பக்கம் எண் :

158திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



புண்ணியப் புலவீர் யானிப் போழ்திடைக் காட னார்க்குப்
பண்ணிய குற்ற மெல்லாம் பொறுக்கெனப் பரவித் தாழ்ந்தான்
நுண்ணிய கேள்வி யோரு மன்னநீ நுவன்ற சொல்லாந்
தண்ணிய வமுதா லெங்கள் கோபத்தீத் தணிந்த தென்னா.

     (இ - ள்.) புண்ணியப் புலவீர் - புண்ணிய வடிவாயுள்ள புலவர்களே,
யான் - அடியேன். இப்போழ்து இடைக்காடனார்க்கு - இப்பொழுது
இடைக்காடருக்கு, பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க என - செய்த
குற்றங்களனைத்தையும் பொறுக்கக்கடவீர் என்று, பரவித் தாழ்ந்தான் -
துதித்து வணங்கினான், நுண்ணிய கேள்வியோரும் - நுட்பமாகிய நூற்கேள்வி
வல்லோரும், மன்ன - மன்னனே, நீ நுவன்ற சொல்லாம் தண்ணிய அமுதால்
- நீ கூறிய சொல்லாகிய குளிர்ந்த அமிழ்தத்தால், எங்கள் கோபத்தீ
தணிந்தது என்னா - எங்கள் சினமாகிய நெருப்பு அவிந்தது என்று கூறி.

     பொழுது போழ்தென விகார மாயிற்று. பொறுக்கென, அகரந்தொக்கது.
அமுது - நீர் என்றுமாம். (35)

இன்னமு மாலவாயெம் மிறையவன் கருணை நோக்காற்
பன்னரும் புகழ்மை குன்றாப் பாக்கிய முனக்குண் டாக
என்னநல் லாக்கங் கூறி யேகினா ராக வந்தத்
தென்னவன் குலேசன் செய்த தவமுருத் திரிந்தா லென்ன.

     (இ - ள்.) இன்னமும் ஆலவாய் எம் இறையவன் கருணை நோக்கால்
- இன்னும் ஆலவாயிலுறையும் எம்மையனது அருட்பார்வையினால், பன்
அரும் புகழ்மை குன்றாப் பாக்கியம் - புகலுதற்கரிய புகழ் குன்றாத
பெருஞ்செல்வம், உனக்கு உண்டாக என்ன நல் ஆக்கம் கூறி ஏகினார் ஆக
- உனக்கு உண்டாகக்கடவது என்று நல்ல ஆக்க மொழி அறைந்து
அகன்றனராக; அந்தத் தென்னவன் குலேசன் செய்த தவம் - அந்தக் குலேச
பாண்டியன் செய்த தவமானது, உருத்திரிந்தால் என்ன - உருமாறி
வந்தாற்போல.

     புகழ்மை, மை பகுதிப் பொருள் விகுதி. கேள்வியோரும் ஆக்கங்கூறி
ஏகினார்; ஏகினபின்பு என விரித்துரைத்துக் கொள்க. (36)

எரிமருத் தவனி முன்னா மெண்வகை மூர்த்தி யன்பு
புரிமருத் துவனைச் சூழ்ந்த பொருபழி துடைத்தோன் சோதி
விரிமருத் துடல்வான் றிங்கண் மிலைந்தவ னருளின் வந்தான்
அரிமருத் தனனாந் தென்ன னடலரிக் குருளை யன்னான்.

     (இ - ள்.) எரி மருத்து அவனி முன்னாம் எண்வகை மூர்த்தி - தீயும்
காற்றும் நிலனுமுதலாகிய எண்வகை வடிவ முள்ளவனும், அன்பு புரி மருத்து
வனைச் சூழ்ந்த - அன்பினால் வழிபாடு செய்யும் இந்திரனைச் சூழ்ந்த,