பக்கம் எண் :

கீரனுக்கு இலக்கண முபதேசித்த படலம்131



"தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்"

என்னும் வாயுறை வாழ்த்தானும் அறிக. விழுமம் - துன்பம்; கவலை. (28)

மகவை யீன்றதாய் கைத்திடு மருந்துவாய் மடுத்துப்
பகைப டும்பிணி யகற்றிடும் பான்மைபோ லென்னை
இகலி ழைத்தறி வுறுத்தினாற்* கேழையேன் செய்யத்
தகுவ தியாதென வரம்பிலா மகிழ்ச்சியுட் டாழ்ந்தான்.

     (இ - ள்.) மகவை ஈன்றதாய் - பிள்ளையைப் பெற்ற தாய், கைத்திடும்
மருந்துவாய் மடுத்து - கசக்கும் மருந்தினை அதன் வாயில் ஊட்டி,
பகைபடும் பிணி அகற்றிடும் பான்மைபோல் - பகைத்தலைப் பொருந்திய
பிணியை நீக்குந் தன்மை போல, என்னை இகல் இழைத்து - என்மேற்
சினங்கொண்டு, அறிவுறுத்தினாற்கு - அறிவுறுத்திய அவ்விறைவனுக்கு,
ஏழையேன் செய்யத்தகுவது யாது என - அறிவிலியாகிய என்னாற்
செய்யத்தக்க கைம்மாறு யாதென்று, வரம்பு இலா மகிழ்ச்சியுள் தாழ்ந்தான் -
எல்லையில்லாத மகிழ்ச்சிக் கடலுள் அழுந்தினான்.

     மகவு மருந்தினை உண்ணாதாகவும் தாய் அதனை வலிதின் ஊட்டிப்
பிணிய கற்றுதல் போல என்க. பகைபடும் - உடம்பிற்குப் பகையாகப்
பொருந்தும். தன் பிழை கருதித் துன்பத்துள் ஆழ்ந்தவன் பின்பு இறைவன்
புரிந்த அருள் கருதி இன்பத்துள் ஆழ்ந்தான்.

"கோகழியெங் கோமாற்கு நெஞ்சமே
உண்டாமோ கைம்மா றுரை"

என்றார். மாணிக்கவாசகப் பெருமானும். (29)

மாத வன்றனக் காலவாய் மன்னவ னருளாற்
போத கஞ்செய்த நூலினைப் புலவரே னோர்க்கும்
ஆத ரஞ்செயக் கொளுத்தியிட் டிருந்தன னமலன்
பாத பங்கய மூழ்கிய பத்திமைக் கீரன்.

     (இ - ள்.) அமலன் பாதபங்கயம் மூழ்கிய பத்திமைக்கீரன் -
நின்மலனாகிய சோமசுந்தரக்கடவுளின் திருவடித் தாமரையில் அழுந்திய
அன்பையுடைய நக்கீரன், மாதவன் தனக்கு ஆலவாய் மன்னவன் அருளால்
- குறுமுனிவனானவன் தனக்கு அவ்விறைவனருளால், போதகம் செய்த
நூலினை - போதித்த இலக்கணநூலை, புலவர் ஏனோர்க்கும் - ஏனைய
புலவர்களுக்கும், ஆதரம் செயக் கொளுத்தியிட்டு இருந்தனன் - அன்புமிக
அறிவுறுத்தியிருந்தான்.

     ஆலவாய் மன்னவன் - மதுரையிற் சுந்தர பாண்டியனாக அரசுபுரிந்த
இறைவன்; சுட்டாகக் கொள்க. (30)

               ஆகச் செய்யுள் - 2596


     (பா - ம்.) * உறுத்தினாய்க்கு.