பக்கம் எண் :

152திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



      பொக்கம் - பொய்; கரவு. அன்பால் உருகுவார்க்கன்றி, அன்பில்லாது
பூசையும் தவமும் புரிவார்க்கு இறைவன் அருளானென்பதை,

"நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன்
பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு
நக்கு நிற்ப னவர்தமை நாணியே"

என்னும் திருநாவுக்கரசர் தேவாரத்தாலறிக. சினந்த வென்பது புருவ நெரித்த
என்பதனாற் குறிக்கப்பட்டது. மகத்தைப் பொடியாக்கினமையின் 'கொடுந்
தழலே' என்றான். செக்கமலம், வலித்தல் விகாரம். (23)

தென்னவ னின்ன வண்ண மேத்தினான் செம்பொற் கூடன்
மன்னவன் கேட்டா காய வாணியால் வையை நாட
உன்னது சோத்த நாங்கேட் டுவந்தன மினிய தாயிற்
றின்னமொன் றுளது கேட்டி யென்றன னருளிச் செய்வான்.

     (இ - ள்.) தென்னவன் இன்ன வண்ணம் ஏத்தினான் -
குலேசபாண்டியன் இவ்வாறு துதித்தானாக, செம்பொன் கூடல் மன்னவன்
கேட்டு - செம்பொன் நிறைந்த ஆலவாயில் எழுந்தருளிய சோமசுந்தரக்
கடவுள் அதனைக் கேட்டு ஆகாய வாணியால் - அசரீரியால், வையை நாட
- வையை நாடனே, உன்னது சோத்தம் நாம் கேட்டு உவந்தனம் - உனது
துதியினைக் கேட்டு நாம் மகிழ்ந்தோம்; இனியது ஆயிற்று - (அது எமக்கு)
இனிமையுடையதாயிற்று; இன்னம் ஒன்று உளது - (உனக்குக் கூற
வேண்டியது) இன்னும் ஒன்று உண்டு; கேட்டி என்றனன் அருளிச்செய்வான்
- அதனைக் கேட்பாயாக என்று கூறியருளுவான்.

     வாணி - வாக்கு. உன்னது, னகரம்விரித்தல். சோத்தம் - இழிந்தார்
செய்யும் அஞ்சலி, ஈண்டுத் துதியை உணர்த்திற்று;

"சோத்துன் னடியமென் றோரை"

என்னும் திருக்கோவையாரஉரையை நோக்குக. இனிஎன்பது அம் சாரியை
பெற்றுத் திரிந்து இன்னம் என வழங்குவதாயிற்று. கேட்டி, கேள் பகுதி, த்
எழுத்துப்பேறு, இ விகுதி. என்றனன், முற்றெச்சம். (24)

இயம்பரும் பதிகடம்மு ளாலவா யேற்ற மீங்குச்
சயம்புவா யனந்த முள்ள தானவ ரியக்கர் சித்தர்
வயம்புரி யரக்கர் வானோர் முனிவரர் மனித ருள்ளார்
நயம்பெற விதியாற் கண்ட நங்குறிய னந்த முண்டால்.

     (இ - ள்.) இயம்பரும் பதிகள்தம்முள் - சொல்லுதற்கரிய திருப்பதிகள்
பலவற்றுள்ளும், ஆலவாய் ஏற்றம் - திருவாலவாய் சிறந்தது; ஈங்கு
சயம்புவாய்