படைத்த நாள் முதல்
- பிரமன் இவ்வுலகை ஆக்கிய கால முதல், ஒரு
காலமும் கண்டது அன்று - ஒரு காலத்திலேனும் பார்த்திராதது; கேள்வித்
தலை வந்த புலவரோடும் - நூலாராய்ச்சியாற் சிறந்த சங்கப்
புலவர்களோடும், ஆலவாய் உடைய பிரான் - திருவாலவாயினையுடைய
சோமசுந்தரக் கடவுள், செம்பொன்மலை வல்லியொடும் தானே வந்து -
சிவந்த பொன்னையுடைய மலையரையன் புதல்வியாகிய உமா தேவியாரோடும்
தானே வந்து, இறைகொண்டு உறைகின்றான் என்றார் - நிலை பெற்று
அமர்ந்திருக்கின்றனன் என்று கூறினர்.
பண்டு
அங்கே கோயில் இருந்த தில்லை யென்பார் பிரமன் 'படைத்த
நாண் முதற் கண்டதன்று' என்றும், சோம சுந்தரக் கடவுளே யன்றி வேறன்
றென்பார் 'பிரான்றானே' என்றும் கூறினார். செம்பொன்மலை, பெயருமாம்.
மாது. ஓ அசைகள். (17)
அவவுரைதன் செவிநுழைந்து புகுந்தீர்ப்ப
வெழுந்தரச னச்சத் தாழ்ந்து
தெவ்வர்முடித் தொகையிடறுங் கழற்காலா
னடந்தேகிச் செழுநீர் வையை
கௌவைநெடுந் திரைக்கரத்தாற் கடிமலர் தூஉய்ப்
பணியத்தென் கரைமேல் வந்து
மௌவலிள முகைமூரன் மாதினொடு
மிருக்கின்ற மணியைக் கண்டான். |
(இ
- ள்.) அவ்வுரை தன் செவி நுழைந்து புகுந்து ஈர்ப்ப -
அச்சொல்லானது தன் செவி வழியே நுழைந்து உள்ளே புகுந்து இழுக்க,
அரசன் எழுந்து - மன்னன் எழுந்து, அச்சத்து ஆழ்ந்து - பயத்தின்கண்
அழுந்தி, தெவ்வர் முடித்தொகை இடறும் கழல் காலால் நடந்து ஏகி -
பகைவரின் முடித்தொகையினை இடறா நின்ற வீரக் கழலணிந்த காலினால்
நடந்துசென்று, செழு நீர் வையை - தெள்ளிய நீரையுடைய வையை
யாறானது, கௌவைநெடும் திரைக் கரத்தால் கடிமலர் தூஉய்ப் பணிய -
ஒலியினையுடைய நீண்ட அலையாகிய கையினால் மணம் பொருந்திய
மலர்களைத் தூவி வணங்க, தென் கரைமேல் - அதன் தென்கரைமேல்,
மௌவல் இளமுகை மூரல் மாதினொடும் வந்து இருக்கின்ற மணியைக்
கண்டான் - முல்லையினது இளமை பொருந்திய அரும்பு போன்ற
பற்களையுடைய பிராட்டியோடும் வந்திருக்கும் பெருமானைக் கண்டான்.
யான்
செய்த பிழை என்னோவென அச்சமுற்றனனென்க. காலானாகிய
அரசன் என்றுமாம். வந்து பணிய இருக்கின்ற மணி என்க. (18)
|