த தாமரை மலரில் இருக்கும் பிரமனாலும், மாயவனாலும்
காக்கப்பட்டவன் அல்லன் - திருமாலினாலும் காக்கப்பட்டிலன்; அன்னான்
நுதல் விழிப்படுதீ - அவ்விறைவனது நெற்றிக் கண்ணில் உண்டாகிய நெருப்பு
நம்மைச் சுட்டபோது - நம்மை வெதுப்பிய பொழுது, உருப்பம் தீர்த்து -
அவ்வெம்மையைப் போக்கி, இச்சுவண கஞ்சம் காத்தது - இப்பொற்றாமரைத்
தடம் ஓம்பியது.
காமனைச்
சிவபிரானிடத்து ஏவிய பிரமனும், காமனுக்குத் தந்தையாகிய
திருமாலும் அவனைக்காக்கும் வலியுடையரேல் காத்திருப்பர்; அவர்களாலும்
காக்க வொண்ணாத இறைவனது நுதல்விழிச் செந்தீயின் வெம்மையை மாற்றி
இப்பொற்றாமரை காத்தது; என இறைவனது முதன்மையும், பொற்றாமரையின்
மேன்மையும் புலப்பட அவ்வரலாறு குறிக்கப்பட்டது. (3)
இப்பெருந் தடமே யெம்மை யெம்மையுங் காப்ப தென்னாக்
கப்பிலா மனத்தான் மூன்று காலமு மூழ்கி மூழ்கி
அப்பனை யால வாயெம் மடிகளை யடியார் சேம
வைப்பினை யிறைஞ்சி நித்தம் வழிபடு நியமம் பூண்டான். |
(இ
- ள்.) இப்பெருந்தடமே - இந்தப் பெருமை வாய்ந்த தீர்த்தமே,
எம்மை எம்மையும் காப்பது என்னா - எம்மை எப்பிறப்பிலும் ஓம்புவதாகும்
என்று கருதி, கப்பு இலா மனத்தால் - பிளவுபடாத (ஒன்றுபட்ட) மனத்துடன்,
மூன்று காலமும் மூழ்கி மூழ்கி - மூன்று காலங்களிலும் அதில் நீராடி,
அப்பனை ஆலவாய் எம் அடிகளை - எல்லா உயிர்கட்கும் அத்தனும்
திருவாலவாயில் அமரும் எமது இறைவனும், அடியார் சேமவைப்பினை -
அடியார்களின் சேமநிதியுமாகிய சோமசுந்தரக் கடவுளை, இறைஞ்சி நித்தம்
வழிபடும் நியமம் பூண்டான் - வணங்கி நாள் தோறும் வழிபடுகின்ற
கடப்பாட்டினை மேற்கொண்டான்.
எம்மையும்
- எப்பிறப்பினும்; இம்மையினும் மறுமையினும் என்றுமாம்.
அடியார் சேம வைப்பினை என்ற கருத்தை,
"காதலர்க் கெய்ப்பினில் வைப்பு வாழ்க" |
எனத் திருவாசகத்தும்,
"நல்லடியார் மனத் தெய்ப்பினில் வைப்பை" |
என வன்றொண்டர்
தேவாரத்தும் காண்க. (4)
|