பக்கம் எண் :

தலவிசேடப் படலம்157



வீசும்படி, பூத்த - மலர்ந்த, மரு ஆர் - மணம் நிறைந்த, பொற்கமலம்
நிகர் தீர்த்தமும் - பொற்றாமரையை நிகர்த்த ஒரு தீர்த்தமும், அத்
தீர்த்தத்தின் மருங்கில் - அந்தத் தீர்த்தத்தின் பக்கத்தில், ஞான உரு ஆகி
உறை - ஞான வடிவாய் எழுந்தருளியிருக்கின்ற, சோமசுந்தரன்போல் -
சோமசுந்தரக் கடவுளைப்போல, இகபரம் தந்து - (உயிர்களுக்கு) இம்மை
மறுமைப் பயன்களை அளித்து, உலவா வீடு தருவானும் - அழியாத
வீட்டுலகைத் தருகின்றவனும், முப் புவனத்திலும் இல்லை - மூன்றுல
கத்திலும் இல்லை; சாற்றின் - சொல்லுமிடத்து, இது உண்மை - இது
சத்தியம் எ - று.

     தெய்வமணம் - திப்பியய மணம். பொற்கமலம் - தீர்த்ததின்பெயர்;
பூத்த மருவார் என்னும் அடைகள் தாமரைக்கு. சோமசுந்தரன் - உமையுடன்
கூடிய அழகன்; பெயர். மன், ஓ : அசை. (2)

அவ்வகைய மூன்றின்முதற் றலப்பெருமை
     தனைச்சுருக்கி யறையக் கேண்மின்
எவ்வகைய வுலகத்துந் தருமதல
     மதிகமவற் றீறி லாத
சைவதல மதிகமவற் றறுபத்தெட்
     டதிகமவை தமிலீ ரெட்டுத்
தெய்வதல மதிகமவற் றதிகதல
     நான்கவற்றைச் செப்பக் கேண்மின்.

     (இ - ள்.) அவ்வகைய மூன்றில் - அத் தன்மையை யுடைய
மூன்றனுள், முதல் - முதற்கண், தலப்பெருமைதனை - தல விசேடத்தை,
சுருக்கி அறையக்கேண்மின் - சுருக்கிச் சொல்லக் கேளுங்கள்; எவ்வகைய
உலகத்தும் - எத்தன்மையுடைய உலகத்தினும், தரும தலம் அதிகம் -
புண்ணியத் தலங்கள் உயர்ந்தன; அவற்று - அப்புண்ணியத் தலங்களுள்,
ஈறு இலாத - அழிவில்லாத, சைவதலம் அதிகம் - சிவத் தலங்கள்
உயர்ந்தன; அவற்று - அப்பதிகளுள், அறுபத்தெட்டு அதிகம் - அறுபத்
தெட்டுத் தலங்உள் உயர்ந்தன; அவைதமில் - அவ்வறுபத்தெட்டனுள், ஈர்
எட்டுத் தெய்வதலம் அதிகம் - பதினாறு சிவத்தலங்கள் உயர்ந்தன;
அவற்று - அப்பதினாறனுள், நான்கு தலம் அதிகம் - நான்கு பதிகள்
உயர்ந்தன; அவற்றைச் செப்பக் கேண்மின் - அந்நான்கனையுஞ் சொல்லக்
கேளுங்கள் எ - று.

     தருமதலம் முதலியன வடசொற் றொடராகலின் ஒன்று மிகாவாயின.
அவற்றுள் என உருபு விரிக்க. நான்கு தலம் அதிகம் என மாற்றப்பட்டது.
(3)

அன்னமலி வயற்புலியூர் காசிநகர்
     காளத்தி யால வாயாம்
இன்னவளம் பதிநான்கிற் றிருவால
     வாயதிக மெவ்வா றென்னின்