(இ
- ள்.) நிலைநிலையாப் பொருள் உணர்ந்து - நிலையுள்ள
பொருளையும் நிலையில்லாத பொருளையும் உணர்ந்து, பற்று இகந்து
கரணம் ஒரு நெறியே செல்ல - இருவகைப் பற்றினின்றும் நீங்கி
அந்தக்கரணம் ஒரு வழிச் செல்ல, புலன் நெறி நீத்து அருள் வழி போய் -
ஐம்புலன்களின் நெறியினின்றும் நீங்கித் திருவருள் நெறிச் சென்று, போதம்
ஆம் தன் வலியைப் பொத்தி நின்ற மலவலி விட்டு அகல - போதமாகிய
தனது வலியினை மறைத்து நின்ற ஆணவ மலவலி கழன்றொழிய, அரா
உமிழ்ந்த மதி போல் விளங்கி - இராகுவென்னும் பாம்பால் உமிழப்பட்ட
சந்திரனைப் போல விளங்கி, மாறி ஆடும் தலைவன் அடிநிழல் பிரியாப்
பேர் இன்பக் கதி - கால் மாறி ஆடிய சோமசுந்தரக் கடவுளின் திருவடி
நிழலைப் பிரியாத பேரின்ப வீட்டினை, தமிழர் கோமான் அடைந்தான் -
தமிழர் பெருமானாகிய குலோத்துங்க பாண்டியன் அடைந்தான்.
நிலைநிலையாப்
பொருளுணர்ச்சி - நித்தியாநித்திய வத்து விவேகம்
என்று கூறப்படும் நிலைப் பொருள் - என்றும் ஒரு பெற்றியே நிற்கும்
மெய்ப்பொருள். நிலையாப் பொருள் - மாறியொழியும் பொய்ப் பொருள்.
இவற்றையுணர்ந்த வழி நிலையாப் பொருளின் மேலுள்ள பற்று ஒழியும்; பின்பு
மனம் ஒருவழிப்படும்; அதன் பின் உயிர் அருள் வழிச் செல்லும்; அதனால்
மலவலி கெடும்; ஆகலின் அம்முறையே கூறினார். ஆன்மாவின் அறிவு
வலியையென்க. ஆணவ மலத்தாற் கட்டுண்டு நீங்கிய ஆன்மாவிற்குப்
பாம்பால் விழுங்கப்பட்டு அதினின்றும் நீங்கிய மதியை உவமை கூறியது
மிகவும் பொருத்தமுடைத்து. பிரியாமையாகிய கதியென்க. (28)
ஆகச்
செய்யுள் - 1602.
|