பக்கம் எண் :

150திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



தவம் தருமம் சுருங்கிற்றோ - தவமும் தருமமும் சுருங்கினவோ, இல்லறனும்
துறவறனும் பிழைத்தனவோ - இல்லறமும் துறவறமும் தத்தம் நெறியினின்றும்
தவறினவோ, எந்தாய் எந்தாய் யான் அறியேன் - எமது தந்தையே எமது
தந்தையே (நிகழ்ந்தது யாதென) யான் அறியேன்.

     அல்லதை, ஐ சாரியை. மாநிலம் புரக்கும் வேந்தன் தன்னாலும்
தமராலும் பகைவராலும் ஏனை உயிர்களாலும் குடிகட்கு இடையூறு
உண்டாகாமற் போக்கி, அறத்தினைப் பாதுகாக்க வேண்டு மென்ப வாகலின்
இங்ஙனம் கூறினன் என்க; இதற்கேற்ப, மேற்பாட்டில் 'அடியேனாற்
பிழையுளதோ' என்பதற்கு, என்னாற் குடிகளுக்குத் துன்ப முளதாயிற்றோ
என்பது கருத்தாகக் கொள்க. இந்நாட்டில் என்றும் இத்தகைய தீமை
நிகழ்ந்ததில்லை யென்பான் 'இன்றமிழ் நாட்டில் எய்திற்றோ' என்றான்.
சுருங்கிற்றோ என்பதைத் தவத்துடனும் தருமத்துடனும் தனித்தனி கூட்டுக.
ஆல், அசை. (20)

கள்ளேறு கடுக்கைநறுஞ் சடையானே போற்றிபெருங் கருணை
                                            போற்றி
வெள்ளேறு கொடியுயர்த்த விடையானே போற்றி யருள் விகிர்தா
                                           போற்றி
புள்ளேறு கொடியுயர்த்த புனிதனயன் றேறாத புனிதா போற்றி
வள்ளேறு சிறுகுழவி மதிநுதலங் கயற்கண்ணி மணாள போற்றி.

     (இ - ள்.) கள் ஏறு நறுங் கடுக்கை சடையானே போற்றி - தேன்
நிறைந்த நறிய கொன்றை மாலையை யணிந்த சடையை யுடையானே
வணக்கம்; பெருங் கருணை போற்றி - பேரருள் உடையானே வணக்கம்;
வெள் ஏறு கொடி உயர்த்த விடையானே போற்றி - வெள்ளிய இடபத்தைக்
கொடியில் உயர்த்திய இடபவூர்தியை யுடையானே வணக்கம்; அருள்
விகிர்தா போற்றி - கருணை விகிர்தனே வணக்கம்; புள் ஏறு கொடி உயர்த்த
புனிதன் - கலுழனைக் கொடியின்கண் உயர்த்திய தூயோனாகிய திருமாலும்,
அயன் - பிரமனும், தேறாத புனிதா போற்றி - அறியாத தூயவனே
வணக்கம்; வள் ஏறு சிறு குழவி மதிநுதல் - கூர்மை மிக்க நுனியினையுடைய
சிறிய பிறைபோலும் நெற்றியையுடைய, அங்கயற்கண்ணி மணாள போற்றி -
அங்கயற்கண்ணம்மையின் கேள்வனே வணக்கம்.

     வெள்ளேறு கொடியுயர்த்த விடையானே என்பதற்குக் கொடியின்கண்
உயர்த்திய வெண்மை மிக்க இடபத்தினை யுடையானே என்றுரைத்தலுமாம்.
புள் ஏறிய கொடியை உயர்த்திய என்றுமாம். குழவி மதி - பிறை. (21)

பாதமல ரிணைபோற்றி பன்னிரண்டு கையானைப் பயந்தாய்
                                           போற்றி
வேதமுடி கடந்தபர ஞானத்தி லானந்த விளைவே போற்றி
போதவடி வாய்நால்வர்க் கசைவிறந்து நிறைந்தபரம் பொருளே
                                           போற்றி
மாதவள நீறணிந்த மன்னாவங் கயற்கண்ணி மணாள போற்றி.

     (இ - ள்.) பாதமலர் இணைபோற்றி - திருவடித் தாமரைமலர்
இரண்டிற்கும் வணக்கம்; பன்னிரண்டு கையானைப் பயந்தாய் போற்றி -
பன்னிரண்டு திருக் கரங்களையுடைய அறுமுகக்கடவுளை
அளித்தருளியவனே வணக்கம்; வேதமுடி கடந்த பரஞானத்தில் -
மறைமுடியைக் கடந்த பரஞானத்தின்கண் விளையும், ஆனந்த