(இ
- ள்.) அரசனிடைப் புகுந்து - வேந்தனிடத்துச் சென்று, உள்ளம்
நடு நடுங்கி நாஉணங்கி - மனம் பதைபதைத்து நாவுலர்ந்து, அரசே - மன்ன,
யாம் ஒன்று உரைசெய அஞ்சுதும் - யாங்கள் ஒரு செய்தியை இங்குக் கூற
அஞ்சுகின்றோம்; உங்கள் நாயகனை - உங்கள் நாயகனாகிய சோமசுந்தரக்
கடவுளை, திருப்பள்ளி உணர்ச்சி நோக்கி - திருப்பள்ளி எழுச்சியில்
நோக்கி, மரைமலர்ச் சேவடி பணியப் புகுந்தனம் - தாமரை மலர்போலுஞ்
சிவந்த திருவடிகளைப் பணிதற்குச் சென்றோம்; இன்று ஆங்கு அவன்
தன்வடிவம் காணேம் - இன்று அவ்விடத்தில் அப்பெருமானது
திருவடிவத்தைக் கண்டிலேம்; புரமும் நனிபுலம்பு அடைந்தது - நகரமும்
மிகவும் பொலிவிழந்தது, என்று செவியில் - என்று (அவன்) செவியின் கண்,
அழல் வேல் எனப் புகுத்தலோடும் - நெருப்பிற் காய்ச்சிய வேற்படை
போலப் புகுத்தியவளவில்.
நடுநடுங்கி
- மிகநடுங்கி; வழக்கிலே இரட்டைக் கிளவிபோல் இங்ஙனம்
வாரா நின்றது. மரை முதற்குறை என்று அச் சொற்களை வேலெனச் செவியிற்
புகுத்தலோடும் என்க. (14)
வழுதியரி யணையிலிருந் தடியிறவீழ்
பழுமரம்போன் மண்மேல் யாக்கை
பழுதுறவீழ்ந் துயிரொடுங்க வறிவொடுங்கி
மட்பாவை படிந்தாங் கொல்லைப்
பொழுதுகிடந் தறிவுசிறி தியங்கவெழுந்
தஞ்சலிக்கைப் போது கூப்பி
அழுதிருகண் ணீர்வெள்ளத் தாழ்ந்தடியே
னென்பிழைத்தே னண்ணா லண்ணால். |
(இ
- ள்.) வழுதி - பாண்டியன், அடிஇறவீழ் பழுமரம்போல் -
வேர் அற வீழ்ந்த ஆலமரம்போல், அரி அணையில் இருந்து -
சிம்மாதனத்தினின்றும், மண்மேல் யாக்கை பழுதுஉற வீழ்ந்து -
மண்ணின்மேல் உடலின்கண் வடுப்படுமாறு வீழ்ந்து, உயிர் ஒடுங்க அறிவு
ஒடுங்கி - உயிர் ஒடுங்குதலால் அறிவு ஒடுங்கி, மண்பாவை படிந்தாங்கு -
சுதையாற் செய்த பிரதிமை கிடந்தாற்போல, ஒல்லைப் பொழுது கிடந்து -
சிறிதுநேரங் கிடந்து, சிறிது அறிவு இயங்க எழுந்து - சிறிது
உணர்ச்சியுண்டாக எழுந்து, அஞ்சலி கைப்போது கூப்பி அழுது -
அஞ்சலியாகக் கைத்தாமரைகளைத் தலையின்மேற் குவித்துஅழுது, இருகண்
நீர் வெள்ளத்து ஆழ்ந்து - இரண்டு கண்களினின்றும் பொழியும்
நீர்ப்பெருக்கில் மூழ்கி, அடியேன் என் பிழைத்தேன் அண்ணால் அண்ணால்
- அடியேன் என்ன தவறு இழைத்தேன் பெருமவோ பெருமவோ.
பழுமரம்
- முதிர்ந்த ஆலமரம்; ஒல்லை - விரைவு; ஈண்டுச் சிறிது
என்னும் பொருளில் வந்தது. அவலம், கவலை, கையாறு, அழுங்கல் என்னும்
அவத்தைகளை யடைந்தானென்க. (15)
|