அன்னையைப் புணர்ந்து தாதை குரவனா மந்த ணாளன்
றன்னையுங் கொன்ற பாவந் தணித்துவீ டளித்த தென்றால்
பின்னைநீ ரிழிநோய் குட்டம் பெருவயி றீளை வெப்பென்
றின்னநோய் தீர்க்குந் தீர்த்த மென்பதோ விதற்கு மேன்மை. |
(இ
- ள்.) அன்னையைப் புணர்ந்து - தாயைப் புணர்ந்து, தாதை
குரவன் ஆம் அந்தணாளன் தன்னையும் கொன்ற பாவம் - தந்தையும்
குரவனுமாகிய அந்தணனையும் கொன்ற மாபாதகத்தையும், தணித்து வீடு
அளித்தது என்றால் - போக்கி வீடு பேற்றை அளித்ததாயின், பின்னை -
பின், நீர் இழி நோய் குட்டம் பெருவயிறு ஈளை வெப்பு என்று இன்ன
நோய் - நீரிழிவும் குட்டமும் பெருவயிறும் ஈளையும் வெப்புமாகிய
இந்த நோய்களை, தீர்க்கும் தீர்த்தம் என்பதோ இதற்கு மேன்மை -
போக்குகின்ற தீர்த்தமென்று சொல்லுவதோ இதற்கு மேன்மையாகும்.
தந்தையும்
குரவனும் அந்தணனுமாகியவனைக் கொன்றான் என்றார்;
"பாதக மென்றும்
பழியென்றும் பாராதே
தாதையை வேதியனைத் தாளிரண்டும் - சேதிப்ப" |
என்னுந் திருக்களிற்றுப்படியாரில்
தாதையென்றும் வேதியனென்றும்
பிரித்தோதினமையுங் காண்க. அவன் புரிந்த தவச் செயல்களுள் கோயிலின்
புறத்தொட்டி நீரில் முழுகியதைச் சிறந்தெடுத்து, இஃது அளித்ததென்றால்
என்பதோ இதற்கு மேன்மையென்றார். (40)
அழிந்தவே தியன்மா பாதகந் தீர்த்த
தறிந்துவேந் தமைச்சரூ ருள்ளார்
ஒழிந்தபா ருள்ளார் வானுளார் வியப்ப
முற்றுநல் லுரையுணர் வெல்லாங்
கழிந்தபே ரருளிக் கயவன்மேல் வைத்த
காரணம் யாதெனக் கண்ணீர்
வழிந்துநான் மாடக் கூடனா யகனை
வழுத்தினார் மகிழ்ச்சியுட் டிளைத்தார். |
(இ
- ள்.) வேந்து அமைச்சர் ஊர் உள்ளார் ஒழிந்த பார் உள்ளார்
வான் உள்ளார் - மன்னனும் மந்திரிகளும் ஊரிலுள்ளவர்களும் ஏனைய
நாட்டிலுள்ளவர்களும் தேவர்களுமாகிய அனைவரும், அழிந்த வேதியன்
மாபாதகம் தீர்த்தது அறிந்து - நிலையழிந்த வேதியனது மாபாதகத்தைப்
போக்கியதை அறிந்து, வியப்பம் உற்று - வியப்பெய்தி, நல் உரை உணர்வு
எல்லாம் கழிந்த பேர் அருள் - நல்ல உரையையும் உணர்வையுங் கடந்த
பெரிய திருவருளை, இக்கயவன் மேல் வைத்த காரணம் யாது என - இந்தக்
கீழ்மகன் மீது வைத்ததற்குக் காரணம் யாதோ என்று, கண் நீர் வழிந்து -
கண்களினின்றும் ஆனந்தவருவி பொழிய, நான்மாடக் கூடல் நாயகனை
வழுத்தினார் மகிழ்ச்சியுள் திளைத்தார் - மதுரை நாயகனாகிய சோமசுந்தரக்
கடவுளைத் துதித்து உவகைக் கடலில் அழுந்தினார்கள்.
வியப்பு
என்பது வியப்பம் என்றாயது. திருவருளையுன்னிக் கண்ணீர்
வழியத் திளைத்தார்களென்க. வழிந்து - வழிய; எச்சத் திரிபு. வழுத்தினார்,
முற்றெச்சம். (41)
ஆகச்
செய்யுள் - 1574.
|