பக்கம் எண் :

இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம் 157



அறிவுடைக் காட னுக்கு மருமைமாண் புலமை யோர்க்கும்
முறைமையா லாரந் தூசு முகிழ்முலைக் கொடியி னன்னார்
நிறைநிதி வேழம் பாய்மான் விளைநில நிரம்ப நல்கி
அறைகழற் காலிற் பின்னே ழடிநடந் திதனை வேண்டும்.

     (இ - ள்.) அறிவுடைக் காடனுக்கும் - அறிவுடைய இடைக்காடனுக்கும்
அருமைமாண் புலமையோர்க்கும் - கிடத்தற்கரிய மாட்சி மிக்க புலவர்கட்கும்,
முறைமையால் - வரிசைப்படி, ஆரம் தூசு முகிழ் முலைக் கொடியின்
அன்னார் - முத்தாரங்களையும் ஆடைகளையும் அரும்பு போன்ற
கொங்கையை யுடைய கொடி போன்ற ஏவன் மகளிரையும், நிறை நிதி
வேழம் பாய்மான் விளை நிலம் - நிறைந்த பொருளையும் யானைகளையும்
குதிரைகளையும் விளைநிலங்களையும், நிரம்ப நல்கி - நிரம்பக் கொடுத்து,
அறைகழல் காலில் ஏழ் அடி பின் நடந்து - ஒலிக்கின்ற வீரக்கழ
லணிந்தகாலினால் ஏழடி தூரம் அவர்கள் பின் நடந்து சென்று, இதனை
வேண்டும் இதனை வேண்டுவானாயினன்.

     அருமைமாண் - அருமை மிக்க என்றுமாம். "ஞாலத்தின் மாணப்
பெரிது, என்புழி 'மாண்' மிகுதிப்பொருட்டானமை காண்க. "பொதுநோக்
கொழிமதி புலவர் மாட்டு" என்பவாகலின் 'முறைமையால்' என்றார். ஏழடி
பின் சேறல் மரபு. பாடும் புலவனியல்பினையும், தலைவன் பாட்டினைக்
கேட்கு முறைமையினையும்,

"பாடுமுறை தொடர்செய்யுட் டெரிக்க வல்ல
     பாவலற்குக் குணங்குறிசீ ரொழுக்க மேன்மை
நீடழகார் சமயநூல் அறநூன் மற்று
     நிகழ்த்துநூ லிலக்கணநாற் கவியு ளானாய்
நாடுறுப்பிற் குறையிலனாய் நோயி லானாய்
     நாற்பொருளு முணர்ந்துகலை தெளிந்து முப்பான்
கூடுவய திழிந்தெழுபான் வயதி லேறாக்
     குறியுடைய னாயினவன் கவிதை கொள்ளே"

"கொள்ளுமிடம் விதானித்துத் தொடையி னாற்றிக்
     கொடிகதலி தோரணம்பா லிகைநீர்க் கும்பம்
துள்ளுபொறி விளக்கொளிர முரசி யம்பத்
     தோகையர்பல் லாண்டிசைப்ப மறையோர் வாழ்த்த
வெள்ளைமலர் துகில்புனைந்து தவிசின் மேவி
     வேறுமொரு தவிசிருத்திச் செய்யுட் கேட்டே
உள்ளமகிழ் பொன்புவிபூ ணாடை மற்று
     முதவியே ழடிபுலவ னுடன்போய் மீளே"

என்னும் பொருத்தப் பாட்டியற் செய்யுட்களா னறிக. (34)