பக்கம் எண் :

162திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



தணமான வேத மறைப்பொருள் உணர்த்தும் - இரகசியமான வேதத்தின்
உட்பொருளைக் கூறியருளுவானாயினன்.

     இறைவி உலகமெலாம் ஈன்றும் கன்னியாதலை,

"சிவஞ்சத்தி தன்னை யீன்றுஞ் சத்திதான் சிவத்தை யீன்றும்
உவந்திரு வரும்பு ணர்ந்திங் குலகுயி ரெல்லா மீன்றும்
பவன்பிர மசாரி யாகும் பான்மொழி கன்னி யாகும்
தவந்தரு ஞானத் தோர்க்கித் தன்மைதான் றெரியு மன்றே"

என்னும் சிவஞான சித்தியாரத் திருவிருத்தத்தாலறிக. மறை -
உபநிடதமுமாம். மாது, ஓ அசைகள். (2)

நாதனின் னருளாற் கூறு நான்மறைப் பொருளை யெல்லாம்
யாதுகா ரணத்தான் மன்னோ வறிகிலே மெம்பி ராட்டி
காதர மடைந்தாள் போலக் கவலையுஞ் சிறிது தோன்ற
ஆதர மிலளாய்க் கேட்டா ளஃதறிந் தமலச் சோதி.

     (இ - ள்.) நாதன் இன்அருளால் கூறும் - இறைவன் இனிய
திருவருளினாற் கூறுகின்ற, நான்மறைப்பொருளை எல்லாம் - நால்வேதப்
பொருள்களையெல்லாம், யாதுகாரணத்தாலோ அறிகிலேம் - என்ன
காரணத்தினாலோ யாம் அறியேம்; எம்பிராட்டி - எமது இறைவி, காதரம்
அடைந்தாள்போல - அச்சமுற்றவள் போல, கவலையும் சிறிது தோன்ற -
சிறிது வருத்தமும் வெளிப்பட, ஆதரம் இலளாய்க்கேட்டாள் -
விருப்பமில்லாதவளாய்க் கேட்டனள்; அமலசோதி அஃது அறிந்து -
நின்மலனாகிய இறைவன் அதனை உணர்ந்து.

     அங்ஙனம் ஆர்வமின்றிக் கேட்குமியல்பினளல்லளென்பார்
'யாதுகாரணத்தாலோ அறிகிலேம்' என்றார்; இறைவன் பரதவர் வேந்தனுக்கு
அருள்புரியுங் குறிப்பினனாதல் ஓர்ந்து அதற்கேற்ப இங்ஙனம்
கேட்டாளென்று கொள்க. மன், அசை. (3)

அராமுக மனைய வல்கு லணங்கினை நோக்கி யேனை
இராமுக மனைய வுள்ளத் தேழைமார் போல வெம்பாற்
பராமுகை யாகி வேதப் பயனொருப் படாது கேட்டாய்
குராமுகை யவிழ்ந்த கோதா யுற்றவிக் குற்றந் தன்னால்,

      (இ - ள்.) அராமுகம் அனைய அல்குல் அணங்கினை நோக்கி -
பாம்பின் படம் போன்ற அல்குலையுடைய பிராட்டியைப் பார்த்து, இராமுகம்
அனைய உள்ளத்து ஏனை ஏழைமார் போல - இருள்போன்ற
உள்ளத்தினையுடைய ஏனை மகளிர் போன்று, எம்பால் வேதப்பயன் -
எம்மிடத்து வேதப்பொருளை, பராமுகையாகி ஒருப்படாது கேட்டாய் -
பராமுக முடையையாகி மனம் ஒருவழிப்படாது கேட்டனை; குராமுகை
அவிழ்ந்த கோதாய் - குராவின் அரும்பு விரிந்த மலர்