பக்கம் எண் :

136திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



நாற்பொருள் பயக்கு நடைநெறித் தாகித்
தன்னிக ரில்லாத் தலைவனை யுடைத்தாய்"

என்னும் அணிநூற் சூத்திரத்தா னறிக. ஒப்பும் உயர்வுமில்லாதவன்
எல்லா முழுமுதன்மையுமுடைய இறைவ னொருவனே யாகலின் 'ஏனோர்
தமக்கெலா முகமனன்றோ' என்றார். ஏகாரம் : தேற்றம். இக்கவி யென்புழிக்
கவி யென்றது காப்பியமென்னும் பொருட்டு; கவி - செய்யுள், காப்பியம் :
ஆகு பெயருமாம். (108)

என்னென வுரைப்பே னந்த* விறைமகன் பண்பை யேனை
மன்னவர் வானோர் போல மதித்துரை விரிக்கற் பாற்றோ
அன்னவ னாணை யாற்றா னடப்பதிவ் வகில மென்றால்+
முன்னவன் செய்த வாடல் வரவினை முறையிற் சொல்வேன்.

     (இ - ள்.) அன்னவன் ஆணையால் தான் - அச்சோமசுந்தரக்
கடவுளின் திருவாணையினாலேதான், இ அகிலம் நடப்பது என்றால் - இந்த
உலகம் நடைபெறுவதென்றால், அந்த இறைமகன் பண்பை - அந்தப்
பாண்டி மன்னனாகிய இறைவனுடைய தன்மையை, என் என உரைப்பேன் -
என்னென்று கூறுவேன் (அது), ஏனை மன்னவர் வானோர் போல மதித்து -
மற்ற அரசர்கள் தேவர்களின் தன்மைகளைப் போலக் கருதி, உரை
விரிக்கற் பாற்றோ - உரைக்குந் தகுதியை உடையதோ (அன்று), முன்னவன்
செய்த ஆடல் வரவினை (இனி அம்) முதல்வன் செய்தருளிய திருவிளை
யாடல்களை, முறையில் சொல்வேன் - முறையாகக் கூறுவேன் எ - று.

     இறைமகன் - இறையாகிய மகன்; இறைவனென்னுஞ் சொல்
அரசனையும் கடவுளையுங் குறிக்கும்; 'இறைகாக்கும் வையகமெல்லாம்',
'இறைவன் பொருள்சேர் புகழ்' என்புழி முறையே காண்க. ஆணை ஆற்றால்
எனப் பிரித்து, ஆணைவழியால் எனப் பொருளுரைத்தலுமாம். இவ்வகிலம்
என்பதிற் சுட்டு உலகினைப் பொதுவிற் சுட்டுவது; எவ்வுலகும் என்பது
பாடமாயின் எல்லாவுலகமு மென்க. நடப்பது யாவரானும் தெளியப்பட்ட
தென்பார் 'என்றால்' என்றார். அம்முன்னவன் எனச் சுட்டு வருவிக்க.
ஆடல் வரவு - ஆடலின் நிகழ்ச்சி. (109)

                        ஆகச்செய்யுள் - 199.