பக்கம் எண் :

திருக்கைலாயச் சிறப்பு139



ஆங்கு வெண்டுகில் விரித்தெனக் கல்லென வார்த்து
வீங்கு காலரு வித்திரள் வெள்ளமே யன்றி
ஓங்கு நான்மறைக் குடுமியி னுள்ளொளி நோக்கித்
தூங்கு மாதவர் கண்களுஞ் சொரிவன வெள்ளம்.

     (இ - ள்.) ஆங்கு - அம்மலையினிடமானது. வெண்துகில்
விரித்தென -வெள்ளிய ஆடையை விரித்தாற் போலத் (தோன்றி), கல்லென
ஆர்த்து - கல்லென்று ஆரவாரித்து, வீங்குகால் - உயர்ந்த கால்களை
யுடைய, அருவித்திரள் வெள்ளம் அன்றி - அருவியாகிய திரண்ட
வெள்ளத்தைச் சொரிதல் அல்லாமல், ஓங்கும் நான்மறைக் குடுமியின் உள்
ஒளி நோக்கி - உயர்ந்த நான்கு மறைகளின் முடியினுள் விளங்கும்
ஒளிப்பிழம்பை (அகத்திற்) கண்டு, தூங்கு மாதவர் கண்களும் - அழுந்திக்
கிடக்கின்ற பெரிய முனிவர்களின் கண்களும், வெள்ளம் சொரிவன -
ஆனந்த அருவியாகிய வெள்ளத்தைப் பொழிவனவாம் எ - று.

     ஆங்கு - அவ்விடம் : எழுவாய். அருவி வெண்டுகில் விரித்தாற் போலுமென்பதனை,

"அவிர்துகில் புரையு மவ்வெள் ளருவி"

எனப் பெருங்குறிஞ்சியுட் கூறியவாற்றானு மறிக. வெள்ளத்தைச்
சொரிதலன்றி என விரித்துரைக்கப்பட்டது. ஒளி - இறைவன் றிருவுரு.
தூங்குதல் - அழுந்தி நிற்றல்; இதனையே தூங்காமற் றூங்கல் என்பர்.
'ஒளி நோக்கித் தூங்கும்' என்பதிலுள்ள அணி நலமுல் காண்க.
எச்சவும்மை. (5)

கோட்டு மாமலர் நிலமலர் குண்டுநீ ரெடுத்துக்
காட்டு மாமலர் கொடிமலர் கொண்டுமுட் கரைந்த
பாட்டு மாமலர் கொண்டுநம் பரஞ்சுட ரடியிற்
சூட்டு மாதவர் தொகுதியுஞ் சூழ்வன வோருபால்.

     (இ - ள்.) கோட்டு மாமலர் - பெருமை பொருந்திய கோட்டுப்
பூக்கள், நிலமலர் - நிலப்பூக்கள், குண்டு நீர்எடுத்துக் காட்டும் மாமலர் -
ஆழமாகிய நீர் உயர்த்திக் காட்டுகின்ற பெருமை பொருந்திய நீர்ப்
பூக்கள், கொடி மலர் கொண்டும் - கொடிப் பூக்கள் ஆகிய இந்நால்
வகைப் பூக்களைக் கொண்டும், உள்கரைந்த - உள்ளம் உருகிக் கூறிய,
பாட்டு மாமலர் கொண்டும் - பாட்டாகிய பெருமை பொருந்திய
மலர்களைக் கொண்டும், நம் பரஞ்சுடர் அடியில் சூட்டும் - நமது
பரஞ்சோதியாகிய சிவபிரான் திருவடிகளிற் சூட்டுகின்ற, மாதவர்
தொகுதியும் - பெரிய தவத்தினையுடையார் கூட்டங்களும், ஒருபால்
சூழ்வன - (அம்மலையின்) ஒருபக்கத்தில் சூழா நிற்கும் எ - று.

     மா என்னு மடையை நிலமலர் கொடிமலர்கட்குங் கூட்டுக. நீர்
எடுத்துக் காட்டும் என்பதற்கு நீரில் விளங்கித் தோன்றிய என்னலுமாம்.
கரைந்த - கரைந்து கூறியவென்க; கரைதற்குக் காரணமான என்னலுமாம்.
மாதவர் - திருத்தொண்டர். (6)