பக்கம் எண் :

140திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



கைய நாகமுங் காய்சின வுழுவையுங் கடுவாய்ப்
பைய நாகமுந் தங்கிளை பரவிய முக்கண்
ஐய னாகமெய் யருந்தவர் தமையடைந் தன்பு
செய்ய நாகமும் வையமும் புகழ்வதச் சிலம்பு.

     (இ - ள்.) கைய நாகமும் - கையையுடைய யானைகளும், காய்சின
உழுவையும் - மிகுந்த சினத்தையுடைய புலிகளும், கடுவாய் பைய -
நஞ்சினையுடைய வாயையும் படத்தையுமுடைய, நாகமும் - பாம்புகளும்,
தம் கிளை பரவிய முக்கண் ஐயன் ஆக - தங்கள் சுற்றம் வழிபட்ட மூன்று
கண்களையுடைய இறைவனாகக் கருதி, மெய் அருந்தவர் தமை அடைந்து -
மெய்யாகிய அரிய தவமுடையார்களை அடைந்து, அன்பு செய்ய -
அன்போடு பணி செய்யா நிற்க, நாகமும் வையமும் புகாவது அச்சிலம்பு -
விண்ணுலகத்தாராலும் மண்ணுலகத்தாராலும் புகழப் பெறுவது
அத்திருக்கைலாயமலை எ - று.

     நாகம் என்னும் பல பொருளொரு சொல் கைய, பைய என்னும்
சிறப்படைகளானும், வையம்என்னும் இனத்தானும் முறையே யானை, பாம்பு,
விண்ணுலகம் என்பவற்றை யுணர்த்திற்று. காய்ய சினம் - காய்கின்ற சினம்;
மிக்க சினம். கைய, பைய வென்பன குறிப்புப் பெயரெச்சம். யானை
திருவானைக்காவிலும் சீகாளத்தியிலும் வழிபட்டமையும் பாம்பு சீகாளத்தியில்
வழிபட்டதும், புலி தில்லையுள் வழிபட்டதும் திருவானைக்காப் புராணம்,
சீகாளத்திப் புராணம், கோயிற் புராணம் என்பவற்றுட் காண்க. மெய்யாகிய
தவமென்க; தவத்தினர்க் கேற்றி, மெய்ம்மையையுடையவர் என
உரைத்தலுமாம். ஐயனாகக் கருதி யென்க. நாகமும் வையமும் ஆகுபெயர்.
பரவிய, புகழ்வது என்பன செயப்பாட்டுவினை; படு விகுதி தொக்கு
வந்தன. (7)

                       ஆகச் செய்யுள் - 206