பக்கம் எண் :

156திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



மின்னையொத்த சடை யென்க. மேற் செய்யுளிலிலே மனையிற் போக்கிக்
கோயில் புக்கான் என்றாரேனும் கோயில் புகுமளவும் பின்னே நடந்து
சென்று விடை பெற்றேகினான் என்பது இச்செய்யுளாற் பெற்றாம். (31)

விதிமுறை கதலி பூகங் கவரிவால் விதானந் தீபம்
புதியதார் நிறைநீர்க் கும்பங் கதலிகை புனைந்த மன்றற்
கதிர்மணி மாடத் தம்பொற் சேக்கைமேற் கற்றோர் சூழ
மதிபுனை காடன் றன்னை மங்கல வணிசெய் தேற்றி.

     (இ - ள்.) விதிமுறை - விதிப்படி, கதலி பூகம் கவரி - வாழையும்
கமுகும் சாமரையும், வால் விதானம் தீபம் - வெள்ளிய மேல்விதானமும்
விளக்கும், புதிய தார் நிறை நீர்க் கும்பம் கதலிகை புனைந்த - அன்றலர்ந்த
மலராற்றொடுத்த மாலையும் பூரண கும்பமும் கொடியும் ஆகிய இவைகளால்
அலங்கரித்த, மன்றல் கதிர் மணிமாடத்து - விழா நீங்காத ஒளியினையுடைய
மணிகள் அழுத்திய மாளிகையின் கண், அம் பொன் சேக்கைமேல் -
அழகிய பொன்னாலாகிய இருக்கையின் மேல், கற்றோர் சூழ - புலவர்கள்
சூழ, மதிபுனை காடன் தன்னை - அறிவையே அணிகலமாகப் பூண்ட
இடைக்காடனை, மங்கல அணிசெய்து - மங்கலமாக அலங்கரித்து, ஏற்றி -
அமர்த்தி.

     மன்றல் - மங்கல விழா. (32)

சிங்கமான் சுமந்த பொன்னஞ் சேக்கைமே லிருந்து வெள்ளைக்
கொங்கவிழ் தாமந் தூசு குளிர்மணி யாரந் தாங்கி
மங்கல முழவ மார்ப்ப மறையவ ராக்கங் கூற
நங்கையர் பல்லாண் டேத்த நன்மொழிப் பனுவல் கேட்டு.

     (இ - ள்.) சிங்கமான் சுமந்த பொன்னம் சேக்கைமேல் - சிங்கஞ்
சுமந்த பொன்னாலாகிய அழகிய ஆதனத்தின் மேல், இருந்து - தானும்
இருந்து, கொங்கு அவிழ் வெள்ளைத் தாமம் - மகரந்தத்தோடு மலர்ந்த
வெண்மலர் மாலையும், தூசு - வெள்ளாடையும், குளிர்மணி ஆரம் தாங்கி -
தண்ணிய முத்து மாலையுமாகிய இவற்றை அணிந்து, மங்கல முழவம்
ஆர்ப்ப - மங்கல இயங்கள் ஒலிக்கவும், மறையவர் ஆக்கம் கூற -
அந்தணர் ஆக்கமொழி கூறவும், நங்கையர் பல்லாண்டு ஏத்த - பாவையர்
பல்லாண்டு பாடவும், நன்மொழிப் பனுவல் கேட்டு - நல்ல சொற்கள்
புணர்த்தியற்றிய செய்யுளைக் கேட்டு.

     சிங்கமான் - சிங்கமாகிய விலங்கு; இருபெயரொட்டு. வெள்ளை
என்பதனைத் தூசு ஆரம் என்பவற்றோடும் ஒட்டுக. பாட்டுடைத்தலைவன்
வெண்மலர்மாலையும், வெள்ளாடையும், வெள்ளணியும் அணிந்து கேட்டல்
மரபாகலின் 'வெள்ளைக் கொங்கவிழ் தாமந் தூசு குளிர்மணி யாரந்தாங்கி'
என்றார். ஆக்கம் - ஆசி. (33)